மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமேயான மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மாநிலங்களவையில் திமுக நோட்டீஸ்.
மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமலும், தொகுதி மறுவரையறை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாமலும், அடுத்த தேர்தல் முதலே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையிலான ஒரு அரசியலமைப்புத் திருத்த மசோதாவை திமுக எம்பி வில்சன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதேபோன்று, மாநிலங்களின் சட்டமன்றங்கள், தேசிய தலைநகர் பிராந்தியமான டெல்லி, யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றிலும், இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமலும், தொகுதி மறுவரையறை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாமலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் இம்மசோதா வழிவகை செய்கிறது. இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானதல்ல; மாறாக, இது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

மேலும், தொகுதி மறுவரையறை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாமலேயே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்காக, இன்றைய அவையின் அலுவல்களை ஒத்திவைக்குமாறு கோரி, மாநிலங்களவை நடைமுறை விதிகளின் விதி எண் 267-இன் கீழ், மாநிலங்களவையின் தலைவருக்கு அறிவிக்கையையும் அளிக்கப்பட்டுள்ளது.
