அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் கட்சி விதிகளின் படி செல்லுமா? என்பது சந்தேகம் என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸ் அறிவித்த பொதுக்குழுவுக்கு போட்டியாக அன்புமணி பொதுக்குழுவை நடத்தியுள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், அனைவருடைய நலன் மற்றும் கட்சியின் நலனுக்காக ராமதாஸ் மற்றும் அன்புமணியுடன் தனித்தனியாக பேச விரும்புவதாக சொன்னார். இந்த விவகாரத்தில் நீதிபதி வரம்பு மீறிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. எந்தவிதமான சட்ட நிவாரணமும் கிடைக்கா விட்டால்தான் ஒருவர் ரிட் மனுவை தாக்கல் செய்ய முடியும். ஆனால் ஒரு கட்சியின் உரிமையியல் சார்ந்த பிரச்சினையில் தீர்வு என்பது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தான் இருக்கிறது. இல்லாவிட்டால் உயர்நீதிமன்றத்தின், ஒரிஜினில் சிவில் நீதிமன்றத்தில் வரலாம். இந்த மனுவை ரிட் மனுவாக தாக்கல் செய்தது தவறாகும்.
இந்த மனுவை எப்படி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்கள் என்பதே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துவிட்டனர். மனுதாரர் ஒருவர். எதிர்மனுதாரர் அன்புணி. அதற்கு பிறகு வரிசையாக அரசு அதிகாரிகள் வருகிறார்கள். இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களே தவறாகும். அப்படி இருந்த போதும் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் நீதிபதி சொன்னபடி, 5 நிமிடங்களில் இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. ஒரு கட்சி சார்ந்த சமரச முயற்சிகளில் நீபதிகள் ஈடுபடக் கூடாது. நீதிமன்றம் சமரசத்திற்கான இடம் கிடையாது. கட்சியின் சட்ட திட்டங்கள் என்ன சொல்கிறதோ, அதன்படி செய்ய வேண்டிய ஒரு இடமாகும். இந்த வழக்கில் நீதிபதி என்ன முடிவு வேண்டும் என்றாலும் எடுக்கலாம். ஆனால் அரசியல் கட்சி விவகாரத்தில் இப்படி ஒரு முடிவை எடுக்கும்போது, நாளைக்கு மற்ற கட்சிகளில் பிரச்சினை ஏற்படும்போது இதை சுட்டிக்காட்டுவார்கள்.
இந்த வழக்கில் மற்றொரு விஷயம், மருத்துவர் ராமதாஸ் மனுதாரரே கிடையாது. இதில் மனுதாரர் யார் என்றால் பாமகவின் பொதுச்செயலாளர் தரப்பு ஆகும். அவர் பேசலாம். எதிர்மனுதாரராக உள்ளவர் அன்புமணி. அவரும் பேசலாம். ஆனால் இதைவிடுத்து அன்புமணி, ராமதாசை பொதுநலனுக்காக பார்க்க வேண்டும் என்றால், அது நீதிபதியின் வேலை கிடையாது. இந்த விவகாரத்தில் பொதுநலன் என்பது கட்சியின் நலன்தான். நீதிபதிக்கு கட்சியை தாண்டி வாக்காளர்கள் குறித்தோ, அவர்களின் நலன் குறித்தோ சிந்தனை கிடையாது. இந்த முடிவை ஏன் எடுத்தார் என்று தெரியவில்லை. பின்னர் நடந்த சேம்பர் விசாரணைக்கு அன்புமணி வந்துவிட்டார். ராமதாசால் போக முடியவில்லை. அப்போது கட்சியினர் மத்தியில் ராமதாஸ் குறித்து என்ன எண்ணம் ஏற்படும்? 87 வயதான ராமதாசுக்கு உடல்சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. அவரால் உடனடியாக கிளம்பி வர முடியாத சூழலில் வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராகினார். இது சரிவரவில்லை என்கிறபோது, தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் ரிட் மனுவை விசாரிக்கிறார். அப்போது முதலில் செய்திருக்க வேண்டிய வேலையை நீதிபதி தாமதமாக செய்திருக்கிறார். இந்த வழக்கை காலையிலேயே முடித்துவிட்டிருந்தால், ராமதாஸ் தரப்பில் சிட்டி சிவில் நீதிமன்றத்திலாவது வழக்கு தொடர்ந்திருப்பார்கள்.
இன்றைய சூழலில் பாமகவில் நடைபெறும் அனைத்து விவகாரங்களும் நீதிமன்றத்திற்கு மீண்டும் செல்லும். மருத்துவர் ராமதாஸ், சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு நிவாரணம் தேடி செல்வார். பாமக தலைவராக அன்புமணிக்கு ஒரு வருட காலம் நீட்டிப்பு வழங்க கட்சியின் சட்ட விதிகளில் இடம் உள்ளதா? என்பது தெரியவில்லை. அப்போது தீர்மானம் செல்லாதது ஆகிவிட்டால், பொதுக்குழுவும் செல்லாமல் போய்விடும். ஆனால் இது நீண்ட சட்டப் போராட்டமாக மாறும். பாமகவில் இருக்கும் மனப்பிளவும், பிரிவும் இன்னும் அதிகரிக்கு என்றுதான் தோன்றுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது. அதிமுக கட்சி தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள உரிமையியல் ஒரிஜினல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் வரும் திங்கட்கிழமை முதல் மருத்துவர் ராமதாஸ் சட்டப் போராட்டத்தை தொடரலாம். பாமகவில் இரண்டு விதமான தொண்டர்கள் இருக்கின்றனர். முதலாவது அன்புமணி, அவரால் உருவாக்கப்பட்ட நிர்வாகிகள். அவர்களுக்கு கீழ் இருக்கும் தொண்டர்கள். அவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பார்கள். ராமதாஸ் மற்றும் அவருடன் இருக்கும் மூத்த நிர்வாகிகள், வன்னியர் சங்கத்தினர் இதை வரவேற்க மாட்டார்கள். பாமக தன்னுடைய உண்மையான பலத்தை ஏற்கனவே இழந்துவிட்டது. இன்னும் பலம் இழக்கும்.
அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாமகவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதா? என்பதில் சந்தேகம் இருக்கிறது. இந்த விவகாரம் நீதிமன்ற முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும். எனவே பாமகவில் நிலவும் பிரச்சினை பொதுக்குழு தீர்மானத்துடன் முடிவு பெறவில்லை. பாமகவில் இரு அணிகள் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால் அன்புமணி தரப்பு, அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகவே உள்ளது என்பது தெரிகிறது. பின்னாட்களில் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வரும்போது நாங்கள் பொதுக்குழுவுக்கு ராமதாசுக்கு அழைப்பு விடுத்து, இருக்கை ஒதுக்கப்பட்டது. அவர்தான் எங்களை புறக்கணித்தார் என்று வாதம் வைக்க வாய்ப்புகள் உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தான் இது. நாளைக்கு மருத்துவர் ராமதாஸ் பூம்புகாரில் மகளிர் மாநாட்டை நடத்துகிறார். அதற்கு பிறகு அவர் ஒரு பொதுக்குழுவை அறிவித்துள்ளார். அந்த பொதுக்குழுதான் முதலில் உண்மையில் அறிவிக்கப்பட்டதாகும். அப்போது அன்புமணி நடத்தியது போட்டி பொதுக்குழு ஆகிவிடும். ராமதாஸ் கூட்டுகிற பொதுக்குழுவில் அதற்கு நேர் எதிராக தீர்மானங்கள் போட வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக பாமகவில் பிரச்சினைகள் தீரப் போவது கிடையாது. கட்சி பலவீனப்படும். பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தால் கட்சிக்கு நல்லது. தற்போது கட்சியில் செயல்பட முடியாத வகையில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தான் உணர்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.