பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இன்னும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எல். விக்டோரியா கௌரி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழு-II சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியும், பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழுவின் தலைவருமான எல். விக்டோரியா கௌரி, நீதிபதிகள் ஆர். பூர்ணிமா, அனிதா சுமந்த், எஸ். ஸ்ரீமதி, ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி விக்டோரியா கௌரி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் எந்த அளவுக்குப் பரவலாக உள்ளன என்பதை எடுத்துரைத்தார். சாதாரண கிராமப்புறப் பணியாளர்கள் முதல் உயர் பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை யாரும் இதுபோன்ற துன்புறுத்தல்களில் இருந்து விதிவிலக்கல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு உதாரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர் பத்மபிரியாவுக்கு, பதவியில் இருக்கும் ஓர் எம்.எல்.ஏ. ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குறிப்பிட்டார். இதுவும் பணியிடத்தில் நடைபெறும் ஒருவகையான பாலியல் துன்புறுத்தல்தான் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கணவர் காவல்துறையில் புகார் அளித்தும், இதுவரை மாநிலக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் பணியாற்றுவதை உறுதி செய்வது அவசியம் என்றும், இதற்காகப் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
