திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணுடன் பழகி, அவரிடம் அவ்வப்போது பணம் பெற்று ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹஷத்பாஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவர், ஹஷத்பாஷா மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ஹஷத்பாஷா தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அவ்வப்போது தன்னிடம் பணம் பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்ய மறுத்து மிரட்டல் விடுத்ததாகப் புகார்
இந்நிலையில், தற்போது தன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என ஹஷத்பாஷா மறுப்பதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஹஷத்பாஷா மீது ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக நிர்வாகி ஹஷத்பாஷா தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
