திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான்! மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
திமுகவினர் குடும்பம் குடும்பமாக அரசியல் நடத்தி வருவது உண்மைதான் என பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

போபாலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “முகவுக்கு வாக்களித்தால் வாரிசுகளுக்கே பலன். திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள். காங்கிரஸ்க்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்ததல்ல. நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்கும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக குடும்ப அரசியல் நடத்துவதாக பிரதமர் மோடி செல்கிறார். ஆமாம் உண்மைதான். திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான். தமிழ்நாடும், தமிழர்களும் கருணாநிதியின் குடும்பம் தான். திமுகவினர் குடும்பம் குடும்பமாக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றிருக்கிறோம்.

ஜனநாயகத்தை காப்பதற்காக இந்த நாட்டின் மதச்சார்பின்மை எனும் ஆன்மாவை காப்பதற்காக, சமூக நீதி எனும் உயர் தத்துவத்தைக் காப்பதற்காக தீரர்கள் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகச் சமர் புரிந்து 2014-ல் பிரிவினைவாத பாஜகவை நிச்சயம் வீழ்த்தியே தீரும். பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தைக் கண்டு பிரதமர் நரேந்திரமோடி அஞ்சியுள்ளார். குடும்ப அரசியல் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது திமுகவுக்கு பொருத்தமானது தான். திமுக என்பது குடும்பம் தான், கட்சியினரை தம்பி என அழைத்தவர் அண்ணா” எனக் கூறினார்.


