இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக அவர்களுக்கு ஆத்திரம் ஏற்படலாம். ஆனால் நடுநிலையாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு கோபம் ஏன் வருகிறது? என்று சமூக செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் பதவி உயர்வு விவகாரத்தில் எதிர்மனுதாரர் தரப்பில் வாஞ்சிநாதன் ஆஜராகினார். எதிர்மனுதாரர் மூத்த வழக்கறிஞரை நியமிக்க விரும்பியதால், வாஞ்சிநாதன் விலகிக்கொண்டு வேறு வழக்கறிஞருக்கு வக்காலத்து கொடுக்கிறார். அதனால் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், ராஜசேகரன் அமர்வு முன்பாக வரவேண்டிய தேவை வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு இல்லை. எனினும் நீதிபதிகள் பிறப்பித்த சம்மனை ஏற்று நேரில் ஆஜராகிய வாஞ்சிநாதன், அப்போது தான் இந்த வழக்கில் இருந்து விலகி விட்டதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார். அப்போது, நீங்கள் நான் நீதிமன்றத்தில் வழங்கும் தீர்ப்புகளில் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் நடந்துகொள்கிறேன் என்று குற்றம்சாட்டி இருக்கிறீர்கள். அதுகுறித்து என்ன சொல்கிறீர்கள் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்டுள்ளார். நீங்க எது குறித்து சொல்கிறீர்கள் என்று புரிய வில்லை. எந்த சந்தர்ப்பத்தில் எந்த விஷயத்தில் சொல்லி இருக்கிறேன் என்று குறிப்பாக சொன்னால் நான் பதில் சொல்ல முடியும் என்று பதில் அளித்தார். உங்களுடைய குற்றச்சாட்டில் நிற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார். அப்போது நீங்கள் ஒரு கோழை என்று குறிப்பிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உடனடியாக உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் வாஞ்சிநாதன் திங்கட்கிழமை நேரில் ஆஜராகி இதுதொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், நீதிபதிகள் மீதே வாஞ்சிநாதன் களங்கம் கற்பிக்கிறார் என்றும், கேரளாவில் இதுபோன்ற வழக்கில் நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கண்ட தீர்ப்புகளின் ஒளியில் பார்க்கிறபோது அவர் நீதிமன்ற அவமதிப்பை செய்திருக்கிறார் என்று கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது என்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இறுதியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சாதிரீதியாக தீர்ப்புகளை வழங்குகிறார் என்கிற குற்றச்சாட்டில் ஊன்றி நிற்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிகழ்வுகளுக்கு பின்னர் கூடுதல் பதிவாளரிடம் இருந்து வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு முகாந்திரம் உள்ளது என்று கருதுவதற்கு முன்பாக வழங்கப்படும் நோட்டீஸ் அது. அதில் திங்கட்கிழமை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர். நீதிபதியின் உத்தரவுக்கும், இதற்கும் பெரிய முரண்பாடு உள்ளது. நீபதிகளும் வழக்கறிஞரும் சேர்ந்ததுதான் நீதிமன்றம். நீதிமன்றத்தின் ஒரு பகுதியான வழக்கறிஞரை கோழை என்று சொல்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
தன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தானே நீதிபதியாக இருக்க முடியாது என்பது விதியாகும். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் 2004ல் ஒரு ஜுனியர் வழக்கறிஞராக பிராக்ட்டிக்ஸ் செய்ய தொடங்கியது முதல் எனக்கு தெரியும். கொககோலா எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுடன் துணை நின்ற முக்கியமான வழக்கறிஞர் அவர். கூடன்குளம் போராட்டம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது உயிரை துச்சமென மதித்து களத்தில் நின்ற வழக்கறிஞர்களில் அவரும் ஒருவர் ஆவார். தாது மணல் கொள்ளை விவகாரத்தை வெளிக்கொண்டுவந்தவர் அவர். ஈழத்தமிழர் பிரச்சினைக்காக போராடியுள்ளார். வழக்கறிஞர்கள் உரிமைகளுக்காக போராடி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். அதில் மேல்முறையீடு செய்து, மீண்டு வந்தார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி பிரச்சாரத்தை முறியடித்தவர் வாஞ்சிநாதன். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது இந்துத்துவ அமைப்புகள் ஆத்திரம் கொள்வதற்கும், கொலைவெறி கொள்வதற்கும் போதிய முகாந்திரம் உள்ளது. ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நடுநிலையோடு நடப்பவர். பக்க சார்பு இல்லாதவர். அவருக்கு ஏன் வாஞ்சிநாதனை கோழை என்று சொல்கிற அளவுக்கு கோபம் வருகிறது?
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் கடிதம் எழுதியுள்ளார். இது ரகசியமாக இருக்கும் என்பதால் பதிவு அஞ்சலில் அனுப்பப்பட்டது. அதன் நகல் ராஜராஜன் என்கிற அதிமுக வழக்கறிஞரிடம் இருந்து வாட்ஸ்அப்பில் பரவியுள்ளது. இது குறித்து புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படி ரகசியமாக அனுப்பப்பட்ட புகார் மனுவை வெளியிடுவது என்பது கிரிமினல் குற்றச்சாட்டு ஆகும். அப்படி செய்த நபரை கைதுசெய்து நடடிவக்கை எடுக்க வேண்டும். அப்போது இகுறித்து கிரிமினல் விசாரணை நடைபெற வேண்டும். ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்காக போராடியதால், ஆலை தரப்பில் அவரிடம் பேரம் பேசப்பட்டது. அதைதான் தாண்டி அவர் உறுதியாக நின்றதால் போராட்டம் நடைபெற்ற தினத்தன்று அவரை சுட்டுக்கொல்வதற்கு திட்டமிட்டிருந்தார். அவர் கிராம மக்களோடு சேர்ந்து சற்று தாமதமாக வந்ததால் உயிர் தப்பினார். இதனை நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் முன்பாக ஆஜராகியபோது அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதனுக்கு, தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என்கிற நிபந்தனையுடன் அவரை வெளியே விட்டார்கள்.
தீர்ப்புகளை குறித்து விமர்சனம் செய்கிறபோது, அதை நீதிமன்ற அவமதிப்பு என்று எல்லைக்குள் தள்ளிக்கொண்டு போவது எளிது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள தீர்ப்பில், விமர்சனம் செய்பவருக்கு உள்நோக்கம் கற்பிக்கும் எண்ணம் இல்லை என்றாலும், அவருடைய விமர்சனத்தால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தெரிவித்துள்ளார். நீதித்துறையின் மீதான அக்கறை, அரசமைப்பு சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும், மதச்சார்பின்மை மீதுள்ள அக்கறை காரணமாகவே இந்த விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. நடவடிக்கை என்ற ஒன்று உள்ளது. அதில் இருந்து இந்த விஷயங்களை புரிந்துகொள்ள நீதிபதிகள் முயற்சிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.