பணப் பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் எனும் அடிப்படையில் சோதனை நடத்தி ஒருவரை பிடித்த பறக்கும் படையினர், பின்னர் அது கட்சிப் பணிக்குரிய பணம் என்பதை அறிந்து, பிடிபட்ட வரை விடுவித்தனர்.


தேர்தல் விதிமுறைகளை மீறி பணப் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுக இளைஞரணி உறுப்பினராக கூறப்படும் பத்மநாபன் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின் போது, அவரிடம் ரூ.25,000 பணமும், சில நபர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த ஒரு வெள்ளைத் தாளும் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு இருந்த திமுக சார்பினர், இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்ததாக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை பத்மநாபன் மறுத்து, அந்தப் பணம் வாக்குச்சாவடி முகவர்களின் உணவு செலவிற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தையும் சூழ்நிலையையும் பரிசீலித்த பறக்கும் படையினர், பின்னர் அவரை விடுவித்தனர்.
