அரசியல் பேசினால் என்ன தவறு? – கீர்த்தி பாண்டியன் கேள்வி
- Advertisement -
அரசியல் பேசுவதில் என்ன தவறு உள்ளது என நடிகை கீர்த்தி பாண்டியன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 80-களில் தொடங்கி இன்று வரை கலக்கிக் கொண்டிருக்கும் அருண் பாண்டியனின் மகளும், நடிகையும் ஆவார் கீர்த்தி பாண்டியன். தும்பா படத்தின் மூலம் அவர் நாயகியாக திரைக்கு அறிமுகமாகினார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து, அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். இது மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு அவர் புதிதாக படம் நடிக்காமல் இருந்தார். இதனிடையே தான் அசோக் செல்வனுடன் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்ணணி வேலைகள் நடைபெற்று வந்தன. அப்போது தான் கீர்த்தி பாண்டியனுக்கும், அசோக் செல்வனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனிடையே, இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி என்ற திரைப்படம் வெளியானது. அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்கினார். தற்போது அசோக் செல்வன், சாந்தனு, மற்றும் கீர்த்தி நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி பாண்டியன், அரசியல் பேசினால் என்ன தவறு உள்ளது. நாம் சாப்பிடும் உணவு, உடை என அனைத்திலுமே இன்று அரசியல் உள்ளது. நம் வாழ்விலும் அரசியல் நிறைந்து உள்ளது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்வில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது என கூறினார்.