தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் புதிய ரேஷன் அட்டைகளைத் தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து விநியோகிக்க உணவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படாமல் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளை அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்குமாறு உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக, உணவுத்துறை அமைச்சர் பி. வெங்கடரமணன், சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் ரேஷன் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணிகள் மந்தமாக இருந்த நிலையில், தற்போது அந்த பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இதன் மூலம் புதிய ரேஷன் அட்டைக்கான விண்ணப்பங்கள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல் அல்லது நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் இதர திருத்த பணிகளும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
மேலும், பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள “மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை” என்ற சேவையை பயன்படுத்தி, குறிப்பு எண்ணை பதிவு செய்வதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்கலாம். இந்த நடவடிக்கையின் மூலம் நீண்டநாளாக ரேஷன் அட்டைக்காக காத்திருந்த லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
