பராசக்தி படத்திலிருந்து ‘ரத்னமாலா’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து, படத்தின் டப்பிங் போன்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் இசையிலும், ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ‘அடி அலையே’ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதைத்தொடர்ந்து இப்படத்திலிருந்து ‘ரத்னமாலா’ எனும் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. ‘அடி அலையே’ பாடலில் சிவகார்த்திகேயன் – ஶ்ரீலீலாவின் கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க் அவுட் ஆனதோ, அதேபோன்று இந்த பாடலிலும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

எனவே படம் முழுவதும் இவர்களின் காட்சிகள் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார் என்பதும் ஜெயஸ்ரீ மதிமாறன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


