ஒன்றுபட்ட அதிமுகவால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்கிற முடிவுக்கு பாஜக தலைமை வந்து விட்டதாகவும், அந்த அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடேவே பாஜக விரும்புவதாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை மாற்றம் மற்றும் அண்ணாமலை பதவி பறிப்பு தொடர்பாக வெளிவரும் தகவல்களுக்கு விளக்கம் அளித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது :- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலில் டெல்லி சென்றார். அவரை தொடர்ந்து செங்கோட்டையனும் டெல்லி சென்றிருக்கிறார். அதற்கு காரணம் கேட்டால், எடப்பாடி தெரியவில்லை என்கிறார். அமித்ஷா உடன் சந்திப்பு நடைபெற போகிறது போதுகூட நான் யாரையும் சந்திக்க டெல்லி வரவில்லை என்று சொன்ன எடப்பாடியிடம், அதை தாண்டி உண்மைகளை தற்போது எதிர்பார்க்க முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டோம் என்றும் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது. ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக மறுத்திருக்க வேண்டாம் என்று நான் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் நடக்கிற சில பிரச்சினைகளை, உள்துறை அமைச்சரிடம் சொல்வதற்காக வந்துள்ளேன் என் சொல்லி இருந்தால் கவுரவமாக இருந்திருக்கும். அமித்ஷா உடனான எடப்பாடியின் சந்திப்பை நிர்பந்திக்கப்பட்ட சந்திதப்பாகவே நான் பார்க்கிறேன். இது நான் எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். ஏனென்றால் பாஜகவை எதிர்த்துக் கொண்டு எடப்பாடியால் அரசியல் செய்ய முடியாது. இதற்கான வெளிப்படையான 2 காரணங்கள் உள்ளன. ஒன்று அதிமுக இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரணையில் உள்ளது. மற்றொரு எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எதையும் செய்ய துணிகிற, சகல பலத்தோடு அதிகாரத்தோடு இருக்கிற பாஜக எங்கு வந்து நிற்கும் என்று எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். இல்லாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல. 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று அமித்ஷாவை பார்த்து விட்டு வருவாரா? எடப்பாடி பழனிசாமிக்கு சங்கடங்கள் வரும்போது எல்லாம் ஓடோடி வந்து வீடியோ வெளியிடுகிற ஆர்.பி.உதயகுமார், தமிழ்நாட்டின் இரும்பு மனிதர், இந்தியாவின் இரும்பு மனிதரை போய் பார்த்தார் என்று புகழ்கிறார். படுத்தால் ஒரே அடியாக படுத்துவிடுகிறார்கள். எழுந்துவிட்டால் ஒரே அடியாக நின்று கத்துகிறார்கள். அதை தமிழ்நாட்டு மக்கள் நம்பவும் மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலின்போது குறுகிய கால இடைவெளி இருந்தால், இஸ்லாமியர்கள் எடப்பாடியை நம்பவில்லை. அதன் பிறகு சில நிகழ்ச்சிகளில் பேசுகிறபோது எடப்பாடி என்னை நம்புங்க.., பாஜகவை விட்டு வந்துவிட்டேன் என்று சொன்னபோது, நம்பி போகலாமா? என்று இஸ்லாமியர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக சென்று பார்த்தேன் என்று அவர் சொல்ல. அமித்ஷாவை இந்தளவுக்கு வானளாவ புகழ்கிறார்கள் என்றால் ஏதே இருக்கிறது? என்று அரசியல் புரியாதவர்கள் கூட புரிந்துகொண்டார்கள்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி,பாஜக கூட்டணியில் இருந்து விலகி வந்து இவ்வளவு நாளாக கூறிவந்தார். அதே கால கட்டத்தில் மற்றொரு சம்பவமும் நடைபெற்றது. எடப்பாடி தலைமையிலான அதிமுக உடன் கூட்டணி அமைந்தால், நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக கூட்டத்தில் அண்ணாமலை சொன்னார். அதோடு நிற்காமல், பாஜக தலைமையில் அணி அமைத்தால் கணிசமான இடங்களை வெல்லலாம் என்று தேசிய தலைமை நம்பவைத்தார். அதனை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டதால்தான், இவரது கருத்தை கண்டு கொள்ளாமல் விட்டனர். ஆனாலும் தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவுக்கு கிடைத்த தரவுகள் எல்லாம் தேசிய அளவில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காது என்று தெரியவந்தது. தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக கோவையில் ஒரு சாமியாரை வைத்து எடப்பாடியிடம் கூட்டணிக்கு தூதுவிட்டார்கள். காலம் கலந்துவிட்டது. அப்போது முடிவை மாற்றி இருந்தால், எடப்பாடிக்கு இருந்த மரியாதை போயிருக்கும். ஆனால் உறுதியாக இருந்தார். அப்படி இருந்தபோதும் பாஜகவை பெரிய அளவில் எடப்பாடி எதிர்க்கவில்லை. விமர்சிக்க வேண்டிய இடங்களில் கூட பெரிதாக விமர்சிக்கவில்லை.
இந்த சோதனைகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடைபெற்றன. இதில் மிகப் பெரிய சிக்கல்கள் உள்ளதாக சொல்கிறார்கள். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இரட்டை இலை வழக்கை அவர்கள் கையில் கொண்டு சென்று வைத்துக்கொண்டதும் ஒரு காரணம். இதற்கு மேலும் தம்மால் தனித்து இயங்க முடியாது என்கிற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார் என்றுதான் நான் பார்க்கிறேன். விரும்பி அவர் பாஜகவுடன் சேர வேண்டும் என்று எடப்பாடி நினைப்பதாக நான் பார்க்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் எந்த பெரிய கட்சிக்கும் லாபம் கிடையாது. அது திமுக ஆனாலும் சரி, அதிமுக ஆனாலும் சரி.
தமிழ்நாட்டிற்கு எதிராக தவறுகள், துரோகங்கள் நடக்கிறபோது எல்லாம் அதனை நியாயப்படுத்துகிற பாஜக இங்கே இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டில் அந்த கட்சி வளரவே வளராது. அவர்களோடு இணைபவர்களும் அதனால் பெரிய பலனை அடைய மாட்டார்கள். குறைந்தபட்சம் சட்டமன்ற தேர்தலில் இதை மிக நிச்சயமாக சொல்ல முடியும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் என்பது வேறு. மோடியா? ராகுலா? என கேட்க முடியாத அளவுக்கு எதிர் அணி பலவீனமாக இருந்த நேரத்தில், அதிமுக – பாஜக கூட்டணி இருந்தால் குறைந்தபட்சம் 10 முதல் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பார்கள். இதை தான் அமித்ஷா அன்றைக்கு சுட்டிக்காட்டியுள்ளார். நீங்கள் அன்றைக்கே கூட்டணிக்கு வந்திருக்கலாம் என்று. அவர் வலியுறுத்திய மற்றொரு விஷயம் ஒன்றுபட்ட அதிமுக. ஏனென்றால் எடப்பாடி தலைமையிலான அதிமுகவால் வெற்றியை ஈட்டித்தர முடியவில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது. அவர்களாலும் வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் தலைமையிலான அணியில் உள்ளவர்களுக்கும் வெற்றியை ஈட்டித்தர முடியவில்லை என்கிற தேர்தல் அனுபவம் உள்ளது. ஒன்றுபட்ட அதிமுக வேண்டும். அதோடு நாம் கூட்டணி வைக்க வேண்டும். அந்த அணிதான், பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த முடியும் என்கிற புள்ளிக்கு பாஜக வந்துவிட்டது. அதனால்தான் இந்த அழைப்புகள் வந்துள்ளன.
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் அந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த முடிவு எடுப்பதால் என்ன விளைவுகள் வரும் என்று எனக்கு தெரியும். வழக்குகள் வரும். அதை நான் சந்திக்க தயார். நீங்களும் தயாராக இருங்கள் என்று முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் சொன்னார். அந்த வார்த்தைகளை எடப்பாடி சொன்னபோது, உண்மையாகவே ஒரு தலைவர் சொல்ல வேண்டிய வார்த்தை என்றுதான் நான் பார்த்தேன். ஆனால் அந்த வார்த்தை ஒரு வசம்பு போன்றது தான் என்று இன்றைக்கு நிரூபணமாகிவிட்டது. அந்த துணிச்சல் நீண்ட காலத்திற்கு அவரிடம் நீடித்து இருக்க முடியவில்லை. வழக்கினுடைய வீரியம் அந்த அளவுக்கு போயிருக்கலாம். நமக்கு தெரியாது பாஜக இந்த ஜென்மத்தில் அதை கண்ணில் காட்ட மாட்டார்கள். திரைக்கு பின்னால் வைத்திருந்தே அவர்களை கூட்டி வரவழைத்து இதெல்லாம் நடக்கிறது. நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் இதெல்லாம் நடக்கும் என்று மிரட்டலுக்குதான் பயன்படுத்துவார்கள். அந்த துணிச்சல் கலந்த வார்த்தைகள் எடப்பாடியிடம் நீண்ட காலம் நீடிக்கவில்லை என்பதுதான் இந்த டெல்லி பயணம் உணர்த்துகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.