2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் இன்னும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எட்ப்படவில்லை, பேச்சு வார்ததை நடந்துகொண்டிருப்பதை தொடர்ந்து இன்னும் ஒருசில தினங்களில் நல்ல செய்தி வரும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தேர்தல் பணிக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள் மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிக்கப்பட்டு, இடங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. “காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தரப்பில் அதிக இடங்கள் கோரப்படுவதாகவும், குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட இடங்களை அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், திமுக தரப்பு கடந்த முறையை விடக் குறைந்த அளவிலான இடங்களையே ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஒரு சில தினங்களில் காங்கிரஸ் தலைமைக்கும் திமுகவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என்றும், அதன் பின் முழுமையான பட்டியல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
”கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்துள்ளது. காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை மட்டும் தொடர்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும்.” என்று டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 தேர்தலைப் போலவே இந்த முறையும் மெகா கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயன்று வரும் நிலையில், இடங்களை விட்டுக் கொடுப்பதில் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, புதிய கட்சிகளின் வருகையும், திமுக அதிக இடங்களில் நேரடியாகப் போட்டியிட விரும்புவதும் இந்த இழுபறிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கேட்கும் இடங்களை திமுக ஒதுக்குமா? அல்லது ’25+1′ என்ற பழைய சூத்திரமே தொடருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
