பீகார் தேர்தலில் மோசடியாக பாஜக வெல்வதற்கு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றம், ஊடங்கள் என்று பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பும் உள்ளது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.


பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி தோல்வியை தழுவியதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான விஷயங்கள் என்று வரிசைப்படுத்தி பார்ப்பது சரியான விஷயம் கிடையாது. பீகாரில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக பிரதமர் மோடி, பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்காக ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக நிதிஷ்குமார் 25 லட்சம் பேருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினார். இந்த காரியத்தை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு, ஒடிசா, தெலுங்கானாவில் தேர்தல் ஆணையம் தடுத்தனர்.
ஆனால் பீகாரில் தடுக்கவில்லை. இவ்வளவு மோசடிகள் நடந்தபோதும், நமக்கு தெரிந்தது எஸ்.ஐ.ஆர். மோசடிகள் தான். பிரபல பொருளாதர நிபுணர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவது உறுதியாக தெரிகிறபோது எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தால் மோடி அரசின் மீதான நம்பகத்தன்மை கேள்விக் குறியாகும். ஆனால் எதிர்க்கட்சிகள் மோசடி நடைபெறுகிறது என்று தெரிந்தும் தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த சின்கா, தற்போதையே தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையமும் இருக்கும்போது எதிர்க்கட்சிகள் தேர்தலில் நிற்பது எந்த அர்த்தமும் இல்லை என்று கூறியுள்ளார். இன்றைக்கு மோடி ஆதரவு பத்திரிகையாளர்கள், பீகாரில் காங்கிரஸ் கூட்டணி அடைந்திருக்கும் தோல்வி என்பது, அவர்களுடைய வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் எடுபடவில்லை என்பதை காட்டுவதாக கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தால் மட்டும், மக்களிடம் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராட மாட்டார்கள்.
பீகார் தேர்தலில் உ.பி., ஹரியானா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து கள்ளஓட்டு போட்டிருக்கிறார்கள். ஒரு பாசிச கட்சி அரசு அதிகாரத்தை குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றுகிறது என்கிறபோது, மக்களை விழிப்புணர்வு படுத்த வேண்டிய கடமை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் இருக்கிறது. காங்கிரஸ் – ஆர்.ஜே.டி தேர்தலை புறக்கணித்தால், பாஜக டம்மி நபர்களை நிறுத்தி தேர்தலில் வென்று விடுவார்கள். இதே புகார்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றரை வருடமாக தூங்குகிற போது, அதற்கு இந்த சமூக ஆர்வலர்கள் என்ன செய்தார்கள்? முறைகேடு நடப்பதற்கு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் தங்கள் அளவில் பங்களிப்பு செய்கின்றன.

பீகாரில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ் கட்சியின் மெத்தனப் போக்கும் ஒரு காரணமாகும். காங்கிரஸ் கட்சி என்கிறபோது நாம் ராகுல்காந்தி என்று நினைக்கிறோம். ஆனால் ராகுல்காந்தி வேறு. காங்கிரஸ் கட்சி வேறு. காங்கிரஸ் கட்சியினர் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு ராகுல்காந்தியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ராகுல் யாத்திரை சென்றதை சொல்லி கூடுதல் இடங்களை கேட்டார்கள். அப்படி வாங்கி 10 சதவீதம் வெற்றியை கூட பெறவில்லை. களப்பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. கட்சி கட்டமைப்போ, பூத் ஏஜெண்டுகளோ கூட அவர்களுக்கு கிடையாது.
எந்த வேலையும் பார்க்காமல் கூட்டணியை நாசம் செய்கிற வேலையை மட்டும் பார்த்துள்ளனர். தமிழ்நாட்டிலும் கூடுதல் இடங்களை கேட்கிறார்கள். பீகாரில் ஓவைசியை கூட்டணியில் இருந்து வெட்டிவிட்டதால் கிட்டத்தட்ட 25 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டார்கள். அல்லது போட்டி வேட்பாளர்களை நிறுத்தாமல் இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். இந்த வேலையை பல மாநிலங்களில் காங்கிரஸ் செய்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் என்று வரும்போது கட்சிக்கு புத்துயிர் கொடுக்க அடுத்தவர் முதுகில் சவாரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் பாஜகவின் ஏஜெண்டுகள் ஆவார்கள். அவர்களுக்கு பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. அவர்கள் வீட்டில் உட்கார்ந்து இருப்பார்கள். தேர்தல் வரும்போது நமது தோள்களில் சுமந்து சென்று, ஜெயிக்க வைக்க வேண்டும். அந்த வேலையை பீகாரிலும் பார்த்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை கூட்டணி விவகாரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். பாஜகவை முறியடிப்பது நம்முடைய நோக்கம். அந்த நோக்கத்தை நீர்த்துப்போக செய்கிற வேலையை காங்கிரஸ் கட்சியினரே செய்தாலும் நாம் கடுமையாக தான் நடந்துகொள்ள வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் பெற்று, சிரமத்திற்கு உள்ளாவது பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தான் அதிகமாகும். மோடி குடும்பத்திற்கு பத்தாயிரம் வீதம் 1.03 கோடி குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறார். சுமார் 13 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது என்பது, வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட பணமாகும். என்னை பொருத்தவரை பீகார் தேர்தல் வெற்றிக்கு நாம் தான் காரணம். பீகாரின் மொத்த வருவாயில் 74 சதவீதம் மத்திய அரசு வழங்கும் தொகையாகும். அதேவேளையில் தமிழ்நாட்டிற்கு 25 சதவீதம் நிதியை தான் மத்திய அரசு வழங்குகிறது.
நாம் கட்டுகிற வரிப்பணம் தான் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. பாஜக குடும்பத்திற்கு ரூ.10,000 தருகிறேன் என்று வாக்குறு அளிப்பது போல ஸ்டாலினோ, பினராயி விஜயனோ கொடுக்க முடியுமா? கொடுக்க முடியாது. காரணம் மத்திய அரசிடம் இருந்து அந்த திட்டத்திற்கு பணம் வராது. நாம் கொடுத்தால் ரேவடி கலாச்சாரம் என்பார். ஆனால் அவர்கள் கொடுத்தால் அது சட்டப்பூர்வமானது. அதை தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளாது. மக்கள் பணத்தை வைத்து வடமாநிலங்களில் பாஜக சூதாட்டம் ஆடுகிறது. மத்திய அரசு என்கிற அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் இப்படி செய்கிறார்கள்.

பிகாரில் லாலுபிரசாத் யாதவின் ஆட்சி ஒரு காட்டாட்சி என்பது, ஆதிக்க சாதிகள் உருவாக்கி பரப்பிய நேரேட்டிவ் ஆகும். பீகாரில் 1991ல் லாலு ஆட்சியின்போது தேச வருவாயில் கிட்டத்தட்ட 50 சதவீதம் தனி நபர் வருமானம் இருந்தது. தற்போது அது 33 சதவீதமாக குறைந்துள்ளது. நிதிஷ்குமாரை நேர்மையானவராக புரொஜெக்ட் செய்வதற்கு காரணம் அது ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரசென்டேஷன் ஆகும். அதை ஜென் ஸீ தலைமுறையினர் நம்புகிறார்கள். இஸ்லாமியர்கள் கூட அதை நம்ப தொடங்கிவிட்டனர்.
விஜய், தான் திரைதுறையில் உச்சத்தில் இருந்துவிட்டு வந்துள்ளதாகவும், திருட்டு திமுக என்றும் சொல்கிறார். ஆனால் முதல் நாள் முதல் காட்சியின்போது அவர் என்ன செய்தார்? ரூ.2000க்கு டிக்கெட் விற்றார்கள். அந்த கேள்வியை கேட்கும் அறிவு யாருக்கும் கிடையாது. 2021ல் திமுகவுக்கு வாக்களித்த விஜய், 2024ல் திமுகவை ஒழிப்பேன் என்று சொல்வதற்கு காரணம் என்ன என்று சொன்னாரா? நான் முதல்வராக வேண்டும். அதற்கு தடையாக திமுக இருக்கிறது என்று விஜய் சொன்னால் அதற்கு ஒரு கூட்டம் ஆதரவாக செல்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


