தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் நாளை நடைபெறவுள்ள தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை நேரில் சந்தித்து இக்கூட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினர். இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரவீன் சக்கரவர்த்தி, சுதா ராமகிருஷ்ணன், கிறிஸ்டோபர் திலக், கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் மற்றும் மாநிலப் பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, எம்.எஸ்.காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது, ”நாளை நடைபெறும் தவெக-வின் தோழமைக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு அமைச்சர்கள் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளோம். தவெக நிர்வாகிகள் எங்களை நேரில் தேடி வந்து இந்த அழைப்பைக் கொடுத்துள்ளனர். அவர்களுடன் பரஸ்பர நம்பிக்கையோடும், மரியாதையோடும் நீண்ட நேரம் தொகுதி நிலவரங்கள் குறித்து உரையாடினோம்.
கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்துவிடும். ஆனால், தோழமை என்பது தேர்தலுக்குப் பின்பும் பரஸ்பர மரியாதையோடு தொடரும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழக முதல்வர் விஜய்க்கும் இடையே இருக்கும் நட்பு மிகவும் முக்கியமானது. அவர்களின் ஒத்த கருத்து மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தோழமை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர வேண்டும், காங்கிரஸுக்கான மரியாதை கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்; நாங்கள் அமைச்சராக வேண்டும் என்பது நோக்கமல்ல. 1967 வரை காங்கிரஸ் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. மொழி மற்றும் அரிசிப் பிரச்சினையால் தான் காங்கிரஸ் அப்போது தோற்றதே தவிர, ஊழலால் அல்ல. ஆனால், அதற்குப் பின்வந்த 50 ஆண்டுகால அரசியல் ஊழலை மையப்படுத்தியே இருந்தது. தற்போது ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தூய்மையான அரசியலை நோக்கி நகர்கிறோம்.”
ஆர்.எஸ்.பாரதி மற்றும் வைகோ குறித்த விமர்சனம்
திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜனவரி மாதம் உள்ளாட்சித் தேர்தல் வரும்போது, அந்த ‘அரைமிசை’ பாரதியிடம் பார்த்துக் கொள்வோம்” என்று விமர்சித்தார். மேலும், திமுக குறித்து வைகோ அண்மையில் வைத்த விமர்சனத்தை காங்கிரஸ் வரவேற்பதாகக் கூறிய மாணிக்கம் தாகூர், “வைகோ தியாகங்கள் செய்த மூத்த தலைவர். அவர் என்றுமே மத்திய அமைச்சர் பதவியை விரும்பியதில்லை. சதிகளால் தோற்கடிக்கப்பட்ட வடுக்களோடு இருக்கும் அவருக்கு, தற்போது தவெக முன்னெடுக்கும் தூய்மையான அரசியல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
இந்தியா கூட்டணியில் தவெக-விற்கு இடமா?
இந்தியா கூட்டணியில் தவெக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு, “2023-இல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகளைத்தான் டெல்லியில் போராடுவதற்காக இந்தியா கூட்டணியில் இணைத்து வருகிறோம். தமிழகத்தில் இருப்பதற்கு தோழமைக் கட்சிகள் உள்ளன. அதற்கான கூட்டம் தான் நாளை நடைபெறுகிறது. விஜய்யின் அரசியல் வித்தியாசமானது; அதில் இந்தத் தோழமைக் கூடல் முக்கியமானதாக இருக்கும்” என்று விளக்கமளித்தார்.
அதிமுக, திமுக-வை வறுத்தெடுத்த தாகூர்
அதிமுக மற்றும் திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, “அவர்கள் இன்னமும் பழைய சிலபஸையே வைத்துக் கொண்டு பேசுகிறார்கள். அரசியல் சிலபஸ் இப்போது மாறிவிட்டது. புதிய சிலபஸைப் படித்து வந்தால் மட்டுமே அவர்களால் பாஸ் செய்ய முடியும், இல்லையென்றால் தோல்விதான்” என்று சாடினார். மேலும், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதன்முதலில் காங்கிரஸிடம் தான் ஆதரவு கேட்டார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக-விற்கு ஆதரவளித்தோம். எடப்பாடி பழனிசாமி மூலமாக முன்வாசல் வழியாகவும், மற்றொருவர் மூலமாகப் பின்வாசல் வழியாகவும் தமிழகத்திற்குள் நுழையப் பார்த்த பாஜக-வின் முயற்சியை நாங்கள் முறியடித்துவிட்டோம்” என்று மாணிக்கம் தாகூர் அதிரடியாகத் தெரிவித்தார்.
பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..
