துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை உணர்ந்துகொண்டதால்தான் மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி வெற்றிகரமாக கூட்டியுள்ளார். ஆனால் அப்படி செய்ததில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? என்று பார்த்தோமே ஆனால், எந்த அர்த்தமும் கிடையாது. இந்த மாநாட்டை ஜனவரியிலேயே ஏற்பாடு செய்துவிட்டோம். இதற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதில் செயற்கை நுண்ணறிவு, நிதி நிர்வாகம், ஆராய்ச்சி குறித்து எல்லாம் பேச போவதாக சொல்லிக்கொண்டிருந்தார். எல்லாம் சரிதான். இவற்றை எல்லாம் செய்வதற்கான உரிமை இன்றைக்கு உங்களுக்கு இருக்கிறதா? இந்த மாநாட்டை நடத்தும் இந்த நேரத்தில் உங்களுக்கு அதற்கான உரிமை உள்ளதா? துணைவேந்தர் நியமன அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் அரசின் கைகளுக்கு போய்விட்டது. அப்படி இருக்கிறபோது, துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு நீங்கள் தகுதி படைத்தவரா? என்கிற கேள்வி எழுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கிற ஜகதீப் தன்கரை கூப்பிட்டு கூட்டத்தை நடத்துகிறபோது, அதன் உள்நோக்கம் நமக்கு புரிகிறது. ஆளுநரின் நோக்கம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை என்பதுதான். ஆளுநர் ரவி, ஒரு அலங்கார பதவியில்தான் இருக்கிறார். துணைவேந்தர்களுக்கு எந்தவிதமான உத்தரவுகளோ, வழிகாட்டுதல்களோ நீங்கள் பிறப்பிக்க வாய்ப்பு இல்லை. உங்களுக்கு துணைவேந்தர் மாநாட்டில் பேசுவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்றால்? தமிழ்நாடு அரசு நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் நீங்கள் கலந்துகொண்டு என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். ஆனால் நீங்களே தன்னிச்சையாக மாநாடு நடத்தக் கூடிய தகுதியை இழந்து விட்டீர்கள். அதனால் தான் இன்றைக்கு துணைவேந்தர்கள் மாநாட்டில் 41 தனியார், மத்திய, மாநில பல்கலைக்கழகங்களை கூப்பிட்டுள்ளார்கள். அதில் 9 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் புறக்கணித்து விட்டார்கள். இது நீங்கள் வகிக்கக்கூடிய ஆளுநர் பொறுப்புக்கே அசிங்கமாகும். உங்கள் முகத்தில் துணைவேந்தர்கள் கரியை பூசிவிட்டார்கள்.
தமிழ்நாடு அரசுடன் மோதல் இல்லை என்று ஆளுநர் ரவி அறிக்கை விடுகிறார். ஆனால் நீங்கள் நடத்துகிற விஷயம் எல்லாம் மோதல் தான். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலால் நாடே கொந்தளிப்பில் உள்ளது. இந்த நேரத்தில் எதற்காக உங்களுக்கு துணை வேந்தர்கள் மாநாடு? இந்த மாநாட்டால் என்ன சாதிக்க போகிறீர்கள்? இதற்கு என்ன அவசியம் உள்ளது? அப்போது உங்களது நோக்கம் என்ன என்றால்? தமிழ்நாடு அரசு என்ன தான் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிக்கொண்டு வந்தாலும், பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்கிற தனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அந்த சுப்ரீம் கோர்ட் உத்தரவையே எதிர்க்கிற தன்கரையே கூப்பிட்டு வந்து மாநாடு நடத்துவேன் என்று காட்டுவதற்கான வீம்பிற்கான மாநாடாகத்தான் இதை பார்க்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த வெளிப்படையான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. துணைவேந்தர்களே இந்த விஷயத்தில் ஆளுநரின் செயல்பாடு சரியில்லை என்று முடிவு செய்து, பலர் போகாமல் இருப்பதை பார்க்கிறோம்.
கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள், தற்போது தன்னிச்சையாகவே தான் மாநாட்டை புறக்கணித்துள்ளனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வேந்தருக்கு உள்ள அதிகாரம் அப்படியே, அரசாங்கத்திற்கு மாறிவிட்டது. அரசாங்கம் என்றால் முதலமைச்சர், உயர் கல்வித்துறை என்று மாறிவிடுகிறது. உச்சநீதிமன்றத்தின் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி ஏற்கனவே 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் எந்த விதமான தடைகளோ உத்தரவோ பிறப்பிக்காத வரையில், அந்த உத்தரவு தொடரவே செய்யும். அதனால் அரசுதான் பொறுப்பில் உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அலங்கார பதவியில்தான் உள்ளார். நாளை வேறு எவர் வந்தாலும் வேந்தராக இருப்பார்கள். ஆனால் துணை வேந்தர்கள் கூட்டம் நடத்தும் உரிமையை இழந்துவிட்டீர்கள். முன்னர் ஆளுநரிடம் துணைவேந்தர் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் இருந்த நிலையில், தற்போது மொத்தமாக மாறி விட்டது. துணைவேந்தர் நியமனம் உள்பட பல்கலைக் கழக நிர்வாக விஷயங்கள் அனைத்தும் உயர் கல்வித்துறைக்கு வந்துவிட்டது. அப்போது இதுபோன்ற ஒரு மாநாட்டை கூட்டுகிற அதிகாரம் அரசுக்குதான் உள்ளது. அரசு உங்களை கூப்பிட்டால் அதில் நீங்கள் கலந்துகொள்ளலாம். ஆனால் நீங்கள் தன்னிச்சையாக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிற உரிமைகளை இழந்து விட்டீர்கள். அதை துணைவேந்தர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால் தான் அவர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
குடியரசுத் துணைத் தலைவரை கூப்பிட்டால் இங்கிருக்கும் துணை வேந்தர்கள் எல்லாம் பயந்துவிடுவார்கள் என்று நினைத்து, ரவி ஜெகதீப் தன்கரை துணைக்கு கூப்பிட்டார். அவரை துணைக்கு கூப்பிட்டாலும் நாங்கள் வர மாட்டோம் என்று துணை வேந்தர்கள் சொல்லி விட்டார்கள். ரவிக்கு என்ன பிரச்சினை என்றால்? எப்படியாவது தம்முடைய அதிகாரத்தை உறுதிபடுத்த வேண்டும் என்கிற வேகம் அவரிடம் உள்ளது. ஜெகதீப் தன்கரை ஏன் கூப்பிடுகிறார் என்றால்? அவர் உச்சநீதிமன்றத்தை கேள்வி கேட்கிறார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்வதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். அரசியல் சட்டப்பிரிவு 13, எந்தவிதமான சட்டத்தையும் மறுஆய்வு செய்வதற்கான அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. நீங்கள் போட்ட சட்டங்களை ரிவியூ செய்வதற்கான அதிகாரம் உள்ளது. அது அடிப்படை உரிமைகளை மீறுகிறதா? இல்லையா? என்று பார்ப்பதற்கான அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது. இதற்கு முன்பாக மத்திய அரசின் பல சட்டங்களை ரத்து செய்துள்ளது. நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவை தனித்தனியாக இயங்குகிற போது, ஒவ்வொன்றும் இன்னொருத்தருடைய அதிகாரத்தில் தலையிடாமல் இருக்கிறது. அதேபட்சத்தில் அதிகார வரம்பை மீறினால், அதை கட்டுப்படுத்துகிற வாய்ப்பை அரசியலமைப்பு சட்டம் கொடுக்கிறது. அதில் நீதித்துறைக்கு, சட்டத்தை மறுபரிசீலனை செய்கிற அதிகாரம் உள்ளது.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை நீதித்துறை கேள்வி கேட்கிறது என்றால்? நீங்கள் அரசியல் சட்டப்படி உங்களுடைய கடமையை சரியாக செய்தீர்களா? நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்ளலாமா? என நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். அதேநேரத்தில் சட்டமன்றத்தின் அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக் கொள்ளலாமா? எம்எல்ஏக்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான்? சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆளுநர் குப்பையில் போடுகிற போது, தமிழ்நாடு அரசு நீதிமன்றத்திற்கு போகத்தான் செய்யும். மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்களை குடியரசுத் தலைவர் வாங்கி கிடப்பில் போட்டால் மோடி சும்மா இருப்பாரா? 2016ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகம், ஆளுநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் மாநில அரசுகளின் சட்ட மசோதாக்களுக்கு கால வரையின்றி ஒப்புதல் அளிக்காமல் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் அது குறிப்பிடப்பட்டு உள்ளது. அதை அடிப்படையாக கொண்டுதான் காலக்கெடுவே நிர்ணயிக்கப்பட்டது. அப்போது, நீங்கள் அனுப்பிய சுற்றறிக்கை, அதையொட்டி வழங்கப்பட்ட தீர்ப்பை நீங்களே விமர்சிக்கலாமா? குடியரசுத் துணை தலைவர் என்பவர் அரசின் ஒரு பகுதி தானே. அதனால் தீர்ப்பை விமர்சிப்பதற்கான தகுதியோ, அதிகாரமோ அவருக்கு கிடையாது.
கல்வியாளர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ்-ன் கையாளாக மாறிவிட்டார்கள். இந்துத்துவா என்கிற சித்தாந்தம்தான் ஆளுநரையும் இணைக்கிறது. ஸ்ரீதர் வேம்புவையும் இணைக்கிறது. தன்கரையும் இணைக்கிறது. அதில் அவர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய எரிச்சல் என்ன என்றால்? தமிழ்நாடு அவர்களுக்கு தொட முடியாத இடமாக உள்ளது. நியாயமாக ஒரு அரசுக்கு வழிகாட்ட வேண்டிய ஆளுநர் இவ்வளவு இடைஞ்சல் கொடுக்க காரணம் என்ன? நிதியை மறுக்க வேண்டிய காரணம் என்ன? நாட்டில் உள்ள மற்ற அரசுகளை நீங்கள் அரசியல் ரீதியாக எதிர்க்கிறீர்கள். தமிழ்நாட்டை மட்டும்தான் சித்தாந்த ரீதியாக எதிர்க்கிறீர்கள்.
ஆளுநர் ரவி தன்னுடைய வரம்புகளை மீறி செயல்பட்டார். துணைவேந்தர்களை கூப்பிட்டு மாநில அரசு விரும்பாத புதிய கல்வி கொள்கையை திணிக்கிறார். அவர் நோக்கமே சமஸ்கிருதத்தை கொண்டுவருவது தான். மதுரையில் மாணவர்கள் மத்தியில் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் போடுகிறார். பொதுவான நபராக இருக்க வேண்டிய ஆளுநர் அப்படி கோஷம் போடலாமா? புதிய கல்விக்கொள்கை, மும்மொழியை ஆதரிக்கிறார். திராவிட இயக்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று எங்கு போனாலும் சொல்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் விட்டதாக சொல்கிறார். அப்போது நீங்கள் ஆளுநரா? அல்லது எதிர்க்கட்சி தலைவரா? துணை வேந்தர்களுக்கு சொல்லவே தேவையில்லை. ஏன் என்றால் அதிகாரம் கைமாறி விட்டது. அதை புரிந்துகொண்டு அவர்களே போகாமல் உள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.