2026 தமிழ்நாடு தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக வெற்றிக் கழகம் போலி கடிதங்களைப் பயன்படுத்தி ஆட்சி அமைக்க முயல்வதாகவும், குதிரை பேரம் நடத்துவதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக யார் பதவியேற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மாநில அரசியல் நொடிக்கு நொடி பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தற்போது கூட்டணி ஆதரவுகளுடன் 116 எம்.எல்.ஏக்களின் பலத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தவெக மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக வெளியான தகவலை அவர் முழுமையாக மறுத்துள்ளார்.
“காமராஜ் ஆதரவு அளித்ததாக கூறப்படும் அசல் கடிதம் எங்கே? ஏன் அதன் அசல் பிரதியை வெளியிடவில்லை?” என்று கேள்வி எழுப்பிய தினகரன், “எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ. உண்மையில் ஆதரவு அளித்திருந்தால், அவரை நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு அழைத்து செல்லாதது ஏன்?” என்றும் சந்தேகம் தெரிவித்தார்.
மேலும், “காமராஜ் காரில் அமர்ந்து கையெழுத்திடுவது போன்ற வீடியோவை யார் எடுத்தது? அது விஜய்யா, ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமாரா அல்லது செங்கோட்டையனா?” என கேள்வி எழுப்பிய அவர், அந்த வீடியோ ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டினார். தவெக மீது நேரடியாக தாக்குதல் நடத்திய தினகரன், “முதலமைச்சராக வேண்டுமென்ற ஆசைக்காக இத்தனை போர்ஜரி, 420 வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இன்னும் ஆட்சிக்கு வருவதற்குமே முன் இவ்வளவு திமிரும் அகம்பாவமும் காட்டுகிறார்கள்” என விமர்சித்தார்.
அத்துடன், “இந்த போலி கடித விவகாரம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். ஜனநாயகத்தில் ஆதரவு வேண்டுமெனில் தலைவர்களிடம் நேரில் கேட்க வேண்டும். போலி ஆவணங்கள் மூலம் ஆதரவை உருவாக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விஜய் சமர்ப்பித்துள்ள அனைத்து ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தினார்.
“விஜய் 108 இடங்களில் வென்றிருந்தால் எனக்கு என்ன? அவர் எனக்கு மாமனா, மச்சானா? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்?” என கடுமையாக பேசிய தினகரன், தங்களது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தவெகவினர் முயற்சி செய்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தரப்பின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
