Homeசெய்திகள்சட்டம்ஜாமீன் வழங்கக்கூடிய குற்றங்களில் ஜாமீன் மறுக்க முடியாது: காவல்துறைக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஜாமீன் வழங்கக்கூடிய குற்றங்களில் ஜாமீன் மறுக்க முடியாது: காவல்துறைக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

-

- Advertisement -

ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்களில் காவல்துறையினரும், மாஜிஸ்திரேட்களும், அமர்வு நீதிபதிகளும் ஜாமீன் வழங்க மறுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்க்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டு, 25 நாட்களாகச் சிறையில் இருந்த நபருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பதிவு – 25 நாட்களுக்குப் பிறகு ஜாமீன்

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பி. ராஜகோபால் என்பவர், கடந்த ஜூன் 12-ஆம் தேதி எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி ராஜகோபால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகியவை, விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகக் கூறி அவரது மூன்று ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தன.

கீழமை நீதிமன்றங்களின் உத்தரவுகள் செல்லாது – உயர் நீதிமன்றம்

இதையடுத்து ராஜகோபால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் விசாரித்தார்.

அப்போது, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு சட்டப் பிரிவுகளுமே ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்கள் என்று நீதிபதி தெரிவித்தார். ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களுக்குப் பொருந்தக்கூடிய காரணங்களைக் கூறி, ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்களில் ஜாமீனை மறுக்கக் கீழமை நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த வழக்கில் கீழமை நீதிமன்றங்கள் ஜாமீன் மறுத்துப் பிறப்பித்த மூன்று உத்தரவுகளும் சட்டப்படி செல்லாது என நீதிபதி தெரிவித்தார்.

ஜாமீன் பெறும் உரிமையைத் தெரிவிக்க வேண்டும்

ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றத்திற்காக ஒருவரைப் பிடியாணையின்றிக் கைது செய்யும்போது, அவருக்கு ஜாமீன் பெறும் உரிமை உள்ளது என்பதை காவல்துறையினர் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ராஜகோபாலை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஜாமீன் வழங்கக்கூடிய குற்றங்களில் காவல்துறையினர், மாஜிஸ்திரேட்கள் மற்றும் அமர்வு நீதிபதிகள் ஜாமீன் மறுக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்த உத்தரவின் நகலைத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதித்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் முழுமையாக வெளியிடாத அறநிலையத்துறை – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

MUST READ