மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழிசை ஆதரவாக தமிழக பாஜக முன்னாள் மாநில் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தில் NDAக்கு ஆதரவு அலை உருவாகி உள்ளது என அண்ணாமலை பேட்டியளித்துள்ளாா்.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜனை ஆதரித்து, தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் சூழலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) ஆதரவாக மக்கள் மத்தியில் ஒரு பெரிய அலை உருவாகி வருவதாகவும், குறிப்பாக தென் தமிழகப் பகுதிகள், கொங்கு மண்டலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், திமுக எதிர்ப்பு உணர்வு வெளிப்படையாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பெண்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளனர் என்றும், அதனை தடுத்ததாக குற்றம்சாட்டப்படும் காங்கிரஸ் மற்றும் திமுகக்கு எதிராக மக்கள் மனநிலை உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் திமுகவை மக்கள் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் வலுவாக உள்ளதாகவும், ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் முடிவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
மற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர்கள் யாரும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை மீண்டும் தொடர வேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்யவில்லை. பாஜக தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்பதையே அவர்கள் மையமாக வைத்து பேசுகின்றனர். திமுக ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து ஆதரவு கேட்பது எங்கும் இல்லை என்று அவர் விமர்சித்தார்.
மேலும், திமுக கூட்டணியில் ஒருமைப்பாடு இல்லை என்றும், ராகுல் காந்தி மற்றும் மு.க. ஸ்டாலின் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்யாதது குறிப்பிடத்தக்கது என்றும் கூறிய அவர், கோவிலுக்கு வெளியே உடைக்கப்படும் தேங்காய் போல திமுக கூட்டணி சிதறி உள்ளது என்று விமர்சித்தார்.
அதிமுக வெற்றி பெற்றால் அது பாஜகவின் ‘பினாமி ஆட்சி’ ஆக இருக்கும் என்ற குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை, “169 இடங்களில் போட்டியிடும் அதிமுக எப்படி பினாமி ஆட்சி ஆக முடியும்? 32 இடங்களில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. இது முற்றிலும் தேவையற்ற வதந்தி” என்று கூறினார். தமிழக மக்கள் திமுகக்கு எதிராகத் தீர்மானமாக வாக்களிக்க உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “இப்போது வெற்றி பெறுவது குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அமைச்சரவை பற்றிய விவாதம் இந்த கட்டத்தில் தேவையற்றது” என்று கூறினார். மேலும், “மே 4க்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்தவர் – நடிகர் சத்யராஜ் தாக்கு
