இந்தூரில் சமோசா வாங்குவதற்காக சிக்னலை மீறி ரயில் நிறுத்தப்பட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு ரத்லாம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு ரயில்வே கிராசிங் அருகே பயணிகள் ரயில் ஒன்று திடீரென நின்றது. அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய உதவி லோகோ பைலட் (துணை ஓட்டுநர்), தண்டவாளத்திற்கு அருகில் இருந்த கடைக்குச் சென்று சமோசாக்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ரயிலில் ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. “சமோசா வாங்குவதற்காக ரயிலையே நிறுத்திவிட்டார்கள்” என்ற விமர்சனங்களுடன் இந்த வீடியோ வைரலானது.
ரயில்வே நிர்வாகத்தின் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக ரத்லாம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. “சமோசா வாங்குவதற்காக ரயில் நிறுத்தப்படவில்லை. அந்த இடத்தில் சிக்னல் (Signal) கிடைப்பதற்காகவே ரயில் வழக்கம்போல நிறுத்தப்பட்டது. ரயில் நின்றிருந்த அந்த இடைப்பட்ட நேரத்தில், உதவி லோகோ பைலட் கீழே இறங்கிச் சென்று சமோசா வாங்கியுள்ளார்.” சிக்னல் விழுந்ததால் மட்டுமே ரயில் நிறுத்தப்பட்டதே தவிர, தின்பண்டங்கள் வாங்குவதற்காக ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நேரத்தை ஓட்டுநர்கள் அடகு வைக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், ரயில் நின்றிருந்தாலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது விதிமுறை மீறலா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

