கொங்கு மண்டல திமுக தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டு இருக்கும் நிலையில் திமுக – அதிமுக இடையே போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று மீண்டும் தெரிவித்துள்ளது தொடர்பாகவும், கொங்கு மண்டல தேர்தல் களநிலவரம் ஆகியவை குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா போல, தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி அமையும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் என்று சொல்லியுள்ளார். அவர் அதிமுக தனிப் பெரும்பான்மை உடன் ‘தனித்து’ ஆட்சி அமைக்கும் என்று ஒரு வார்த்தையை கூடுதலாக சொல்லி இருந்தால், உண்மையான கவுன்டர் ஆக இருந்திருக்கும். அல்லது எடப்பாடி பழனிசாமியே திரைமறைவில் அமித்ஷாவிடம் பேசி, தேர்தலுக்கு முன்பாக இப்படி பேசுவது தவறு. அதை செய்ய வேண்டாம் என்று கருத்து ஒற்றுமைக்கு வரா விட்டால் இந்த கூட்டணி சிதைவடையும் என்று சொல்லி இருந்தோம். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி ஜெல் ஆகவில்லை என்று விமர்சனம் உள்ளது. ஜெல் ஆக வேண்டிய நேரத்தில் அமித்ஷா அவரது அஜெண்டாவின் படி திட்டமிட்டு செய்கிறார், எடப்பாடி அதை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதன் மூலம் அந்த கூட்டணியின் பலவீனத்திற்கு காரணமாகிறார். மிகத் தெளிவாக ஒரு நாள் சொல்லிவிட்டால் போதும். “எங்கள் முடிவில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. தமிழ்நாட்டிற்கு இதுதான் சரியாக வரும். அமித்ஷா அப்படி சொன்னால் நீங்கள் அவரிடம் கேளுங்கள்”, என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இது அவமரியாதை இல்லை.

பொதுவெளியில் அமித்ஷா மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சி என்று சொல்கிறபோது, அது குறித்து எடப்பாடியிடம் விவாதித்தார்களா? அதற்கு அவர் ஒப்புக்கொண்டாரா? என எதுவும் தெரியாது. என்ன நடந்தது? எதற்காக அமித்ஷா இவ்வளவு உறுதியாக நாங்கள் அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்று சொல்லத் தொடங்கிவிட்டார் என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், தொண்டர்களுக்கே தெரிய வில்லை. முன்பாவது கூட்டணி ஆட்சி என்று சொல்லி வந்தார். தற்போது மிகவும் தெளிவாக அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறுவோம் என்று சொல்கிறார் என்றால்?, அதிமுக அதை விரும்பவில்லை என்றால்? அதை திறைக்கு பின்னால் இரு கட்சிகளும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. அதை செய்யாமல் எடப்பாடி பழனிசாமி என்னதான் பேருந்தில் சுற்றுபயணம் போய் வந்தாலும் தொண்டர்கள் மனதில் வேதனை ஏற்படும். தமிழ்நாட்டை பொருத்தவரை அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்வது மட்டும் தவறு கிடையாது. அவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் செய்து வரும் எதுவுமே சரியானது கிடையாது. அமித்ஷாவின் சோசியல் இன்ஜினியரிங், அவரது செயல்திட்டங்கள் தமிழ்நாட்டில் எடுபட தொடங்கவில்லை. 2021ல் யார் யாரையோ கன்வின்சிங் செய்து முடிவுகளை எடுக்க வைத்தவர், தற்போது அதிமுக உடன் கூட்டணி அறிவிக்கவே அமித்ஷா படாதபாடு பட்டார். எனவே அமித்ஷாவின் வியூகங்கள், செயல் திட்டங்கள் ஆகியவை எடுபட தொடங்கவில்லை.
அமித்ஷாவின் அடுத்த அடுத்த பேட்டிகள் அதிமுகவை சோர்வடைய செய்துள்ளதுடன், அவர்கள் மத்தியில் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது. அது எந்த வகையிலும் அதிமுகவுக்கும் பயன்தராது. பாஜக நிற்கும் தொகுதிகளிலும் வாக்குகள் இடம் பெயராது. இந்த எதார்த்தம் புரியாமல் எதற்காக இருவரும் மாறி மாறி பேசுகிறார்கள் என்று இன்னும் புரியவில்லை? அமித்ஷா இன்றுவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லவில்லை. சிஎம் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் என்று சொல்கிறார். அப்படி எந்த காலத்திலும் டெல்லி முடிவு செய்தது கிடையாது. அது அதிமுகவின் உரிமையாகும். இது புரியாமல் எடப்பாடியும் சொல்கிறார். எதற்காக எடப்பாடி இப்படி பேசுகிறார் என்று அதிமுகவினருக்கு ஒரு வருத்தம். அமித்ஷா, திருப்பி திருப்பி கூட்டணி ஆட்சி என்று சொல்வதால் கோபம் ஒருபக்கம். அதிமுக தொண்டர்கள் இன்னும் இயல்பான மனநிலைக்கு வரவில்லை. கூட்டணியின் பெரிய கட்சி என்கிற முறையில் இது ஒட்டுமொத்த கட்சிக்கும் நல்லது அல்ல. கொங்கு மண்டலத்தில் அதிமுக பெரிய அளவிலான வெற்றி பெற காரணம் பாஜக, அண்ணாமலைக்கு உள்ள செல்வாக்கு ஆகியவை ஆகும். அதிமுகவுக்கு இயல்பாக உள்ள செல்வாக்குதான் அதற்கு பிரதான காரணமாகும். அப்படி உள்ளதை கெடுத்துக்கொள்ளக்கூடாது.
கொங்கு மண்டலத்தில் திமுக தரப்பில் செந்தில் பாலாஜிக்கு 35 தொகுதிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அங்கே செந்தில் பாலாஜியின் செல்வாக்கு எடுபடும் என்று இரண்டு முறை நிரூபித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி வேட்பாளரே செந்தில்பாலாஜியின் தேர்வுதான். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கரூர், கோவை மாவட்டங்களில் 95 சதவீத வெற்றியை பெற்றார். அதிமுகவின் கோட்டையான கோவையில் அந்த கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை தகர்த்தார். அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. சட்டமன்றத் தேர்தல் குறித்து நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் செந்தில் பாலாஜியை எளிதில் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அவரது செயல் வேகங்கள், வியூகங்கள் அப்படி. அதேவேளையில் அதிமுகவில் தங்கமணி, வேலுமணி போன்ற தளகர்த்தர்கள் உள்ளனர். இவர்கள் களத்தில் சுற்றி சுழன்று வேலை செய்கிற ஆட்கள் ஆவர். கொஞ்சம் சாஃப்ட் ஆன முகம் என்று சொல்லப்படுகிற பொள்ளாச்சி ஜெயராமனே என்ன களம் தெரியாதவரா? அதிமுகவிலும் ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். எனவே மேற்கு மண்டலத்தில் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். அதிமுக – திமுக என இரண்டு கட்சிகளுக்கும் அவ்வளவு எளிதில் வெற்றி பெற முடியாது. கோவையில் திமுக 3 தொகுதிகளை பிடித்துவிடும் என்று சொன்னால்? எந்த 3 தொகுதிகள் என்று அவர்கள் யோசிப்பதற்குள் ஒட்டுமொத்தமாக எல்லாற்றையும் எடுக்கிறேன் என்று கூட திமுக எடுக்கலாம்.
தினகரனும், ஓபிஎஸ்-ம் தங்கள் அணியில் தான் இருக்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் சொல்கிறார். திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறபோது, முதல் நிகழ்ச்சியில் தோழமையில் உள்ள பாஜகவினரை கூப்பிடுகிறார். சரி கூப்பிடத்தான் வேண்டாம். கூட்டணியில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று சொல்கிறபோது கூட ஓபிஎஸ், தினகரன் பெயரை எடப்பாடி தவிர்க்கிறார். முதலில் அதிமுக ஒற்றுமைதான் அவசியம். அது வராதவரை தெற்கிலும், டெல்டாவிலும் அதிமுகவுக்கே கஷ்டம்தான். போக போக மாறும் என்று சொல்கிறார்கள். எந்த வடிவத்தில் மாறும் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும். எடப்பாடியின் பயணம் கட்சியினரை உற்சாகப்படுத்தும் பயணம்தான். இந்த பயணம் தொடங்கியபோது அடுத்தடுத்து சில விஷயங்கள் நடந்து அதிமுக தொண்டர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இல்லை என்று சொல்கிறபோதும் கூட்டணி ஆட்சி என்கிறார்கள். இன்று வரை எடப்பாடியின் பெயரை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. இந்த அதிருப்திகளை தவிர்த்தால் நிச்சயம் சுற்றுபயணத்துக்கு பலன் இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.