Homeசெய்திகள்தேர்தல் 2026”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

-

- Advertisement -

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின் சின்னமாக மாறிவிட்டது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளாா்.”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல். சுந்தர்ராஜுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விம்கோ நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது,

we-r-hiring

பேச்சின் தொடக்கத்தில், நாடாளுமன்றத்தில் தொகுதி இடஒதுக்கீடு மறு வரைவுத் திட்ட மசோதா தோற்கடிக்கப்பட்டதை குறிப்பிட்டு, அந்த வெற்றிச் செய்தியுடன் திருவொற்றியூருக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். இதேபோல், இந்தத் தொகுதியிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக பாஜக, அதிமுக, பாமக, ஜி.கே. வாசன், டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும், இது ஒரு “மிரட்டல் கூட்டணி” எனவும் விமர்சித்தார். இந்த கூட்டணி சிபிஐ மூலம் உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தங்கள் கூட்டணி ஜனநாயக மற்றும் சமூக நீதி அடிப்படையில் அமைந்தது என்றார்.

அதிமுக குறித்து கடுமையாக விமர்சித்த திருமாவளவன், “இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல; அது பாஜக சின்னமாக மாறிவிட்டது. அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது. இரட்டை இலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கே செல்கிறது” என கூறினார். மேலும், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திய அதிமுக அல்ல இது, தற்போது பாஜக கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக என அவர் குற்றம்சாட்டினார்.

பாமக தலைவர் அன்புமணி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அரசியல் வாய்ப்புக்காகவே கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், கொள்கை சார்ந்த ஒருமைப்பாடு இல்லாத கூட்டணியாக இதை அவர் விமர்சித்தார். இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே அடிப்படை கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாட்டையும் அவர் விமர்சித்தார். “விஜய் எந்த பக்கம் நிற்கிறார் என்பது தெளிவில்லை. பாஜகவை எதிரி என கூறினாலும், அதனை நேரடியாக விமர்சிக்கவில்லை. திமுகவையே எதிர்த்து பேசுகிறார்” என கூறினார். மேலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் அவர் இரு தொகுதிகளில் போட்டியிடுவது அவருக்கே நம்பிக்கை இல்லாததைக் காட்டுகிறது என விமர்சித்தார்.

தமிழக அரசியலில் சினிமா தாக்கம் குறித்து பேசுகையில், மற்ற மாநிலங்களைப் போல அரசியல் மற்றும் சினிமா தனித்தனியாக இருக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமே சினிமா அரசியலில் அதிகமாக கலந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த திருமாவளவன், அந்தக் கட்சி தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது, மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலை பரப்புகிறது என குற்றம்சாட்டினார். தமிழகத்தில் அந்தக் கட்சி வலுப்பெறுவது ஆபத்தானது என்றும் எச்சரித்தார்.

இறுதியாக, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், மார்க்சிஸ்ட் வேட்பாளர் எல். சுந்தர்ராஜை “அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்” சின்னத்தில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

MUST READ