தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை சிக்கல்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேர்தல் காலத்தில் கல்வி குறித்த விவாதங்கள் மிக முக்கியம் என வலியுறுத்தினார். “கல்வி குறித்து அரசியல் கட்சிகள் பேசாமல் வேறு விஷயங்களை முன்னிறுத்துவது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.

மேலும், இறையாண்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மக்களிடமே உள்ளன என்றும், மக்கள் தங்கள் வாக்கின் மூலம் கொள்கைகளைத் தேர்வு செய்து, பின்னர் அந்த அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த அவர், தொடக்கக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை கல்வி அமைப்பை தனியார்மயமாக்கும் நோக்கம் அதில் உள்ளதாக குற்றம்சாட்டினார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க முயற்சி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை ஆய்வு செய்தபோது, மாநில உரிமைகளை பாதுகாக்கும் குறைந்தபட்ச கொள்கைகள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்றும், பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை காக்க உதவும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.
”தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சி” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்
