வீட்டை ஏலமிட்ட ஆத்திரத்தில் மோசடி செய்ததாகப் புகார் – சேரன்மகாதேவியில் பரபரப்பு!
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சொத்துகள் தொடர்பாக போலி அரசு ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மதிமுக ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் என்ற குட்டி பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் சொத்துகள் உள்ளன.
அவற்றை நிர்வகிப்பதற்காக சேரன்மகாதேவியில் நெல்சேர் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்மாவதி (55) கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி காலை சேரன்மகாதேவியைச் சேர்ந்த மதிமுக ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் என்ற குட்டிபாண்டியன் (55), நெல்சேர் அலுவலகத்திற்கு வந்து அலுவலக உதவியாளர் கணேசனிடம் மனு ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் பணிக்கு வந்த கண்காணிப்பாளர் பத்மாவதி அந்த மனுவைப் பரிசீலித்தபோது அதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு தனது மகளுக்குச் சொந்தமான தங்க நகைகளை கோவில் நெல்சேர் நிர்வாகம் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டுடன் போலி அரசு ஆவணம் ஒன்றையும் அவர் இணைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியனின் தந்தை கணபதி கோவிலுக்குச் செலுத்த வேண்டிய குத்தகைத் தொகையைச் செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவின்படி அவரது வீடு ஏலமிடப்பட்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கோவில் நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், தனது மகளின் தங்க நகைகள் கோவில் பெட்டகத்தில் இருப்பதாகக் கூறி, கோவிலின் அதிகாரப்பூர்வ அரசு முத்திரை மற்றும் கண்காணிப்பாளர் பத்மாவதியின் கையொப்பம் ஆகியவற்றைப் போலியாகத் தயாரித்து ஆவணம் உருவாக்கியதாக பாலசுப்பிரமணியன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, மோசடி செய்தல், அரசு முத்திரையைப் போலியாகத் தயாரித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனைக் கைது செய்தனர்.
கோவில் சொத்து தொடர்பான விவகாரத்தில் போலி ஆவணம் தயாரித்ததாக அரசியல் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேரன்மகாதேவி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்விகள்… 97 ஆர்டிஐ மனுக்கள் தாக்கல் செய்த இளைஞருக்கு ஓராண்டு தடை!
