Homeசெய்திகள்கட்டுரைஅம்பேத்கர் எஸ்சி டிராக் பெரியார் பி.சி டிராக்! தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை! திருமா நெகிழ்ச்சி!

அம்பேத்கர் எஸ்சி டிராக் பெரியார் பி.சி டிராக்! தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை! திருமா நெகிழ்ச்சி!

-

- Advertisement -

தமிழ்நாட்டு அரசியலில் அம்பேத்கரையும், பெரியாரையும் ஒன்றாக இணைத்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலை சிறுத்தைகள் என்கிற ஒரு கட்சியை தொடங்க வேண்டும் என்பது எனது நோக்கமாக இல்லை. தேர்தல் அரசியலில் ஈடுபட்டு எம்.பி. ஆகவோ, எம்.எல்.ஏ ஆகவோ வேண்டும் என்பது எனது நோக்கமாக இல்லை. நான் 13 வயதில் 8ஆம் வகுப்பு முடித்தவுடன் குடும்பத்தை விட்டு வெளியேறியவன். 9ஆம் வகுப்பு முதல் விடுதி மாணவராக பள்ளி படிப்பை முடித்தேன். பின்னர் கல்லூரி படிப்புக்காக சென்னைக்கு வந்தேன். 1979ல் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சென்னையிலேயே தங்கி பட்ட படிப்பு முடித்து, முதுகலை படிப்பு முடித்து பின்னர் சட்டப்படிப்பை முடித்து இங்கேயே இருந்ததால் எனக்கு கிராமத்து சூழல்களோ, சாதிய சிக்கல்களோ எனக்கு பெரியதாக தெரியாது. மதுரையில் போய் ஒரு அரசு ஊழியராக பணியில் சேர்ந்தபோது நான் சந்தித்த பிரச்சினைகள் என்னை வெகுவாக பாதித்தது. பாதிக்கப்பட்ட மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் என்னை தேடி வந்தார்கள். நள்ளிரவு நேரங்களில் கதவை தட்டுவார்கள். ரத்தக் காயங்களோடு, தலையில் கட்டுகளோடு வருபவர்களை, அந்த நேரத்தில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்வது உண்டு. அப்படிபட்ட அந்த மக்களுக்காக ஏதேனும் பேச வேண்டும் என்கிற உந்துதலில் பொதுவாழ்விலே ஈடுபட்ட எனக்கு, ஏற்கனவே இருந்த அரசியல் புரிதல் இவர்களுக்காக போராட வேண்டிய வைராக்கியத்தை கொடுத்தது. பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்பதற்கான வேறு எந்த நோக்கமும் எனக்கு இருந்ததில்லை. தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கனவிலும் நினைத்து இல்லை.

 

சென்னையில் நான் கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், ஈழத் தமிழர்களுக்கான போராட்டங்கள் என்கிற களங்களில் கிடைத்த அனுபவம், பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கான உந்துதலை கொடுத்தது.  மிகக் கடுமையான நெருக்கடிகள் என்னை சுற்றி உருவானபோது சில நண்பர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள். நான் கோவையில் பணியாற்றியபோது ஒரு முதியவர் என்னிடம், உங்கள் மேடை பேச்சுகளை கேட்டிருக்கிறேன். மதுரையில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி பேரணியாக நடத்தியது வரலாற்றில் இதுதான் முதல் முறை. உங்கள் தலைமையில்தான் அது நடைபெற்றுள்ளது என்றார். இப்படிபட்ட நிகழ்வுகள் தென் மாவட்டங்களில் தலித் என்ற அடையாளத்தோடு, அம்பேத்கர் பெயரை சொல்லி வீதிகளில் வீருநடை போடுகிற அணிவகுப்பை பார்த்து இல்லை என்று சொன்னார். மேலும் கட்சியின் பெயர் ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும். அதனால் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆலோசனை சொன்னார்.  அப்போது நான் சொன்னேன், நான் தேர்தல் களத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கவில்லை. துணிந்து போராடக்கூடிய இளைஞர்களுக்காக மட்டும்தான் இந்த இயக்கத்தை நான் உருவாக்கியுள்ளேன். ஒரு மாவட்டத்திற்கு 10 பேர் அரசியல் மயப்படுத்தப்பட்டால் போதும் என்கிற எண்ணத்தில் தான் விடுதலை சிறுத்தைகள் என்று வைத்துள்ளேன் என்கிறேன். அப்போது விடுதலைப்புலிகள் என்றால் தீவிராவாதிகள் என்கிற பார்வை உள்ளது என்றார். அப்படி பார்க்க வேண்டும் என்பதற்காகதான் இந்த பெயரை வைத்தேன் என்று பதில் அளித்தேன். நீங்கள் அரசு ஊழியர், உங்கள் உண்மை பெயரே திருமாவளவன் தானா என்று கேட்டார். ஆம் என் தந்தை வைத்த பெயர்தான் சொன்னேன். அவர் சொன்ன மற்றொரு ஆலோசனை என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது. இல்லாவிட்டால் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றார். ஆனால் அவர் சொன்ன  2 ஆலோசனைகளையும் அப்போதே மறுத்துவிட்டேன்.

அதற்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிகாரிகளால் கவனிக்கப்படுகிற, பொது நீரோட்டத்தில் பேசப்படுகிற இயக்கமாக மாறியது. அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து அன்றைய முதலமைச்சர் கலைஞர் கலந்தாய்வு கூட்டம் நடத்தியபோது, அந்த கூட்டத்திலும் நான் பங்கேற்க வேண்டும் என்கிற நெருக்கடியை காலம் தந்தது. அன்றைக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த உயர் அதிகாரி, உளவுத்துறை அதிகாரி மூலம் தொடர்பு கொண்டு சென்னைக்கு வரவழைத்து நள்ளிரவு ஒரு மணி வரை அவரது இல்லத்தில் அமரவைத்து நிறைய அறிவுரைகளை வழங்கினார். நீங்கள் காவல் துறைக்கு தொடர்புடைய தடய அறிவியல் துறையில் பணிபுரிவதால் இயக்கத்தின் பெயரை மாற்றிவிட்டு ஒரு சமுதாய சங்கமாக  இயங்கலாம். அல்லது வேலையை விட்டு விட்டு பொது வாழ்க்கைக்கு போகலாம் என்று சொன்னார். மறுநாள் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற போதும் நான் அரசு ஊழியர்தான். அப்போது இந்த இயக்கத்தின் பெயர் விடுதலை சிறுத்தைகள் தான்.

அதன் பிறகு ஏடிஜிபி என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று என்னிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது நீங்கள் காவல்துறைக்கு தொடர்புடையவர் என்கிற உணர்வோடு சொல்கிறேன் கட்சியின் பெயரை மாற்றுங்கள். அந்த பெயரை கேட்டால் வெருப்பாகவும், அச்சமாகவும் உள்ளது என்றார். இவற்றை ஏற்க வேண்டும் என்றுதானே இந்த பெயரையே வைத்துள்ளேன் என்று நான் நினைத்துக் கொண்டேன். இது அம்பேத்கர், பெரியார் அரசியலை பேசுகிற ஒரு அமைப்புதான். யாரையும் அச்சுறுத்தக்கூடிய அமைப்பு அல்ல. காலங்காலமாக பல்வேறு புறக்கணிப்புகளும், அவமானங்களும், இழிவுகளும் சுமத்தப்படுகிற ஒரு சமுதாயத்திற்கு ஒரு எழுச்சி உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. அந்த எழுச்சி ஊட்டக்ககூடிய ஒரு பெயர் தேவைப்பட்டது. அதனால் இதனை தொடர்ந்து கடைபிடிப்பேன் என்று சொன்னேன்.

பின்னர் 1997 -1998 காலகட்டத்தில் ஏராளமான தோழர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை படுத்தப்பட்டார்கள். அந்த நேரத்தில் விழுப்புரத்தில் கூடிய மாநில செயற்குழுவில் ஒரு விரிவான விவாதத்திற்கு பின் பரிணாம மாற்றம் ஏற்படக்கூடிய தீர்மானத்தை நான் முன்மொழிந்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி இனி தேர்தல் அரசியலில் பங்கேற்கும் என்கிற முடிவை எடுத்தது. ஆனால் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சொன்னேன். 1990-களில் மதுரையில் விவேகானந்தா காலனி என்கிற இடத்தில் நானும், தோழர் பாண்டியராஜனும் தங்கியிருந்தோம். அப்போது ஓய்வுநேரத்தில் ஒரு தாளை எடுத்து விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் பெயரை எழுதியதோடு, அதன் கொடியையும் வடிவமைத்தேன். அந்த கொடியை வடிவமைக்கிறபோது 5 முனைகளை கொண்ட நட்சத்திரம் போட்டேன். அதை கொடி சொல்லும் கொள்கை விளக்கம் என்று துண்டறிக்கை வெளியிட்டேன். மேலே சரிபாதி நீலம், கீழே சரிபாதி சிவப்பு. அது உழைக்கும் மக்களை குறிக்கும், இது புரட்சிகர பாதையை குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் உழைக்கும் மக்களை விடிய வைக்கும் விடிவெள்ளியாகும்.

புரட்சியாளர் அம்பேத்கரோடு, முதன் முதலாக பெரியாரை இணைத்து துண்டறிக்கை வெளியிட்ட இயக்கம், சுவரொட்டி ஒட்டிய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் ஆகும். அதுவரை தமிழ்நாட்டில் அம்பேத்கரிய இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள் தனி தனி பாதையில் சென்று கொண்டிருந்தன. இது எஸ்.சி. டிராக், இது பி.சி டிராக் என்று சென்று கொண்டிருந்தது. இரண்டும் ஒரே ரயில் பாதைதான். 2 தண்டவாளங்களாக இருக்க வேண்டிய பாதை. தனித்தனியாக போய் கொண்டிருந்தது. அதையும் ஒரே டிராக்காக மாற்றியது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். இதனை நான் முன்னெடுத்தபோது எனக்கு யாரும் ஆலோசனை சொல்லவில்லை. நான் முன்மொழிந்தபோது எனக்கு எதிர்ப்பு வந்தது. தலித் இயக்க தலைவர்கள் எல்லாம் நான் ஒரு பி.சி தலைவரை உயர்த்தி பிடிப்பதாக சொன்னார்கள். ஏன் பெரியார் படத்தை போடுகிறீர்கள் என்று நேரடியாக கேட்டவர்களே உண்டு, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ