சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்ளவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நள்ளிரவில் மக்கள் வீதிக்கு வந்த அவலம்:
திருவொற்றியூர் தியாகராயபுரம், தாங்கல், ராஜா கடை, காலடிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எந்த நேரத்தில் மின்சாரம் தடைபடும் என்றே தெரியாத அவல நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தியாகராயபுரம் மற்றும் தாங்கல் பகுதிகளில் மாலை 6 மணிக்குத் துண்டிக்கப்பட்ட மின்சாரம், நள்ளிரவு 12 மணி வரை வரவில்லை. இதனால் கொளுத்தும் வெக்கையிலும், கொசுக்கடியிலும் தூங்க முடியாமல் அவதிப்பட்ட முதியவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகளுடன் பொதுமக்கள் எண்ணூர் கடற்கரைச் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திச் சமரசம் செய்தனர்.

முறையிட்டால் மிரட்டும் அதிகாரிகள்:
மின்வாரிய அதிகாரிகள் மீது பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். “மின்தடை ஏற்படும் போது மின்வாரிய ஊழியர்களோ, பொறியாளர்களோ எங்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்பதே இல்லை. நேரில் சென்று முறையிட்டால், அங்குள்ள பெண் பொறியாளர் எங்களை மிரட்டுவதோடு, போலீசாரைக் கொண்டு பொய் புகார் அளிப்பதாக அச்சுறுத்துகிறார். அவசரத்திற்கு யாரிடம் பேசுவது என்றே தெரியவில்லை” எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
முகமே தெரியாத எம்.எல்.ஏ.. மக்கள் குமுறல்:
இப்பகுதி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சட்டமன்ற உறுப்பினர் குறித்துப் பொதுமக்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
”எங்கள் தொகுதி எம்.எல்.ஏ யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை; அவர் முகத்தைக் கூட நாங்கள் பார்த்ததில்லை. இத்தனை பெரிய மின்வெட்டுப் பிரச்சினை நீடித்தும், அவர் ஒருமுறை கூட நேரில் வந்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆரம்பமே இப்படி இருந்தால் போகப்போக என்ன ஆகும்? 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகையைக் கொடுத்துவிட்டு, இப்படித் தொடர் மின்வெட்டுச் செய்வதால் என்ன பயன்?” என்று அப்பகுதி மூதாட்டி ஒருவர் குமுறினார்.
முற்றுகைப் போராட்ட எச்சரிக்கை:
இரவு முழுவதும் மின்தடை நீடிப்பதால் காலையில் அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமலும், வியாபாரம் செய்ய முடியாமலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மின்வெட்டுப் பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காணாவிட்டால், அடுத்தகட்டமாக முதலமைச்சர் விஜய் அலுவலகத்தையும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் தங்களது குடும்பத்தினருடன் முற்றுகையிட்டுப் பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
