Homeசெய்திகள்மாவட்டம்ஈரோட்டில் சுவாரஸ்யம்: கடையில் புகுந்த திருடனை "மாற்றுப் பூட்டு" போட்டு சிறைபிடித்த கடைக்காரர்கள்! – எஸ்பி...

ஈரோட்டில் சுவாரஸ்யம்: கடையில் புகுந்த திருடனை “மாற்றுப் பூட்டு” போட்டு சிறைபிடித்த கடைக்காரர்கள்! – எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பு

-

- Advertisement -

ஈரோட்டில் அரசு வணிக வளாகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபரை, சமயோசிதமாகச் செயல்பட்ட அருகில் இருந்த கடைக்காரர்கள் வெளிப்புறமாக மற்றொரு பூட்டுப் போட்டு உள்ளேயே சிறைபிடித்தனர். காவல்துறையினர் வந்து கதவைத் திறந்தபோது, உள்ளே இருந்த நபர் கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கினார்.
ஈரோட்டில்

ஈரோடு நகரின் மிக முக்கியப் பகுதியான பன்னீர்செல்வம் பூங்காவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றின் அருகிலேயே தமிழ்நாடு அரசின் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் வணிக வளாகக் கட்டிடம் உள்ளது. இங்கு மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான கடை இயங்கி வருகிறது.

we-r-hiring

​சமயோசிதத்தால் சிக்கிய திருடன்:
​இன்று காலை வழக்கம்போல் கடைக்கு வந்த பக்கத்து கடை உரிமையாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழு கடையின் உள்ளே மர்ம நபர் ஒருவன் உலவிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது, கடையின் கண்ணாடி கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

​மர்ம நபர் திருடுவதற்காக உள்ளே நுழைந்திருப்பதை உணர்ந்த கடைக்காரர்கள் சற்றும் பதற்றமடையாமல், உடனடியாக ஒரு சங்கிலியைக் கொண்டு வந்து, வெளிப்புறக் கதவில் மாற்றுப் பூட்டுப் போட்டு அந்த நபரை உள்ளேயே பூட்டிச் சிறைவைத்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக ஈரோடு நகர காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

போதையில் படுத்து உறங்கிய “நண்டு”:
​தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டைத் திறந்து உள்ளே சிக்கியிருந்த நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவரது பெயர் சரவணன் (என்ற) நண்டு என்பது தெரியவந்தது.
​நேற்றிரவு போதை தலைக்கேறிய நிலையில் சரவணனும் அவனது நண்பர்கள் இருவரும் சேர்ந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

திருடுவதை மறந்து, போதை மயக்கத்தில் மூவரும் கடையின் உள்ளேயே படுத்து உறங்கியுள்ளனர். விடிந்ததும் மற்ற இருவர் தப்பியோடிய நிலையில், காலையில் தாமதமாக எழுந்த சரவணன் வெளியே செல்ல முடியாமல் கடைக்குள்ளேயே உலாத்தியபோது தான் கடைக்காரர்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.

​போலீசார் சோதனை:
கடைக்குள் வேறு யாரேனும் மறைந்திருக்கிறார்களா என்று போலீசார் உள்ளே இருந்த அறைகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வேறு யாரும் சிக்கவில்லை.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற மிக முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மிகப்பாதுகாப்பான பகுதியிலேயே, அரசு கடை ஒன்றின் பூட்டை உடைத்து திருடன் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ