பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.
தமிழகத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த கொடூரம் தான். அரசியல் ரீதியாக பல்வேறு கண்டனங்களும் சர்ச்சைகளும் எழுந்தது. இந்த பாலியல் வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். கீழமை நீதிமன்றம் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
புழல் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு கடந்த 20 ஆம் தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் சிறைத்துறையினர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இந்நிலையில் ஞானசேகரனின் தாயார் கங்காதேவி தனது மகனை சிறை வார்டன் மற்றும் சிறைக்காவலர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, சென்னை அடையாற்றில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னா் செய்தியாளா்களை சந்தித்த கங்கா தேவி, “எனது மகன் ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார். கடந்த 20 ஆம் தேதி எனது மகன் ஞானசேகரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் என் மகன் ஞானசேகரன் மூச்சு பேச்சு இல்லாமல் சுயநினைவின்றி இருந்ததை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்தாகவும் பின்னர் என் மகன் கண் விழித்த உடன், சிறை ஜெயிலர் சாந்தகுமார் மற்றும் சிறை காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து சிறையில் விளக்குகளை அனைத்து விட்டு தன்னை கடுமையாக லத்தியால் அடித்து கொலை வெறிதாக்குதல் நடத்தியதாக என்னிடம் கூறினார்.
மேலும் சிறையில் வைத்து என் மகனை கொல்ல பார்ப்பதாகவும் அவரது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் சிறையில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு எனது மகனை கொடூரமாக தாக்கி உள்ளனர். என்ன காரணத்திற்காக தாக்கினார்கள் என்பது கூட தெரிவிக்கவில்லை. இதில் யாரோ பின்னணியில் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் இது போன்ற கொடூர தாக்குதல் என் மகன் மீது திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டுள்ளது. எனவே மனித உரிமைகள் ஆணையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளேன்.
நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சிறை அதிகாரிகளே கொலை வெறி தாக்குதல் நடத்தியது மனித உரிமைகள் மீறிய செயல். ஞானசேரனுக்கு ஏற்கனவே வலிப்பு இருந்து அதற்கான சிகிச்சை எடுத்துள்ளோம்” என்று கங்கா தேவி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலேயே ஞானசேகரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை எதற்காக சிறைத்துறையினர் தாக்கினார்கள்? காரணம் தெரிய வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. எதற்காக ஞானசேகரன் தாக்கப்பட்டார் என்பது குறித்து சிறைத்துறையினர் எந்த விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவி பாலியல் வழக்கில் ஐந்தே மாதத்தில் தீர்ப்பு! ஜூன் 2ல் தண்டனை விவரங்கள் அறிவிப்பு…
