ஆவடி புதிய ராணுவ சாலையில் நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுவரும் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்தும், கடைகளை இடிக்கும் பணியை உடனே நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமண்ட் ராஜா தலைமையில் வணிகர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னணி என்ன?
ஆவடி ரயில்வே மேம்பாலம் மற்றும் புதிய ராணுவ சாலையை அகலப்படுத்தும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் கட்டுமானப் பணிகளால் அப்பகுதியிலுள்ள கடைகள் அனைத்தும் சாலைமட்டத்தை விட தாழ்வான நிலைக்குச் சென்றுள்ளன. மேலும், காமராஜர் நகர் சந்திப்பு முதல் ஆவடி அரசு மருத்துவமனை வரை சாலையின் இருபுறமும் 25 அடி தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும், இதனால் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட உள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

அதிகாரிகளிடம் மனு அளிப்பு
தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து உரிய விளக்கம் கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமண்ட் ராஜா தலைமையில் திரளான வணிகர்கள் பேரணியாகச் சென்று திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளரைச் சந்தித்து முறையிட்டு மனு அளித்தனர்.
திடீர் சாலை மறியல் மற்றும் போலீஸ் பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து, நேரில் சென்று கால்வாய் பணிகளைப் பார்வையிட்ட டைமண்ட் ராஜா மற்றும் வணிகர்கள் திடீரென ஆவடி புதிய ராணுவ சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் ஆவடி புதிய ராணுவ சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்துபோகச் செய்தனர்.

நாளை கடை அடைப்புப் போராட்டம் – எச்சரிக்கை!
மறியல் போராட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தலைவர் டைமண்ட் ராஜா கூறியதாவது, “ஆக்கிரமிப்பு அகற்றுவது என்ற பெயரில் வணிகர்களை வஞ்சிக்கும் நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வணிகர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது நடந்துவரும் தன்னிச்சையான பணிகளை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், நாளை ஆவடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் முழு கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்தார். இச்சம்பவத்தால் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
