spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

-

- Advertisement -

நிவேதிதா லூயிஸ்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல் நின்றுகொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

we-r-hiring

தி.மு.க.- வின் எந்தக் கோணத்தை அலசுவதாக இருந்தாலும், அது நீதிக்கட்சியில் இருந்தே தொடங்க வேண்டும் என எண்ணுகிறேன்.

நீதிக்கட்சி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு எப்படி நீதிக் கட்சியிலிருந்து தொடங்குகிறதோ, அதேபோல கிறிஸ்தவர்களுடனான அதன் ஒத்திசைவும் அக்கட்சியிலிருந்தே தொடங்குகிறது எனச் சொல்ல வேண்டும்.

செப்டம்பர் 16, 1921. அன்றுதான் இந்தியாவின் முதல் சமூக நீதி அரசாணையை (G.O. 613) நீதிக்கட்சி வெளியிட்டது. இந்திய சட்டமன்ற வரலாற்றில் இடஒதுக்கீட்டை அரசாணை பிறப்பித்த முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு நீதிக்கட்சிதான். சுயமரியாதையின்மேல் கட்டமைக்கப்பட்ட நாட்டின் முதல் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் செய்த முன்னெடுப்பு இது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தேவையை உணர்ந்து முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியில்தான் கிறிஸ்தவ மக்களுக்கான முதல் இட ஒதுக்கீடு கிடைத்தது. கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவை (College Students Admission Committee) உருவாக்கி, உயர் கல்வியில் பிராமண ஆதிக்கத்தைக் குறைக்க நீதிக்கட்சி முயன்றது. இந்த அரசாணையின்படி பொதுப்பணிகளில் பார்ப்பனரல்லாதோர், பார்ப்பனர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் (ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர் உள்பட்ட ஒடுக்கப்பட்டோர் ஆகிய சமூகங்களுக்கு 5:2:2:2:1 என்கிற விகிதாசாரத்தின்படி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்ப புள்ளிவிவரங்கள் சமமற்ற பிரதிநிதித்துவத்தைக் காட்டியதால், 1922ல் இரண்டாவது வகுப்புரிமை அரசாங்க ஆணை உடன் திருத்தத்திற்கு வழிவகுத்தது. இது, பார்ப்பனரல்லாதவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு சமூகங்களுக்கு அனைத்து வேலை தரங்களையும் (Grades) திறக்கும் ஒரு ரோஸ்டர் முறையை (Roster System) அறிமுகப்படுத்தியது. ஆனால், இதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியாதபடிக்கு பார்ப்பன லாபி தெளிவாக வேலை செய்தது. கடைசியில், தந்தை பெரியாரின் தொடர் முயற்சிகள் காரணமாக 1928ஆம் ஆண்டு, கட்சி சாராத சென்னை மாகாண முதல் அமைச்சர் பி.சுப்பராயனால் மூன்றாவது வகுப்புரிமை அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. மிக முக்கியமான இந்த முன்னெடுப்பு, பின்னாளில் செல்லாது என வழக்குகளைச் சந்தித்தது வரலாறு.

தந்தை பெரியார்

சட்டரீதியாக, நிர்வாக வழி இப்படியான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்த அதே வேளையில், தந்தை பெரியார் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் குறித்த கருத்துருவாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்திவந்ததை இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் மதச்சார்பின்மைக்கு அடிக்கல் எனக் கொள்ளலாம். குடிஅரசு இதழில் பெரியார் எழுதிய கீழ்க்காணும் பத்தியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

‘இந்தியாவில் சிறப்பாகப் பரவி இருக்கும் கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் மக்களுடைய வறுமையைப் போக்குவதிலும் மக்களுக்குக் கல்விப் பதிவையூட்டுவதிலும், மருத்துவ உதவியளிப்பதிலும் சிறந்து நிற்கின்றது என்பதில் அய்யமில்லை. அந்த மதத்தைப் பின்பற்றும் மக்களும் நாளுக்கு நாள் ஒற்றுமையடைந்து கல்வியறிவிற் சிறந்து, மக்கள் கூட்டத்தில் பெருகி முன்னேறிவருகின்றனர்.

கிறிஸ்தவ மதமும் மனித சகோதரத்துவத்தைப் போதிக்கின்றது. தற்பொழுது இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், இந்துக்களின் சார்பு காரணமாக வகுப்பு வேற்றுமை பாராட்டக்கூடியவர்களாயிருந்தாலும் வகுப்பு வேற்றுமைக்கு அவர்கள் மதத்தில் ஆதாரமேயில்லை. கிறிஸ்தவ மதத்தில் ஆண்களைப் போல பெண்களுக்கும் எல்லா உரிமையும் உண்டு. சொத்துரிமையுண்டு. விதவா விவாகம் உண்டு. ஒருவன் ஒருத்தியைத்தான் மணம் புரிந்துகொள்ளலாம். மற்ற நாடுகளில் விவாக விடுதலையுண்டு. இந்தியாவில் மட்டிலும் இல்லை. ஆகவே, இம்மதம் அதைப் பின்பற்றும் மக்களுக்கு நன்மை செய்துவருவதை அறியலாம்’.

பெரியார் வகுத்துத் தந்த பாதையிலே பீடுநடை போட்டவர் அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா

“நான் தற்போது மரியா கொரெல்லியின் ‘தி மாஸ்டர் கிறிஸ்டியன்’ நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நாளை படித்து முடித்துவிடுவேன். நாளை மறுநாள் அறுவைசிகிச்சையை வைத்துக்கொள்ளலாமா?”

இறப்பதற்கு முன்பாக அறிஞர் அண்ணா வாசித்துக்கொண்டிருந்த மரியா கொரெல்லியின் நூல், ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் கர்தினாலாக இருக்கும் அமைதியான, நல்ல மனிதர் ஒருவரின் கதையைச் சொல்கிறது. நாவலின் அடிப்படை, கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு, இயேசுவின் அடிப்படை போதனைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே. ஆண்கள், பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம், ஏழைகள் நடுவே வாழும் பணக்காரர்கள் இயல்பு, அதிகார மையத்தில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் என கிறிஸ்தவக் கட்டமைப்பிலுள்ள கற்பிதங்களை, இயங்கியலை நுணுக்கமாக அலசி ஆராயும் நூல் இது. கிறிஸ்தவத்தை சமூக நீதி வழி ஆராயும் நூலை தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலும் வாசித்துக்கொண்டிருந்தவர் அறிஞர் அண்ணா. மனித நிலை குறித்த அழகான அவதானிப்புகளுக்காக மட்டுமே வாசிக்கப்படவேண்டிய நூல் இது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

பெரியாரின் வழியைப் பின்பற்றி கிறிஸ்தவம் தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன என்பதைத் தன் உரைகள்மூலம் மக்களிடம் கொண்டு சென்றவர், அறிஞர் அண்ணா. 1951ம் ஆண்டு சென்னை, தியாகராயர் கல்லூரி மாணவர்களிடையே அண்ணா ஆற்றிய சொற்பொழிவின் பகுதி இங்கே – “காஞ்சி கோயில்களிலே 30 நூறாயிரம் ரூபாய்கள் பெறுமான பொன், வைரம், நவரத்தினங்கள் இவற்றாலான நகைகள் இருக்கின்றன. இதைப்போன்று நவரத்தினங்களாலான ‘சிலுவையைக்’ காட்டுங்கள்! ‘பொன்னாலான’ இயேசுநாதரை எங்கும் பார்க்க முடியாது, கிறித்தவர்கள் கையில் வைரம் கிடைத்தால், அது ‘இலயோலா கல்லூரியாக’ இருக்கும்; மருத்துவமனையாக ஒளிரும். நல்வாழ்வுக் கூடங்களாக மலரும். விலைமதிப்புள்ள பொன்னும் மணிகளும் இந்துக்களிடம் மூடச் செயலால் முடக்கப்படுகின்றன. மக்களுக்குப் பயன்படாத வகையில் ஆண்டவனின் நகைகளாக, ஆடம்பர ஊர்திகளாக மாறுகின்றன. ஆனால், கிறிஸ்தவர்களிடையே அதே மணிகளும் வைரங்களும் கிடைத்தால், அறிவை வளர்க்கும்கல்லூரிகளாக, நலம் தரும் மருத்துவமனைகளாக மாற்றம்பெற்றுச் சமுதாய உயர்விற்கு வழிவகுக்கின்றன.”

ஒரு வேளை அறிஞர் அண்ணா இப்போது இருந்திருந்தால், தங்கக் கிரீடம் சூட்டிய கிறிஸ்தவ சிலைகளை என்ன சொல்லியிருப்பார். நவரத்தினங்கள் பதித்த சிலுவை, டாலர் அணிந்த இன்றைய கிறிஸ்தவ ஆயர்களைக் கண்டு என்ன பேசியிருப்பார் எனத் தோன்றாமல் இல்லை.

‘நான் குல்லா அணியாத முஸ்லிம்; சிலுவை போடாத கிறித்தவன்; திருநீறு இடாத இந்து’ என்று தம்மை வருணித்துக்கொண்ட அண்ணா, தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், இன்றளவும் கிறிஸ்தவர்களின் அடைக்கலமாக இருந்துவருவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

கிடைத்த வாய்ப்பில் எல்லாம் கிறிஸ்தவ மத கட்டமைப்புக்குள்ளும் நுழைந்து நீதியை நிலைநாட்ட முயன்ற ‘ஸ்டேட்ஸ்மன்’ அறிஞர் அண்ணா. 1969ஆம் ஆண்டு ரோமை கத்தோலிக்க திருத்தந்தை ஆறாம் பவுலை சந்தித்த அண்ணா, கோவா விடுதலைப் போராட்ட வீரர் மோகன் ரானடேவை விடுவிக்க போர்த்துகீசிய ஆட்சியாளர்களுக்கு திருத்தந்தை அழுத்தம் தரவேண்டும் என விண்ணப்பிக்க, அதன் பலனாக ரானடே விடுதலையானது வரலாறு.

கலைஞர் கருணாநிதி

கிறிஸ்தவ மற்றும் விளிம்புநிலை சமூக மக்களின் பேராதரவாக இருப்பவர் கலைஞர் கருணாநிதி. சமத்துவமும் சமூக நீதியும் பேணும்சமூகத்தில் நீதியை நிலைநாட்டியவர்’ – பேராயர் ஸ்தனிஸ்லாஸ் ஃபெர்ணான்டஸ் 2008-ஆம் ஆண்டு, கத்தோலிக்கக் கிறிஸ்தவக் கூட்டமைப்பின் முக்கிய தொலைத்தொடர்பு மையமான சாந்தோம் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதை கலைஞர் கருணாநிதிக்கு வழங்கிப் பேசியபோது, பேராயர் உரையின் பகுதியில் இருந்து…

இந்த விருதுடன் வந்த 10 லட்ச ரூபாய் விருதுத் தொகையை இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அளித்துச் சென்ற வள்ளல், தலைவர் கலைஞர்!’

அண்ணாவுக்குப் பிறகு தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பேற்ற கலைஞர், தொடக்கம் முதலே சிறுபான்மை மக்கள்மேல் தனி மதிப்பு கொண்டிருந்தவர். கிறிஸ்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு, ஜெயலலிதா கொண்டுவந்த கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டம், மண்டைக்காடு கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கேட்டுப் போராட்டம், ஒடுக்கப்பட்ட சாதி கிறிஸ்தவர்களைப் பட்டியல் சமூகத்தவராக அறிவிப்பதற்கான போராட்டம் என கிறிஸ்தவர்களுக்கான மாபெரும் அரணாக நின்றவர், முத்தமிழறிஞர் கலைஞர். சங் பரிவாரங்கள் ‘தமிழ்நாட்டையே கிறிஸ்தவமயமாக்குகிறார்’ என சரமாரியாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அடுக்கியபோதும் அதை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டார் கலைஞர்.

‘சிறுபான்மையின சமூகத்தினர்மீது, அது இஸ்லாமியராக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும், என்றைக்கும் தி.மு.க. ஆட்சி துணையாக இருக்கும்; இன்னும் சொல்லப்போனால், அமைந்திருக்கும் தி.மு.க. கூட்டணி என்றைக்கும் துணையாக இருக்கும்.

இங்கே யாரும் சிறுபான்மையினச் சமுதாயம் சீரழிக்கப்பட வேண்டும்; சீர்குலைக்கப்பட வேண்டும்; வன்முறைக்கு ஆளாக்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்றுக்கொள்பவர்கள்… இந்தியா முழுவதும் ஆங்காங்கே நடைபெறுகின்ற வன்முறைகள், சிறுபான்மையின சமுதாயத்துக்கு அறைகூவல் விடுகின்ற முறையிலே நடைபெறுகின்றன. வன்முறைகளை எல்லாம் இந்த மாமன்றம் கண்டித்திருக்கிறது’ என ஆளுநர் உரை மீதான தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். (23.02.1999)

சிறுபான்மை மக்கள் நலம் பேண ‘தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் முதன் முதலில் தி.மு.க. ஆட்சியில் 13.2.1989 அன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகமும் (TAMCO) 1.7.1999 அன்று கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வந்தபோது, இதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் இதனை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தோடு ஒன்றாக இணைத்தார். 2006-ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு மீண்டும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தைத் தனியே செயல்படும் அமைப்பாக்கியது.

இதன்மூலம் சிறுபான்மையினத் தொழில் முனைவோர், சிறுதொழில் 2006-2010 ஆண்டு காலத்தில் கலைஞர் ஆட்சியில் இந்தக் கழகம் மூலம் மற்றும் குறுந்தொழில் தொடங்க கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. தனி நபர் கடனாக 6,900 நபர்களுக்கு 2826.66 லட்ச ரூபாய் குறைந்த வட்டிக் கடன் வழங்கப்பட்டது.

2007-2008-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்துக்கு அரசின் தனிக் கவனம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலனுக்கென ஒரு தனி இயக்குநரகம் அமைக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி 6.4.2007 அன்று ‘சிறுபான்மையினர் நல இயக்ககம்’ அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

கிறிஸ்தவர்கள் இன்றும் விடுதலை உணர்வுடன் தங்கள் மதம் குறித்துப் பொதுவெளியில் பேசவும் பரப்புரை செய்யவும் பெரும் அரணாக அன்று இருந்தவர் கலைஞர். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவர முயற்சி செய்ய, அதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர் கலைஞர்.

1982-ஆம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோசமான கலவரம் மூண்டது. அதற்கு, மதம் மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்தான் காரணம் என்று தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணை செய்தது, வேணுகோபால் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், ஆணையத்தின் முதல் பரிந்துரையே மதமாற்றத் தடைச்சட்டம்தான்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

‘மத மாற்றத்தால் இனக் கலவரங்கள் ஏற்படுவதாலும், சட்டம்- ஒழுங்கு மிகவும் பாதிக்கப்படுவதாலும், மத்தியப் பிரதேசம், ஒரிசா, அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் வன்முறை, ஏமாற்றுதல் போன்ற காரணங்களால் அல்லது பொருளுதவி என்ற போர்வையில் மத மாற்றத்தைத் தூண்டுதல் என்பன போன்ற காரணங்களால் செய்யப்படும் மத மாற்றத்தைத் தடைசெய்து சட்டம் இயற்றியுள்ளது போல், தமிழ்நாட்டிலும் இதனைப் பின்பற்றி ஒரு சட்டம் இயற்றலாம் என பரிந்துரைத்தது.

இதனைத் தொடர்ந்து, 1997-ஆம் ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் மதமாற்றம் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதாவைக் கொண்டுவந்தார், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. ‘மனதார விரும்பி மதம் மாறுபவர்களுக்கு இந்தச் சட்டத்தால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், வற்புறுத்தியும் ஆசை காட்டியும் ஏமாற்றியும் மதமாற்றம் செய்ய முயற்சிசெய்பவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள்’ என்றும் அறிவித்தார்.

சட்ட மசோதா அறிமுகமான அடுத்த நாளே தி.மு.க., பா.ம.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் சிறுபான்மை இன அமைப்புகளும் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத்தெரிவித்தன. இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தின. அக்டோபர் 24, 2002 அன்று எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், சென்னையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றும் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் திராவிடத் தூண்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் கருத்துக்கு மாறாக இந்த சட்டம் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அதனைக் கடுமையாகச் சாடினார் கலைஞர் கருணாநிதி.

‘இந்தச் சட்டம் சிறுபான்மையினர் விரோதமானது; அவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தக்கூடியது. பொறுப்பான அரசு அனைத்துத் தரப்பு மக்களையும் சமத்துவத்துடன் நடத்த வேண்டும்’ என்றார்.

இது எதையும் கண்டுகொள்ளாத ஜெயலலிதா, அக்டோபர் 31, 2002 அன்று, இந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். 104 பேர் இதற்கு ஆதரவாகவும் 73 பேர் எதிராகவும் வாக்களிக்க, சட்டம் அமலுக்கு வந்தது. 2003-ஆம் ஆண்டு ஜூன் மாதம், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இந்தக் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், ‘மதத் தலைவராக இருந்தாலும், ஒரு ஜனநாயக அரசு நிறைவேற்றிய சட்டம் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு திருத்தந்தைக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என வழக்கம்போல தன் தட்டையான வாதத்தை முன்வைத்தார், ஜெயலலிதா.

அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதையடுத்து 18.5.2004 அன்று கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை நீக்கும் அவசர சட்டத்தை ஜெயலலிதா பிறப்பித்தார். ஆனால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு கட்டாய மத மாற்றத் தடை (நீக்கம்) சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது. 31.5.2006 அன்று அந்தச் சட்ட முன்வடிவு ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. 2021-க்குப் பிறகு, தொடர்ச்சியாக இந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் எனப் பேசத் தொடங்கியுள்ளது, பா.ஜ.க.

ஒன்றிய அரசின் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 331, ஆங்கிலோ இந்தியர்களுக்கு மக்களவையில் இரண்டு இடங்களும் ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் ஓரிடமும் உறுதிசெய்தது. சிறுபான்மையிலும் சிறுபான்மையான ஆங்கிலோ இந்திய மக்களுக்கு இந்த ஒதுக்கீடு பேருதவி புரிந்தது. தமிழ்நாட்டில் இந்த ஒதுக்கீட்டின்மூலம் முதல் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தவர். ஆலிஸ் சுவாரெஸ். காமராஜரால் பரிந்துரைக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினரான ஆலிஸ், 1967ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகும், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கீழ் தன் பணிகளைத் தொடர்ந்தார். ஜனவரி 25, 2020 அன்று இந்த ஒதுக்கீடு பறிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக இந்த ஒதுக்கீடு தொடர வேண்டும் எனச் சொன்னது தி.மு.க. தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களின் காவலனாக நடந்துகொண்டிருக்கிறது தி.மு.க.

இந்த மக்களின் உரிமையை அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தவறாகக் காட்டி, நயவஞ்சகமாகப் பறித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு, தங்கள் உரிமையை எப்படி மீட்பது எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இம்மக்கள்.

அறிஞர் அண்ணாவின் காலம் தொட்டே, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் திருமூலரின் வாக்கைத் தங்கள் கொள்கையாகக் கொண்ட தி.மு.க, தொடர்ச்சியாகத் தங்கள் மேடைகளிலும் தங்கள் நிர்வாகத்திலும், மதவெறி இல்லாமல், தங்கள் இறைமேல் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இடம் தந்துவருகிறது. சைவ மறையைப் பின்பற்றிய குன்றக்குடி அடிகளார், முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காயிதே மில்லத் பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினருடன் நெருக்கம் பேணி வந்துள்ளது தி.மு.க. ரம்ஜான் நோன்பு திறக்கும் விருந்துகளில் தி.மு.க. தலைவர்கள் கலந்துகொள்வது கடும் விமர்சனத்துக்கு உள்ளானாலும் அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர்; ஈஸ்டர், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

இஸ்லாமியரையும் கிறிஸ்தவரையும் ஒரே கண்ணோட்டத்தில், சமமாகப் பார்க்கிறது தி.மு.க. அவர்கள் உரிமைகளைக் காப்பதில் துணைநிற்கிறது. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்குத் தி.மு.க தரும் பாதுகாப்பு அரண் மிக முக்கியமானது. சில தலைமுறை கிறிஸ்தவர்கள் கல்வியை எவ்வித இடையீடும் இன்றித் தொடர வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 100சதவிகித இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது நாம் அறிந்ததே.

கலைஞர் ஆட்சியில், உயர்கல்வித் (JI) துறையால் ஜூன் 17, 1998 அன்று வெளியிடப்பட்ட G.O.Ms.No.270இன் பிரிவு 8(v), சிறுபான்மையினரால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், தொழில்முறைப் படிப்புகளை வழங்கும்போது, அவர்களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை மொத்த எண்ணிக்கையில் 50 சதவிகிதம் வரை சேர்க்க வழிவகை செய்கிறது. மீதமுள்ள 50 சதவிகிதம் அரசின் ஒதுக்கீட்டு சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதே சமயம், சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான ஒதுக்கீடு 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சாராம்சமாக, இந்த அரசாணை, கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் சிறுபான்மை சமூகத்தின் உரிமையையும், தகுதி அடிப்படையிலான சேர்க்கைகளை உறுதிசெய்வதிலும், இந்த நிறுவனங்களில் சிறுபான்மை மாணவர்கள் குவிவதைத் தடுப்பதிலும் அரசின் கொள்கையையும் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறான அரசாணைகள், சட்டங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சிறுபான்மையினரிடம் விரிவான உரையாடல்கள் நடத்தி, அவர்களின் எண்ணங்களை அறிந்த பிறகே முன்னெடுக்கப்படுகின்றன.

ஒருவேளை அப்படியான சட்டங்கள் கொண்டுவரப்பட்டபின் அது குறித்த சிறுபான்மையினரின் கோரிக்கைகள் என்ன வந்தாலும், அவற்றுக்கும் செவிமடுத்த தகைசால் பெருமை கலைஞரையே சேரும். அப்படியான சம்பவம் 2007ஆம் ஆண்டு நடந்தது. 15.09.2007 அன்று கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் கல்வி நிலையங்களிலும் அரசுப் பணிகளிலும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் தலா 3.5 சதவிகித இட ஒதுகிடேடை  உறுதிசெய்தது.

பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவி இடஒதுக்கீட்டைப் பிரித்து, அதை 23 சதவிகிதமாகக் குறைத்து, ‘பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள்’ மற்றும் ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் இருவருக்கும் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால், மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதமாகவே நிலைநாட்டப்பட்டது. ஆனால், கிறிஸ்தவ இயக்கங்களும் மக்களும் தங்களுக்கு இதனால் எவ்விதப் பாதுகாப்பும் இல்லை, தங்களை இந்த 3.5 சதவிகித ஒதுக்கீட்டுகள் குறுக்குவது கூட கூடாது என்று எதிர்க்குரல் எழுப்பினர். இதனால் தங்கள் வாய்ப்புகள் குறைக்கப்படுவதைப் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தனர்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநாட்டில் இது குறித்து விரிவாக விவாதித்து, சட்டத்தால் தங்களுக்கு ஊறு விளைந்ததே அதிகம் எனக் கண்டனர். அதன்பின் கலைஞரை சந்தித்த அப்போதைய மயிலை ஆயர் அருள்திரு சின்னப்பா உள்ளிட்ட பல கிறிஸ்தவத் தலைவர்கள், தங்கள் கருத்துகளை முன்வைக்க, அவற்றை கலைஞர் அப்படியே ஏற்றுக்கொண்டார். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித ஒதுக்கீட்டை ரத்துசெய்யும் சட்ட வரைவைக் கொண்டுவந்தார், கலைஞர்

தலித் கிறிஸ்தவர்களுக்காகவும் உரிமைக்குரலை உயர்த்தியவர், கலைஞர். 1950ஆம் ஆண்டு வெளியான குடியரசுத் தலைவரின் சர்ச்சைக்குரிய ஆணை, இந்து மதத்தைத் தவிர, வேறு மதங்களைப் பின்பற்றும் எந்தவொரு நபரையும் பட்டியல் இனத்தவராகக் கருத முடியாது என்கிறது. இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டின் பயன்களை அளிக்கும் இந்த அரசாணை, ஒட்டுமொத்த தலித் சமூகத்தை மத அடிப்படையில் பிரிக்கிறது. விரும்பும் மதத்தை தலித் மக்கள் கடைப்பிடிக்க அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. கடந்த 70 ஆண்டுக் காலமாக இந்த ஆணைக்கு எதிராகத் தலித் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அன்றாட வாழ்வில் இன்றும் கடும் சமூக ஒடுக்குமுறையைச் சந்திக்கும் தலித் கிறிஸ்தவ மக்களுக்கு விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் விடியவில்லை இந்த நுணுக்கமான ‘மனுதர்ம ஆணைக்கு’ எதிராகவும் கலைஞர் குரல் எழுப்பினார்.

2011ஆம் ஆண்டு, அப்போதைய ஒன்றிய அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு இது குறித்து கடிதம் எழுதினார். ‘கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களையும் ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 2.4.2010ல் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இது தொடர்பாக நான் ஏற்கெனவே 25.10.1996, 7.8.2006 ஆகிய தேதிகளிலும் ஒன்றிய அரசுக்குக் கடிதங்கள் எழுதி இருந்தேன்.

தமிழ்நாடு அரசு இந்தப்பிரச்சினை தொடர்பாகப் பலமுறை ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியும் இன்னும் ஒன்றிய அரசு முறையான அனுமதி தரவில்லை. ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் சட்டம் 1950, அடுத்து 1956ஆம் ஆண்டு வந்த சட்டத் திருத்தம், 1976ல் வந்த ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத் திருத்தம் அனைத்திலும் ஒடுக்கப்பட்டோரை மதரீதியாக வேறுபடுத்தக் கூடாது என்று தெளிவாக உள்ளது. சீக்கியரும் பௌத்தரும் ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எந்த மதத்தில் இருந்தாலும் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களும் சமூக பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே அவர்களையும் ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து உறுதியளித்துள்ளது. 6.1.2011ல் சட்டமன்ற ஆளுநர் உரையிலும் ஒடுக்கப்பட்ட தலித் கிறிஸ்தவர்களை ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 21.2.11 அன்று உங்கள் (பிரதமர்) தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை அரசியல் விவகாரக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதில் தலையிட்டு ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உரிய சட்டத்தை நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டுவந்து, சட்டமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’.

கலைஞரின் காலகட்டத்தில்தான் கிறிஸ்தவர் நலனுக்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன; தொடர்ச்சியாக இந்துத்துவ எதிர்ப்பையும் புறந்தள்ளி, சிறுபான்மை மக்களின் காவலாகப் பொதுச் சமூகத்தில் நின்ற தலைவர், கலைஞர். ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தபோது அவற்றை சிறுபான்மை நலனுக்காக மிகச்சரியாகப் பயன்படுத்தினார்; ஜனநாயக முறைக்கு உரிய மதிப்பளித்து, ஆட்சியில் இல்லாதபோதும் அவர்கள் நலனுக்காகத் தொடர்ந்து குரல் உயர்த்திவந்தார். இதுகாறும் தமிழ்நாடு கண்டிராத சிறுபான்மை மக்களின் பாதுகாவலராகக் காலமெல்லாம் நினைவில் வைக்கத்தக்கவர், கலைஞர்.

மு.க.ஸ்டாலின்

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்கிற கொள்கையின்படி செயல்படுகிறார். தற்போதைய முதல்வர் ஸ்டாலின், கலைஞரின் அதே பாதையில் சீரோடும் சிறப்போடும் செயல்படுகிறார். ஆட்சிப் பொறுப்பில் ஏறியதுமே சிறுபான்மை மக்கள் நலனுக்காகப் பல முன்னெடுப்புகளைச் செய்தார்.

2022ல் கிறிஸ்தவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலனுக்காக ‘கிறித்துவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்’ அமைக்கப்பட்டது. உறுப்பினர்களைப் பதிவுசெய்வது மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து 18.01.2023ல் விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நலிவுற்று வாழும் தேவாலய ஊழியர்களுக்கு இந்த வாரியம் பயன் நல்கும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவி சங்கங்கள் மூலம் ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் வயதான முஸ்லிம், கிறிஸ்தவப் பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மாவட்டத்துக்கு ஒன்றாக 38 சங்கங்களும், அது தவிர கரூர், மதுரை, தேனி மாவட்டங்களில் கூடுதல் சங்கங்களும் என மொத்தம் 41 கிறிஸ்தவப் மகளிர் உதவும் சங்கங்கள் உள்ளன. இவற்றுக்கு விதைத் தொகையாக தலா 1 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு கிறிஸ்தவப் பெண்கள் உதவி சங்கங்களுக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இச்சங்கங்கள் நன்கொடை மூலம் திரட்டும் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப, இம்மானியம் இரு மடங்காக 1:2 என்ற விகிதாச்சாரத்தில் ஓர் ஆண்டுக்கு ஒரு சங்கத்துக்கு அதிகபட்சமாக 20 லட்ச ரூபாய் வரை வழங்கப்பட்டுவருகிறது.

தேவாலயங்களைப் பழுதுபார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. மதுரை புனித ஜார்ஜ் தேவாலயம், தஞ்சாவூர் சுவார்ட்ஸ் தேவாலயம்,சேலம் கிறிஸ்து தேவாலயம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்படவுள்ளன. 19 மாவட்டங்களில் உள்ள 30 தேவாலயங்களுக்குப் புனரமைப்புப் பணிகளுக்கென 78 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. 2023ஆம் ஆண்டு இதற்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தலித் கிறிஸ்தவர்களின் நலனைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் தலித் கிறிஸ்தவர்களைச் சேர்க்க வேண்டும் என பா.ஜ.க ஒன்றிய அரசை வலியுறுத்த இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், இதற்கென ஏற்கெனவேஅமைக்கப்பட்ட ஐஸ்டிஸ் பாலகிருஷ்ணன் கமிஷன் தன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் முன்பாக அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தினார். வழக்கம்போல இந்தத் தீர்மானத்தின்போது வானதி சீனிவாசன் தலைமையிலான பா.ஜ.க.வினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். ‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இட ஒதுக்கீட்டைத் தவிர, பட்டியல் சாதியினருக்கு வழங்கப்படும் மற்ற எல்லா உரிமைகளும் தலித் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன’ என்ற முதல்வர், ‘பௌத்தர்களுக்கும் சீக்கியர்களுக்கும் தரப்படும் இட ஒதுக்கீடு, தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்’ என்றார். தொடர்ந்து இது குறித்துப் பேசியும் வருகிறார்.

சிறுபான்மை மக்களின், குறிப்பாக கிறிஸ்தவர்களின் உரிமையைப் பாதுகாக்க, கடும் சட்டப் போராட்டத்தையும் தி.மு.க அரசு முன்னெடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அஃபிடவிட் ஒன்றில், ‘சட்டவிரோதமான வழிகளைப் பயன்படுத்தாத வரை, மிஷனரிகள் கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்கள் தங்கள் மதத்தை அமைதியாகப் பரப்புவதற்கும், தங்கள் நம்பிக்கைகளை மாற்றுவதற்கும் உரிமையை உறுதிசெய்கிறது என்றும், மதமாற்றத் தடைச் சட்டங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக, தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது’ என்றும் தி.மு.க. அரசு வலியுறுத்தியது.

குடிமக்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் தனியுரிமையைத் தடுப்பது பொருத்தமானதல்ல என்றும் தி.மு.க. தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியது. இதற்காக மதவெறி பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கடும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு.

ஆனால், இந்த எதிர்ப்பையும் மீறி, சிறுபான்மையினர் கல்வி. வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டில் இவ்வரசு கவனம் கொண்டுள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், அவற்றுக்கான ஒதுக்கீட்டை உயர்த்துவதன் மூலமும், சிறுபான்மையினர் வளர்ச்சியை தி.மு.க. அரசு உறுதிசெய்துவருகிறது.

ஒரு காலத்தில் ஜெயலலிதா, தி.மு.க. அரசை ‘மைனாரிட்டி’ அரசு என்று எண்ணிக்கையை முன்னிட்டு எள்ளி நகையாடிவந்தது நினைவிருக்கலாம். சிறுபான்மையினர் நலனுக்கு தி.மு.க. தொடர்ந்து எடுத்துள்ள நடவடிக்கைகளை உற்றுநோக்குங்கால், உண்மையில் இது ‘மைனாரிட்டிகளுக்கான’ அரசு என்றே சொல்ல வேண்டும்!

75 ஆண்டுகள் என்பது நீண்ட நெடிய பயணம். அந்தப் பயணத்தில் கிறிஸ்தவர்களின் பற்றுக்கோடாக, வழித்துணையாக, ஆதரவாகக்கைபிடித்துப் பயணித்துக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, அனைத்து கிறிஸ்தவர்களின் சார்பாக, அவர்களின் வாழ்த்தையும் நன்றியையும் உரித்தாக்குவதில் பெருமகிழ்வடைகிறேன். எம் வழியும் ஒளியுமாக இருந்து இன்னும் ஆண்டாண்டுக் காலம் தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களை வழிநடத்திட இயற்கையை வேண்டுகிறேன்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

 

MUST READ