திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு ஒரு சிக்கல் என்றால் அனைவரும் ஓரணியில் திரளுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபித்துக் காட்டியுள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்தார்.

இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் வைகோ ஆற்றிய உரையின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பவதாவது :- 1990ஆம் ஆண்டு திமுக மாநாட்டில் உலகை உலுக்கிய புரட்சிகள் என்ற தலைப்பில் வைகோ ஆற்றிய உரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகோ எப்போதுமே மிகச்சிறந்த பேச்சாளர் ஆவார். அவர் நல்ல போராளி என்று அனைவருக்கும் தெரியும். திமுகவுடன் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இன்று பெரியாரை அழிப்பேன் என்று வெளிப்படையாக சொல்லும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அன்று மறைமுகமாக இந்த வேலையை செய்து கொண்டிருந்தார். அப்போது நேர்காணல் ஒன்றில் நான் வைகோவிடம் இது குறித்து கேள்வி எழுப்பினேன். அப்போது, திராவிடத்தையும், பெரியாரையும் இங்கே அழிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. நான் ஒருபோதும் விடமாட்டேன். திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு ஒரு சிக்கல் என்றால் நாங்கள் அனைவரும் ஓரணியில் திரளுவோம். ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று சொன்னார். இன்று அதை செய்து கொண்டிருக்கிறார்.

நான் முதன் முதலாக கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மொழிப் போர் தியாகிகள் தினத்தன்று வைகோவை பேட்டி எடுப்பதற்காக மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப் போர் தியாகிகள் நினைவிடத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, அவரிடம் ஒரு நேர்காணல் அளிக்க வேண்டும் என்று கேட்டேன். அவர் நான் தலைமை செய்தியாளராக பணிபுரிந்த சத்தியம் தொலைக்காட்சி குறித்த விவரங்களை கேட்டறிந்த பிறகு, எனக்கு நேர்காணல் வழங்க சம்மதித்தார். பின்னர் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் நேர்காணல் எடுத்தேன். அந்த நேர்காணல் பெரியளவில் வரவேற்பை பெற்றது. பின்னர் எனக்கு மகள் பிறந்த செய்தியை கேட்டு வாழ்த்து கூறினார். அதன் பின்னர் பல்வேறு நேர்காணல் எடுத்தேன்.
வைகோவை பொருத்தவரை அவர் எப்போதும் ஆழமாக வாசிக்கக் கூடியவர். அதேபோல், அவரது பேச்சுகள் சீமானை போன்று மடைமாற்றுவது போல இருக்காது. பொய்கள் இருக்காது. தரவுகளுடன் பேசுவார். இடையில் அவர் திமுக மீது முரண்பட்ட காலத்தில், அவர் வைத்த வாதத்தின் மீது விமர்சனங்கள் பல இடங்களில் எழுந்ததை பார்த்துள்ளோம். அரசியலில் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் எதை நோக்கி பயணிக்கிறோம். யாரோடு கை கோர்க்கிறோம் என்பதுதான் முக்கியமாகும். எந்த இடத்திலும் இந்த மண்ணை மதவாதிகளுக்கு தாரை வார்த்துவிடக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் உறுதியாக உள்ளன. திமுக, மதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக என பல்வேறு கட்சிகளும், பாஜக எந்த இடத்திலும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
பாஜக வந்தாலும் பரவா இல்லை என்கிற நிலைக்கு இன்றைக்கு சீமான் நகர்ந்து விட்டார். அவர் போன்று பொய் சொல்லி, கதை சொல்லி பிழைக்கும் அரசியல்வாதிகள் இவர்கள் இல்லை. கருத்தியல் ரீதியாக முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். அதன் பிறகு ஓரணியில் இணைந்திருக்கலாம். ஆனால் இவர்கள் தமிழ்நாட்டிற்கு அளப்பரிய பல பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் என்தை யாராலும் மறுக்க முடியாது. அதைவிட இவர்கள் மிக மிக ஆழமான வாசிப்பாளர்கள். குறிப்பாக வைகோ ஆழமான வாசிப்பாளர். மிகத்தேர்ந்த பேச்சாளர். அவரது பேச்சு எல்லோரையும் கட்டிப் போடும் வல்லமை உடையது. இன்றைக்கு நாடாளுமன்றத்திலும் அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டை நான் தொகுத்து வழங்கினேன். திருமாவளவன், வன்னியரசு போன்றோருடைய அழைப்பின் பேரில் அந்த மாநாட்டை தொகுத்து வழங்கினேன். அந்த மாநாட்டில் வைகோ பேச வருகிறபோது சிறுத்தைகளின் கூட்டத்திற்கு மத்தியில் சிங்கம் கர்ஜிக்க வருகிறது என்று சொன்னேன். அப்போதும் சிறப்பான உரையை வழங்கினார். அந்த அளவுக்கு வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றி உரை அனைவராலும் கவனிக்கப்பட்டு உள்ளது. மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.