திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயர் வைக்க தடை விதிக்க கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், அரசியல் அரங்கில் எதிர்கொள்ள வேண்டிய விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக பத்திரிகையாளர் மகிழன் தெரிவித்துள்ளார்.

அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் வைக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டதன் பின்னணி மற்றும் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு விவரங்கள் குறித்து பத்திரிகையாளர் மகிழன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற அரசு திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கை தொடர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது, இடைக்கால தடை போன்றுதான் விதித்தனர். உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதங்களை கேட்கவே இல்லை. இதனை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கு சென்றார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் தான் இந்த மனு விசாரணைக்கு வந்தது. 2014ல் கர்நாடக அரசில் தொடர்ந்த வழக்கு ஒன்றில் முதலமைச்சர், ஆளுநரின் பெயர்களை பயன்படுத்தலாம் என்று விதி உள்ளது.
திமுக சார்பில் அரசின் முதலமைச்சர் என்கிற அடிப்படையில் திட்டத்திற்கு முதலமைச்சர் பெயர் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அம்மா என்கிற பெயரில் திட்டம் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியபோது, அது முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் இல்லை, பொதுவான பெயர் என்று சொல்லி மறுத்தார்கள். அதிமுக தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால், நீதிபதி சீக்கிரம் பேசி முடிக்காவிட்டால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். அரசியல் அரங்கில் எதிர்கொள்ள வேண்டிய விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவருவது ஏன்? என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
திமுக தரப்பை பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றியாகும். ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் திமுகவினர் களத்திற்கு நேரடியாக செல்கிறார்கள். அப்போது அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை தெரிந்துகொண்டு, அதனை தணிப்பதற்காக வாய்ப்பாக இது அமைந்துள்ளது. அதிமுக தரப்பில் அரசுக்கு எதிரான கோபம் தணிக்கப்படுவதை தடுக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு ஸ்டாலின் முகம் மீண்டும் பதிவாகிறது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகள் ஸ்டாலினை, பொதுவாக அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்கிற ஒரு தலைவராக கட்டமைக்கிறது.
பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள், இயல்பாகவே மக்களை ஈர்க்கும் தலைவர்களாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர். தன்னை சுற்றி ஒரு பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டார். ஜெயலலிதாவும், அதுபோன்ற ஒரு மக்கள் ஆதரவை உருவாக்கி கொண்டார். திமுக இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சுற்றியும் அதுபோன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து கொண்டிருக்கிறார். அதை தடுக்க தற்போது தலையிட்டாக வேண்டும். இல்லா விட்டால் எதிர்வரும் தேர்தலில் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்கிற புரிதலில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சி.வி.சண்முகத்தை தூண்டிவிட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. யாரோ ஒரு வழக்கறிஞரின் பேச்சை கேட்டுக்கொண்டு அவசரப்பட்டு வழக்கை தொடர்ந்து விட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, எம்ஜிஆர் பெயரை வைத்துள்ளார்கள். ஜெயலலிதாவை அம்மா என்று அதிமுகவினர் அழைக்கும் நிலையில், அவர் பெயரிலும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அப்போது அவற்றுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரில் திட்டங்களை வைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருக்கலாம். ஒருவேளை இந்த வழக்கில் சி.வி.சண்முகம் தரப்பு வெற்றி பெற்றிருந்தால், அது அவர்களுக்கே சாதகமாக முடிந்திருக்கும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் விளம்பரம் செய்தார். தற்போது சி.வி.சண்முக கூடுதலாக விளம்பரத்தை தேடி தந்திருக்கிறார். அத்துடன் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் அபராதமும் செலுத்தியுள்ளார். ஸ்டாலின் உடனான அரசியல் பகையை தீர்த்துக் கொள்ளும் களமாக நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பாஜக முழுக்க முழுக்க மையத்தில் அதிகாரங்களை குவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு எதிராக அதிகாரத்தை ஜனநாயகப்படுத்தும் விதமாக திமுக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதை யார் சொல்லி தடுக்க முயன்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த திட்டத்தை தற்காலிகமாக இருக்காமல், நிரந்தரப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி உள்ளதா? இல்லையா? என்பது பாஜக – அதிமுக கூட்டணி சேர்ந்ததும் தெரிந்தது. பாஜகவை கழட்டிவிட்டால்தான் நாம் வாக்குகளை பெற முடியும் என்று அதிமுக நம்பியது. ஆனால் அதில் சொதப்பி விட்டது. தற்போது குறைந்தபட்சம் பாஜக உடன் சேர்ந்து போட்டியிட்டால்தான் பழைய தேர்தலில் இருந்த வாக்கு சதவீதத்தையாவது பெற முடியும் என்கிற நிலை உள்ளது. திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளதா? இல்லையா? என்பதை விட, அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளதா? என்று கேள்வி எழுப்பினால் நம்பிக்கை இல்லை என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபம், அதிருப்தி உள்ளன. அதை அரசு தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் மக்களை அணுகி அவர்களது பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பதன் மூலமாக மக்களிடம் குறைகளை குறைக்க முயற்சி செய்யலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.