அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று அண்ணாமலை முடிவு செய்துவிட்டார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.


என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 70 இடங்கள் தர வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து, அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- 2026ல் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். 140 இடங்களில் அதிமுக போட்டியிட்டால், 70 தொகுதியையாவது பாஜகவுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதில் ஒரு உள் அரசியல் இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்றால் அவர்கள் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். பாஜக, பெற்ற வாக்குகளில் ஏசிஎஸ், ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களின் வாக்குகளும் உள்ளன. ஆனால் பாஜகவால்தான் அவர்களுக்கே வாக்குகள் வந்ததாக சொல்கிறார்கள்.
அமித்ஷா மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று சொன்னதற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு விடுமுறை விட்டுவிட்டார். அமித்ஷாவின் பேச்சை பார்த்தாரா? இல்லையா? என்று தெரியவில்லை. அவர் மவுன சாமியாராக மாறிவிட்டார். அதிமுகவில் இதற்கு யாரைவிட்டு பதில் சொல்கிறார்கள் என்றால் மோடி, எங்க டாடி என்று சொன்ன முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வைத்துதான். அதிமுக ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று அவர் சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார்.

அமித்ஷா வருகையின்போது அண்ணாமலைக்கு கைத்தட்டல் சத்தம் விண்ணை பிளந்தது. அதற்கு பின்னால் என்ன செட்டிங் செய்திருக்கிறார்கள் என தெரியுமா? கூட்டம் சத்தம் போடுவதை நிறுத்துங்கள் என்று சொன்னால், அண்ணாமலை ஒரு சைகை செய்தார். அதை பார்த்தால் நிறுத்தி விடாதீர்கள்… நிறுத்தி விடாதீர்கள்… என்பது போல தான் இருந்தது. அண்ணாமலைக்கு, அதிமுக – பாஜக கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்றுவிட்டால் தனக்கு ஆபத்து என்று நினைக்கிறார். அதனால் அதிமுக – கூட்டணியை உடைக்க சதி செய்கிறார். அதனால் தான் அதிமுக 140 தொகுதிகள் போட்டியிட்டால், பாஜகவுக்கு 70 இடங்கள் தர வேண்டும் என்று சொல்கிறார்.
முருகனை வழிபட எல்லோருக்கும் கோவில்களுக்கு செல்கிறோம். பாஜகவினர் சொல்லியா நாம் முருகனை வழிபடுகிறோம். தமிழர்களுக்கு முருகன் யார்? நீங்கள் யார்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நன்றாக தெரியும். மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சிதான் வெற்றி பெற்று வந்தது. காமராஜர் சொன்னார், தமிழ்நாடடின் தலைநகராக சென்னை இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரம் மதுரை, என்றார். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையே பிரதிபலிக்கும் நகரமாக மதுரை உள்ளதாக காமராஜர் சொன்னார். அந்த ஊரிலே வந்து குறுக்கு சால் ஓட்டுகிற வேலை என்பது நடக்காது. எனவே அண்ணாமலை, அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.

தற்போது அதிமுக தொண்டர்கள் விழித்துக்கொண்டார்கள். மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்தால் ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வரும் என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் அதிமுக ஆட்சி வராது. பாஜக ஆட்சிதான் வரும் என்று பாஜகவினர் பகிரங்கமாக பேசத் தொடங்கியதன் வாயிலாக தமிழ்நாட்டு அரசியலில் அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்பது உண்மையாகி விட்டது. இதையே தான் ஸ்டாலின் மிகவும் கஷ்டப்பட்டு சொன்னார். ஆனால் அவர் தவறாக பேசுகிறார். திமுக இட்டுக்கட்டி பேசுகிறது என்று மறுத்தார்கள். ஆனால் அந்த வாதத்தை அமித்ஷா தற்போது உறுதிபடுத்தி விட்டார். அப்போது அமித்ஷா யாருடைய ஆள் என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.
சிலர் திமுக – பாஜக மறைமுக கூட்டணியில் உள்ளதாக சொல்கிறார்கள். அப்போது, அந்த கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய அமித்ஷா வந்துள்ளாரா? அமித்ஷாவும் குழப்பைத்தை விளைவிக்கிறார். அண்ணாமலையும் குழப்பத்தை விளைவிக்கிறார். அதிமுகவின் வாக்கு வங்கியை சிதறடிக்கின்ற வேலையை தேசிய அளவில் அமித்ஷாவும், மாநில அளவில் அண்ணாமலையும் பொறுப்பேற்று கொண்டிருக்கிறார்கள். அதனால் ஸ்டாலின் தேர்தல சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. உதயநிதி மட்டும் ஒரு சுற்று பயணம் மேற்கொண்டாலே திமுக 2.0 ஆட்சி அமைந்துவிடும் என்று சொல்கிற அளவுக்கு பாஜகவின் வியூகம் முட்டாள்தனமாக உள்ளது.

தமிழ்நாட்டில் இந்துத்துவம் என்கிற கோட்பாட்டை யாரும் அரசியலாக பார்க்க தொடங்கவே இல்லை. சக மனிதர்களை வெறுப்பதற்கு கற்று தருவதை தமிழர்கள் ஆன்மீகமாக கருத மாட்டார்கள். ஒரு இஸ்லாமியரை வெறுத்தால் தான் நான் இந்து என்றால்? நான் இந்துவே அல்ல என்று ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் சொல்கிறார். அதே தான் தமிழர்களின் கருத்து. கடவுள் நம்பிக்கை என்பது வேறு. கடவுளின் பெயரால் அரசியல் செய்வது வேறு. மதம் என்பது தனி மனிதருக்கானது. அது அரசாங்கத்திற்கானது அல்ல. மதத்தை அரசாங்கத்திற்கானதாக மாற்றுகிற வேலையை வடமாநிலங்களில் வெற்றிகரமாக பாஜக செய்துவிட்டது என்பதால், தமிழ்நாட்டிற்கு அது சாத்தியமாகுமா? நிச்சயம் சாத்தியமில்லை. இதை எப்போது புரிந்துகொள்வார்கள் என்றால்? இந்த கோஷத்தை முன்வைத்ததால் தேர்தலில் மாபெரும் தோல்வி வந்துவிட்டது. இந்த வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணம் அமித்ஷா பிரச்சாரம் செய்தது தான் என்கிற நிலைமையை தேர்தல் முடிவுகள் காட்ட வேண்டும்.

நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்தபோதும், தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாததற்கான காரணம் என்ன என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் மதவாதம் என்கிற துவேஷத்தை விதைக்கவே முடியாது என்கிற அடிப்படையே அவர்களுக்கு புரியவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உணர்வு என்பது துவேஷங்களால் நிறைந்தது அல்ல. பெரியார் கடவுள் மறுப்பை பேசினார். ஆனால் அது வெகு ஜனங்களுக்கானதா என்றால் இல்லை. அங்கிருந்து பிரிந்து வந்த திமுக ஏன் வெகு ஜன இயக்கமாக மாறுகிறது. பெரியார் ஏன் வெகு ஜன மக்களால் வெறுக்க முடியாத நபராக மாறுகிறார்?.
அதற்கு என்ன காரணம் என்றால்? ஏற்கனவே பக்தியின் பெயராலேயே இந்த மண்ணில் புரட்சிகரமான கருத்துக்களை பல பேர் முன்வைத்து விட்டார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சித்தர்கள், சாதி, மதத்துக்கு எதிரான பாடல்களை பாடியுள்ளனர். அந்த மரபு நமக்கு இருந்ததால் தான் நாம் வள்ளலாரை புரிந்து கொண்டோம். பெரியாரை புரிந்து கொண்டோம். அதானல் தான் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னபோது அது விகல்பமாக மாறவில்லை. தமிழர்களுக்கு என்று பெரிய வரலாற்று தொடர்ச்சி உள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பு நாகரிகமாக வாழ்ந்த சமூகத்தின் அடையாளம் நாம். அங்கு கடவுளே கிடையாது. இயற்கையைதான் வழிபட்டோம். எனவே ஒரு பண்பாட்டு சமூகமாக தமிழர்கள் இருக்கும் வரை அமித்ஷா மதுரையில் வாலாட்ட முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


