மே 4 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் தவெக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் விஜய் சந்திக்கிறார். சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 234 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் அடுத்த அரசியல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகிறார்.

தேர்தல் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின்னர், மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணம் ஜோதிடர் ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, வரும் 30 ஆம் தேதி சென்னை நகரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை நாளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில், கூட்டணி இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது தமிழக வெற்றி கழகம். இதனால் தேர்தல் களத்தில் வாக்குகள் பல்வேறு கட்சிகளுக்கிடையே பிரிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. குறிப்பாக விஜய்யின் அரசியல் வருகை இந்த முறை தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பேசப்படுகிறது.
மேலும், தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் மீது பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னணியில், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய நிலைமை சீராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய், தனது முதல் தேர்தலிலேயே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அவரது அரசியல் பயணம் மற்றும் இந்த தேர்தலில் ஏற்பட்ட வாக்கு பங்கீடு, இறுதியில் யாருக்கு சாதகமாக அமையும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
