முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான ‘லுக் அவுட்’ நோட்டீஸ் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. “விசாரணைக்கு நேரில் ஆஜராகும் ஒருவரை ஏன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்?” என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முந்தைய ஆட்சிக்காலத்தில் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாக, ‘அறப்போர் இயக்கம்’ அளித்த புகாரின் அடிப்படையில், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) எ.வ.வேலு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அவரது இல்லம் உட்பட 14 இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. இதனிடையே, சிகிச்சைக்காக எ.வ.வேலு சிங்கப்பூர் சென்ற நிலையில், அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், லுக் அவுட் நோட்டீஸை நிறுத்தி வைக்கவும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்
நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், எ.வ.வேலு தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும் ஆஜராகினர்.
தமிழக அரசு வாதம்
”வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மனுவில், சென்னை உயர் நீதிமன்றம் இதுபோன்ற முழுமையான தடையை (Blanket Embargo) வழங்கக் கூடாது. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடப்பது தெரிந்தவுடனேயே அவர் வெளிநாடு சென்றுவிட்டார். இன்று விசாரணைக்கு ஆஜரானவர், நாளையே மீண்டும் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, லுக் அவுட் நோட்டீஸ் மீதான தடையை நீக்க வேண்டும்” என்று சிங்வி வாதிட்டார்.
குறுக்கிட்ட நீதிபதிகள்
தமிழக அரசின் வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர், ”சிகிச்சைக்கு வெளிநாடு போவதாகச் சொல்லிவிட்டுத்தான் அவர் சென்றிருக்கிறார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போதே சென்னை திரும்பி, விசாரணைக்கும் ஆஜராகிவிட்டார்.” ”விசாரணைக்கு ஒத்துழைத்து நேரில் வந்த நபரை, ஏன் இன்னும் ‘தேடப்படும் குற்றவாளி’ என லுக் அவுட் நோட்டீஸில் வைத்திருக்க வேண்டும் என அரசு பிடிவாதம் பிடிக்கிறது?” ”அவரிடம் விசாரணை நடத்த யாருமே தடை விதிக்கவில்லையே, லஞ்ச ஒழிப்புத் துறை தாராளமாக அவரிடம் கேள்விகளை கேட்டு விசாரிக்க வேண்டியதுதானே?”
பாஸ்போர்ட் கோரிக்கையும் நிராகரிப்பு
இதனைத் தொடர்ந்து, “அப்படியானால் எ.வ.வேலு தனது பாஸ்போர்ட்டையாவது ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என அபிஷேக் மனு சிங்வி கோரினார். அதற்கும் மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், “எதற்காக அவர் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்? அப்படி ஒரு தேவை இருந்தால், நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி தனியாக மனுத் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுக் கொள்ளுங்கள். இரண்டையும் போட்டு குழப்ப வேண்டாம். இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
”ஆட்சி மாறினால் இதுதான் நடக்கும்” – வழக்கறிஞர்கள் வாதம்
விசாரணையின் போது எ.வ.வேலு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாறிய அடுத்த நிமிடம் முதல் பழிவாங்கும் நோக்கில் எஃப்.ஐ.ஆர்கள் பதியப்படுகின்றன” என்றார். அதற்குச் சிரித்தபடியே பதிலளித்த நீதிபதி சந்தீப் மேத்தா, “ஏன் இவ்வளவு பீல் செய்கிறீர்கள்? உங்கள் ஆட்சிக் காலத்திலும் இதையேதானே செய்து கொண்டிருந்தீர்கள்? இப்போது உங்களுக்கே அது திரும்ப வந்துள்ளது. ஒரு அரசியல்வாதி என்றால் இதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். தவறு செய்யாதபோது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள். கைது செய்ய நினைத்தால் ஜாமீனுக்கு முறையீடு செய்யுங்கள், அதைவிடுத்துப் புலம்ப வேண்டாம்” என்று அரசியல்வாதிகளின் பழிவாங்கும் போக்கு குறித்து பொதுவான இலவச ஆலோசனையையும் வழங்கினார். இறுதியாக, தமிழக அரசு தரப்பில் மீண்டும் வாதாட முற்பட்டபோது, “எல்லாவற்றையும் கேட்டுவிட்டோம், வழக்கை முடித்துவிட்டோம்” எனக் கூறி நீதிபதிகள் விசாரணையை நிறைவு செய்தனர். இந்த தீர்ப்பு தற்போதைய விஜய் அரசுக்கு சட்ட ரீதியாக பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
