செங்கோட்டையன் கலகம் செய்வதன் பின்னணியில் அமித்ஷா இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் தேவர் ஜெயந்திக்கு ஒன்றாக மரியாதை செலுத்தியுள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- டிடிவி தினகரன், ஓபிஎஸ் இணைவது புதிது அல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இவர்கள் இருவரும் இணைந்து போட்டியிட்டனர். தற்போது கொங்கு மண்டலத்தில் இருந்து அண்ணாமலைக்கு பதிலாக செங்கோட்டையன் வந்திருக்கிறார். செங்கோட்டையனுக்கு 4 சட்டமன்றத் தொகுதிகளில் 10 சதவீதம் வாக்குகள் தான் இருக்கும். அவருடைய செல்வாக்கு அவ்வளவுதான். அவருடைய கலகத்திற்கு பின்னால் இருப்பது அமித்ஷா தான். செங்கோட்டையன், ஜெயலலிதா – எம்ஜிஆர் படம் வைக்கவில்லை என்று முதன்முறையாக கலகம் செய்தபோது, அவரை அழைத்து பேசியவர் நிர்மலா சீதாராமன். அதன் பிறகு அமித்ஷாவிடம் அழைத்துச்சென்றார்.
செங்கோட்டையன் இரண்டாவது முறையாக கலகம் செய்து, எடப்பாடிக்கு காலக்கெடு விதித்தார். அப்போது அவருடைய கட்சி பதவிகளை எல்லாம் பறித்துவிட்டார். அதற்கு பிறகு டெல்லிக்கு சென்று அமித்ஷா, மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்துவிட்டு வந்தார். அப்போது செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்காமல் இருந்ததற்கு காரணம் அமித்ஷா.

அதேநேரத்தில் ஓபிஎஸ், சசிகலா அதிமுகவுக்குள் வருவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது. ஓபிஎஸ் தரப்பில் பொருளாளர் பதவி கேட்கப்பட்ட நிலையில், எடப்பாடி ஆலோசகர் பதவி வழங்குவதாக தெரிவித்தார். கீழ்நிலையில் உள்ள பொறுப்பை தருவதால் ஓபிஎஸ் மறுத்துவிட்டார். அதேபோல், சசிகலா கட்சியில் இணைய கேட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்தநிலையில் 3 பேரும் சேர்ந்து வருகிறார்கள் என்றால் அமித்ஷாவின் செயலாக தான் இருக்கும். அதிமுக கூட்டணி மாறுகிற எண்ணத்தில் உள்ளது. அவர்கள் எதிர்பார்ப்பது விஜய். உதயகுமார், ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை வைத்து பேசுகிறார்.
ஆனால் விஜய், அதிகளவு இடங்களை கேட்கிறார். தானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார். விஜயின் எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதை அதிமுகவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையை கேள்வி எழுப்பும் வகையில் ஒரு வேள்வி தொடங்கியுள்ளது. இந்த அளவுக்கு பேசும் அளவுக்கு தினகரனுக்கு முதுகெலும்பு கிடையாது. காரணம் தினகரன் மீது லண்டன் ஓட்டல் வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு உள்ளது. அப்படி இருக்கும்போது தினகரன், எடப்பாடியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்வது, பாஜகவின் குரலாகும்.

எடப்பாடி கட்டுப்பாட்டில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருவது பாஜகவுக்கு அச்சுறுத்தலை தருகிறது. மேலும் அவர் விஜயுடன் கூட்டணி போய்விட வாய்ப்பு இருப்பதாகவும் நினைக்கிறார்கள். எடப்பாடியின் மகன் மிதுன், விஜயுடன் நன்றாக பேசி வருகிறார். விஜய், கேட்கிற இடங்களை வாங்கி கொள்வார். விஜய்க்கு பாஜக தான் பிரச்சினை. அதிமுக பிரச்சினை கிடையாது. எடப்பாடி, விஜய் கூட்டணிக்கு சென்றுவிட்டால் அவரை கட்டுப்படுத்த முடியாது. எனவே அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்க வேண்டும் என்பதும் பாஜகவின் அஜெண்டா ஆகும்.
அந்த இடத்திற்கு வருவதற்கு செங்கோட்டையன் போன்று நிறைய பேர் முயற்சித்து வருகிறார்கள். எடப்பாடி இடத்திற்கு வருவதற்கு ஒரு குழு முயற்சித்து வருகிறது. அப்படியான நபர்கள் அதிமுக தலைமைக்கு வந்த பின் ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களை சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவை ஏற்படுத்துவார்கள். பின்னர் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு செல்வது திட்டமாகும். ஆனால் எடப்பாடி நேரடியாக விஜயுடன் கூட்டணிக்கு செல்கிறேன் என்று முயற்சிக்கிறார். இந்த மோதலுக்கு நடுவில்தான் செங்கோட்டையனை பூஸ்ட் செய்து, தேவர் ஜெயந்திக்கு சென்றுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என்பது அமித்ஷாவின் திட்டம். இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் இருப்பது அமித்ஷா தான். அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி இதை எப்படியாவது பேலன்ஸ் செய்து கொண்டு போய்விட வேண்டும் என்று பார்க்கிறார். தவெக செயற்குழு கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி போகக் கூடாது என்று தான் பேசியுள்ளனர். அப்படி சென்றால் அவர்களுடைய அரசியலே காலியாகிவிடும். அதன் காரணமாகவே நிர்மல்குமார் நாங்கள் எந்த கட்சியுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்று சொல்கிறார். அதேநேரத்தில் கரூர் வழக்கில் விஜயை மடக்கு கூட்டணிக்கு கொண்டு வருவார்கள் என்று அதிமுக நினைக்கிறது. தவெகவில் பொருளாளரை தூக்கிவிட்டனர். அதேபோல், பொதுச்செயலாளர் ஆனந்துக்கு முக்கியத்துவத்தை குறைத்துவிட்டனர். எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நெருக்கமான 3 பேரை செயற்குழுவில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா, அதிமுக, பாஜக கூட்டணி வர வேண்டும் என்று முயற்சிக்கிறார். இந்த கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் பெரிய அளவில் எடுபடும் என்று நினைக்கிறார். ஆனால் விஜய், ராகுல்காந்தி மூலமாக புதுச்சேரி, கேரளா தேர்தலை முன்னிறுத்தி காங்கிரஸ் திமுக கூடடணியில் இருந்து விலகி தங்களுடன் சேர வேண்டும் என்று சொல்கிறார். கே.சி.வேணுகோபால், சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, ராஜேஸ்குமார் போன்றவர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் ராகுல்காந்தி ஒருபோதும் தமிழ்நாட்டில் திமுகவை விட்டுத்தர மாட்டார். இதுதான் தற்போது நடைபெறுகிற விஷயமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


