குடியரசுத் தலைவர், நீதிமன்றம் ஆகிய இரண்டை விட அரசியல் சாசனம் தான் உயர்வானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநில ஆளுநர், குடியரசு துணைத்தலைவர் ஜெகதிப் தங்கர் ஆகியோர் விமர்சித்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அரசியல் சாசனத்தில் முழுமையான நீதி என்பதுதான் கோட்பாடு ஆகும். சாதாரண மக்களுக்கு புரிகிற விதமான மிகவும் எளிய விஷயம்தான் சட்டம். நீதி என்பது முழுமையானது. சரியானதை செய்ய வேண்டும். தவறானதை களைய வேண்டும். இதை தாண்டி நீதியில் எந்த பிரின்சிபலும் கிடையாது. முழுமையான நீதி என்றால் சரியானது நிலைநிறுத்தப்பட வேண்டும். தவறு இழைத்திருந்தால் சரிசெய்யப்பட வேண்டும். நீதிபதி சூப்பர் நாடாளுமன்றமா? என்று கேட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அவர் சூப்பர் நாடாளுமன்றம்தான். எப்படி என்றால் சட்டம் இயற்றுவது நாடாளுமன்றம் சட்டமன்றத்தின் கடமையாகும். இயற்றிய சட்டத்தை செயல்படுத்துவது அதிகார வர்க்கத்தின் கடமையாகும். இயற்றிய சட்டங்களை சரிபார்த்து சமன்செய்து சீர்தூக்கி பார்ப்பது நீதிமன்றங்களின் கடமையாகும். ஒரு இயற்றிவிட்டால் நீதிமன்றம் அதை தவறு என்று சொல்லக்கூடாதா? என்றால் தவறு என்றும் சொல்லும். பிரான்ஸ் போன்ற நாடுகளில் நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ இயற்றும் சட்டங்கள் உயரியது. ஆனால் இந்தியாவில் என்ன சட்டங்கள் இயற்றினாலும், அந்த சட்டத்தின் மீது உரிய நீதிமன்றம் ஒரு வியாக்யானம் கொடுத்து அந்த சட்டத்தின் குறைகளை, பிழைகளை களையும். அதற்கு காரணம் முழு நீதி வழங்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் இந்த உத்தரவு எப்படி வந்தது? ஆளுநர், அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தார். மசோதாக்களை மக்களுக்காக நிறைவேற்றுவது மாநில சட்டமன்றம். ஆளுநரிடம் ஒப்புதலுக்காக போகிறது. அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான வழிகாட்டு முறையில் அரசமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதை மீறி அவர் மசோதாக்களை நிலுவையில் வைக்கிறார். முதலமைச்சரும், ஆளுநரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் முதலில் உச்சநீதிமன்றம் சொன்னது. அதற்கு பிறகு அந்த பிரச்சினை தீரவில்லை என்பதால் முழு நீதி கிடைப்பதற்காக, ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. ஒரு மாத்திற்குள் அவர் சொல்ல விரும்பவில்லை என்றால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். அப்போது குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு வேண்டும் அல்லவா? ஆளுநருக்கு ஒரு மாதத்தில் முடிவு தெரிவிக்க விருப்பமில்லாத நிலையில், காலக்கெடுவே இல்லாத ஒருவருக்கு அனுப்பி வைத்தால் அவர் எப்போது முடிப்பார்? இப்போது இந்த 10 மாசோதாக்களும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அவர் எப்போது முடிவு எடுப்பார். அவர் முடிவே எடுக்கமாட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு என்ன சொல்கிறோமோ அதனுடைய நீட்சி குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்.
குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தங்கர், குடியரசுத் தலைவருக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார். ஆனால் குடியரசு தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும். மரண தண்டனை கைதிக்கு, குடியரசுத் தலைவரிடம் கருணை மனு போடப்படுகிறது. அவர் நீண்ட நாட்களாக எந்த முடிவும் எடுக்கவில்லை. பேரறிவாளன் விவகாரத்தில் நீதிமன்றம் தனக்கு உரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கால தாமதத்தின் காரணமாக தான் முதலில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இது குடியரசுத் தலைவருக்கு மென்மையான தொனியில் ஒரு கண்டனமாகும். அப்போது குடியரசுத் தலைவரின் பதவி உயர்ந்ததா? நீதிமன்றங்களின் அதிகாரம் உயர்ந்ததா? என்றால் அரசியலமைப்பு சட்டம்தான் உயர்ந்தது. குடியரசுத் தலைவரும் உயர்ந்தவராக இருக்க முடியாது, நீதிமன்றமும் உயர்ந்தவராக இருக்க முடியாது. அரசியல் சாசனம்தான் உயர்ந்ததாகும். அரசியல் சாசனம் முழு நீதி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறது.
குடியரசுத் துணை தலைவரே, ஆளுநர் பதவியின் நீட்சிதான். இவர் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்தபோது, ரவி என்ன செய்தாரோ அதைதான் அவரும் செய்தார். ஜெகதீப் தங்கர் ஆளுநர்களுக்காக பரிந்து பேசுவதாக தான் நான் பார்க்கிறேன். அடிப்படையில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கடமை உள்ளது. அதை நீங்கள் இந்த காலக்கெடுவுக்குள் செய்யுங்கள் என்று சட்டம் வரையறை செய்யவில்லை. அதற்கு நியாயமான கால கட்டம் என்று அர்த்தம். இவைகள் எல்லாம் கோட்பாடுகள் தான். மரண தண்டனை போன்ற விஷயங்களில் குடியரசுத் தலைவர் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிவு எடுக்க வேண்டும். 1980களில் தொடர் கொலைகள் செய்த ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு போட்டார்கள். கிட்டத்தட்ட 14 கருணை மனுக்கள் போடப்பட்டன. பெரிய காலதாமதம் என்பதால், அவருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
குடியரசு துணைத்தலைவர் தற்போது எந்த வாதத்தை வைக்கிறார் என்றால் நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் இல்லை. அதனால் அரசியல் சாசனத்தின் இந்த பிரிவை அணு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். அதனால் அந்த பிரிவையே எடுக்க வேண்டும் என்று வாதத்தை முன்வைக்கிறார். அது மிகவும் ஆபத்தான வாதமாகும். இன்றைக்கு வெறும் ஆளுநர் Vs தமிழ்நாடு அரசாக உள்ளது. ஆனால் இதன் பின்னணியில் எத்தனையோ வழக்குகள் இருக்கின்றன. போபால் விஷவாயு கசிவு, பேரறிவாளன் வழக்குகளில் இதுபோன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திதான் நிவாரணம் வழங்கப்பட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.