நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்.
நோயாளிகளைக் குணப்படுத்தவும், உயிரைக் காப்பாற்றவும் தன்னலமற்ற முறையில் உழைக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, ”நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றவும், அவர்களைக் குணப்படுத்தவும் தன்னலமற்ற முறையில் அயராது உழைக்கும் மருத்துவர்களின் மகத்தான தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இரவு – பகல் என்று பாராமல் சமூக நலனுக்காக மகத்தான பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதற்கு நமது மருத்துவர்களின் தொண்டுள்ளமும், அர்ப்பணிப்பு உணர்வும், சேவையுமே முக்கிய காரணமாகும். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகள் என்றென்றும் போற்றுதலுக்குரியதாகும்.
அதேவேளையில், தமிழக மருத்துவர்கள் கடுமையான பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களுக்கு உரிய ஊதியம் மற்றும் இதர சலுகைகளைக் கேட்டு அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்படப் பல்வேறு ஜனநாயக இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தபோதிலும், இந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
எனவே, தமிழகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் மருத்துவர்களின் நியாயமான ஊதியப் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகப் பரிசீலித்து, அவற்றை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு பெ. சண்முகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ரேஷன் கார்டுக்கு கேஸ் சான்று கட்டாயம்! நிபந்தனையை தளர்த்த ஜவாஹிருல்லா வேண்டுகோள்..
