நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக சேவகருமான பொன் சிவக்குமார் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயுள்ளதாக கூறி, அவரை மீட்டு கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கீழ்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பொன் சிவக்குமார், “சிவகாமி எஸ்டேட்” என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக தேயிலை உற்பத்தி, கொய்மலர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். அவரது எஸ்டேட்டில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்விக்காக உதவித்தொகை வழங்குவது, கோவில் திருவிழாக்கள், விளையாட்டு போட்டிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக நிதியுதவி வழங்குவது போன்ற பல்வேறு சமூக சேவைகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் சமூக அக்கறை கொண்ட தொழிலதிபராக பொன் சிவக்குமார் அறியப்பட்டார். அரசியல் ரீதியாகவும் செயல்பட்ட அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து பின்னர் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருந்தார். இந்நிலையில், கோவையில் பண மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பொன் சிவக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், மூன்று மாதங்களுக்கு முன்பு அன்னூர் அருகே சிலர் அவரை கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், கடந்த மூன்று மாதங்களாக பொன் சிவக்குமாரை யாரும் பார்க்க முடியவில்லை என்றும், அவர் எஸ்டேட்டிற்கு திரும்பி வராததால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதுடன், பொதுமக்களுக்கு கிடைத்து வந்த நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவரது சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் யாரேனும் அவரை கடத்தி சென்று மிரட்டி வருகிறார்களா? அவர் உயிருடன் உள்ளாரா? தற்போது எங்கு இருக்கிறார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக அவரை கண்டுபிடிக்க வேண்டும் என கோரி எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர். கோத்தகிரியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக சேவகருமான பொன் சிவக்குமாரை கண்டுபிடிக்கக் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
