எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காததன் மூலம் அவர் பாஜகவின் மற்றொரு பி டீம் ஆக முயற்சிக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.


விஜய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை மற்றும் எஸ்.ஐ.ஆர் குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள், விஜயின் பனையூர் இல்லத்திற்கு சென்றுள்ளனர். இதை விஜய் முன்கூட்டியே கணித்துள்ளார். அதன் காரணமாகவே அவர் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை அவர் புறக்கணித்துள்ளார்.
ஒருவேளை அனைத்துக்கட்சி கூட்டத்தில் அவர் பங்கேற்று இருந்தால், சிபிஐ விசாரணை மூலம் அழுத்தம் கொடுத்திருப்பார்கள். விஜய் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவருடைய வாகனத்தின் நீள, அகலம் குறித்து அளவிட்டிருக்கிறார்கள். இதனால் நெருக்கடி ஏற்படும் என்று அவர் உணர்ந்ததால் தான், அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளார். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நிறைய பி டீம்கள் இருக்கின்றன. விஜயும் அவர்களில் ஒருவராக மாற முயற்சித்து வருகிறார். விரைவில் அவர் மாறிவிடுவார்.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் திமுக மட்டுமின்றி அதிமுக, தவெக போன்ற கட்சிகளும் பாதிக்கப்பட்டும். இந்த நடவடிக்கையின் மூலம் அதிமுக, பாஜகவை சார்ந்த இருக்க செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்துவார்கள். இதற்கு அதிமுகவே துணை போகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வழக்கு தொடர்வோம் என்று சொல்கிறார். திமுக இதை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் பூத் ஏஜெண்டுகளை முழுமையாக வைத்துக்கொண்டு வீடுகளில் விண்ணப்பங்களை வழங்குவோம் என்று சொல்கிறது. திமுகவிடம் வாக்குச்சாவடி முகவர்கள் வலிமையுடன் உள்ளனர். அவர்களை மீறி தேர்தல் ஆணையம் மோசடி செய்ய முடியாது. ஆனால் டிசம்பர் மாதம் ஏறக்குறைய 12 நாட்கள் விடுமுறை நாட்கள். எஞ்சியுள்ள 18 நாட்களில் அவசர கதியில் இதை மேற்கொள்வார்கள்.

மேலும் பீகாரில் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்காமல் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் யார் காங்கிரஸ், ஆர்.ஜே.டி என்று தெரிந்துகொண்டு அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கினார்கள். இதை அறிந்து வைத்துள்ள திமுக அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. ஜனவரியில் இறுதிப் பட்டியல் வந்துவிட்டால் யாருடைய பெயரையும் சேர்க்க முடியாது. ஜனவரியில் கிட்டத்தட்ட 14 நாட்கள் விடுமுறையாகும். அப்போது யாரையும் சேர்க்க முடியாது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை செய்ய சரியான திட்டமிடலோடு தேர்தல் ஆணையம் இல்லை. எனவே திமுக இதை எதிர்க்கிறது. இதன் காரணமாக அதிமுக, தவெகவுக்கும் பிரச்சினை உள்ளது. அதன் காரணமாகவே கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக என்ன பேசியுள்ளனர். அதிமுகவால் அவர்களுடைய வழக்கையே உச்சநீதிமன்றத்தில் நடத்த முடியவில்லை. இவர்கள் எஸ்.ஐ.ஆர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்துவார்களா? அதிமுக, திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது சரியானது. ஆனால் விஜய் தன்னை மாற்று சக்தி என்று சொல்லி திமுக எதிர்ப்பை பிரதானமாக எதிர்த்துவிட்டு, நாங்கள் பாஜகவை எதிர்ப்பதாக ஒத்தடம் கொடுக்கிறார்கள். இது ஆபத்தான அரசியலாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


