மண்டைக்காடு கலவரம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் மாதிரி மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் அரசியல் செய்ய வலதுசாரிகள் நினைக்கிறபோது, அதை தடுக்க வேண்டிய கடமை தமிழக அரக்கு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தின் பின்னணி அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக – ஆர்எஸ்எஸ் அரசியல் செய்வதன் நோக்கம், இந்துக்களின் வாக்குகளை திரட்டுவது தான். 1983ல் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் கலவரம் ஏற்பட்டது. 42 ஆண்டுகள் ஆகியும் இந்த கலவரத்தின் தாக்கம் இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இடையே விரோதப் போக்கு உள்ளது. இதேபோல் கோவையில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தால் அங்கு பாஜக வளர்ந்துள்ளது. இதுமாதிரி பிளவுபடுத்துவதன் மூலம் அரசியல் செய்ய வேண்டும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் நினைக்கிறபோது அதை தடுத்த நிறுத்த வேண்டிய கடமை தமிழக அரக்கு உள்ளது.

எம்ஜிஆர், கலைஞர் முதற்கொண்டு இன்றைய ஸ்டாலின் வரை, மத ரீதியாக தமிழ்நாடு பிளவுபடக்கூடாது என்பதுதான் எல்லோருடைய கருத்தும். அண்ணாமலையும், நயினாரும் இதற்கு மாறாக செயல்படுவார்கள் என்றால் அவர்களை தமிழ்நாடு மன்னிக்காது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு எங்களை போன்ற நடுநிலையாளர்கள் எல்லாம் ஆதரவாக இருக்கிறோம். கோவை குண்டுவெடிப்போ, மண்டைக்காடு கலவரமோ இறுதியாக எதை நோக்கி செல்லும் என்று எங்களுக்கு 40 வருட அனுபவம் இருக்கிறது. அது வேண்டாம். அது ஆபத்தானது.

வடஇந்தியாவில் கடைபிடிக்கப்படும் அதே பிளவுபடுத்தும் சக்தியை தான் திருப்பரங்குன்றத்திற்கு கொண்டு வருகிறார்கள். அப்படி கொண்டுவந்தால் நாளைக்கு சமுதாயம் இரண்டு கூறுகளாக இருக்கும். அதில் ஒரு கூறு ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்தால், அதற்கு எதிராக மற்றொரு தரப்பு வந்துவிடும். அமைதியான வாழ்க்கையை வாழ முடியாது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ்நாடு அப்படியான ஒரு பூமி கிடையாது. தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ சின்னமாக கோபுர சின்னத்தை வைத்துள்ளது.
1949ல் கோபுர சின்னம் தமிழ்நாடு அரசின் சின்னத்தில் இருக்கக் கூடாது. அது மத சின்னம் என்று வழக்கு போட்டார்கள். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோபுரம் மத அடையாளம் அல்ல. அது கட்டிடக் கலை மற்றும் பண்பாட்டின் சின்னம். அதனால் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டனர். கோபுர சின்னத்தை தனது அதிகாரப்பூர்வ இலச்சினையாக வைத்திருக்கும் ஒரு அரசு எப்படி ஒரு மதத்திற்கு எதிரான அரசாக இருக்க முடியும். மத நல்லிணக்க அரசாக தானே இருக்க முடியும்.

இந்து சமய அறநிலையத்துறை என்பது சுதந்திரத்திற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட துறையாகும். அதற்கு என்று ஒரு தனிச் சட்டம் உள்ளது. தமிழ்நாட்டை பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் இதேபோல் சட்டத்தை உருவாக்கியுள்ளன. பிற மதங்களுக்கு ஏன் இப்படியான சட்டம் கொண்டுவரவில்லை என்றால் 80 முதல் 90 சதவீதம் தர்ம சொத்துக்கள் இருப்பது இந்து மதம் மற்றும் வக்பு வாரியம், இஸ்லாமிய அறக்கட்டளையாகும்.
தர்ம சிந்தனை உடையவர்கள், தங்களுடைய சொத்துக்கள் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று 200 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்திய அமைப்புகள் அவை. திடீரென ஒரு கும்பல் வந்து இதில் இந்துக்களுக்கு தான் உரிமை உள்ளது. முஸ்லிம்களுக்கு தான் உரிமை உள்ளது என்று சொல்வதே தவறு. வாக்கு அரசியலுக்காக இதற்குள் மதத்தை கொண்டுவந்து சேர்த்தார்கள் என்றால் அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாடு அமளி காடாக மாறிவிடும். எனவேதான் திருப்பரங்குன்றம் விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

திருப்பரங்குன்றம் கோவில் இந்துக்களுக்கு சொந்த என்று சொல்ல வேண்டியது பாஜகவா? அல்லது கோயிலை சுற்றி இருக்கும் மக்களா? நிச்சயமாக அந்த பகுதி மக்கள் தான். கோயிலை பராமரிக்க வேண்டிய அல்லது பாதுகாக்க வேண்டிய கடமை அவர்களுக்கு தான் இருக்கிறது. திருவண்ணாமலை கோயிலில் தீபம் ஏற்றும் உரிமை பருவதராஜ குலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் உள்ளது. கோரிப்பாளையத்தில் பல வருடங்களுக்கு முன்பு அடக்கமான ஞானிகளின் சமாதிகள் உள்ளன. மதுரையில் தமிழ், சௌராஷ்டிரா, தெலுங்கு, உருது, இந்தி என 5 மொழிகள் உள்ளன. தெலுங்கு நாயக்கர்கள் இல்லாமல் மதுரை இல்லை.
எல்லோரும் சேர்ந்து நாம் அமைதியாக வாழ்கிறோம். அதை கெடுப்பதற்கான உரிமை இவர்களுக்கு தரப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்குமானால் எனக்கு மகிழ்ச்சி. உயர்நீதிமன்றத்தை பாதுகாக்க வேண்டிய சிஎஸ்ஐஎப் வீரர்களை அனுப்பி, நீங்கள் தீபம் ஏற்றுபவர்களுக்கு பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. என்ன தான் பெரிய அதிகாரம் பெற்ற நீதிபதியாக இருந்தாலும், அது எப்படி நன்மை பயக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


