கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் மத்திய தொல்லியல் துறை தாமதித்து வருவது மத்திய பாஜக மற்றும் மாநில திமுக அரசுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் சித்தாந்த மோதலை மீண்டும் பற்றவைத்துள்ளது என்று தி வயர் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

கீழடி அகழாய்வு மற்றும் அதன் ஆய்வு முடிவுகளை வெளியிடும் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து தி வயர் ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: கீழடி அகழாய்வு குறித்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் 982 பக்க விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்திய தொல்லியல் துறை (ASI) அதை மீண்டும் திருத்தம் செய்யக்கோரியுள்ளது. இந்த அறிக்கை “அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை” என்று ASI கூறியுள்ளது. ஆனால், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளுக்கு தலைமை தாங்கிய ராமகிருஷ்ணன், இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். அடுத்த சில நாட்களிலேயே, அவர் புதுடெல்லியில் இருந்து கிரேட்டர் நொய்டாவிற்கு மாற்றப்பட்டார்.
ஜூலை 17 அன்று ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ராமகிருஷ்ணன் எந்த ஒளிவுமறைவும் இன்றி பேசினார். கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை திருத்தம் செய்யச் சொன்னது “குற்றவியல் மற்றும் ஒழுக்கமற்ற செயல்” என்று அவர் கூறினார். இது அறிவியல் பூர்வமான தொல்லியலின் அடிப்படையையே அசைப்பதாகவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் வாதிட்டார். அவரது இடமாற்றமும், மத்திய அரசின் நிலைப்பாடும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் சித்தாந்த மோதலை மீண்டும் பற்றவைத்துள்ளது. இது அடையாளம், கலாச்சார வரலாறு, மற்றும் அதை யார் எழுதுவது போன்ற ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.
மண்ணில் எழுதப்பட்ட ஒரு கதை
சங்க காலத்தைச் சேர்ந்த கீழடி, மதுரைக்கு தென்கிழக்கே சுமார் 13 கி.மீ. தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் அமைதியாக உள்ளது. ஆனால், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அமைதியை கலைத்துள்ளன. இந்திய தொல்லியல் துறை 2014 முதல் 2017 வரை கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டது. ராமகிருஷ்ணன் அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்ட பிறகு, மூன்றாவது கட்டத்திற்கு தொல்லியல் அறிஞர் பி.எஸ். ஸ்ரீராமன் தலைமை தாங்கினார். அவர், அகழாய்வு தளத்தில் தொடர்ச்சியான கட்டமைப்பு எச்சங்கள் இல்லை என்று தெரிவித்தார். அகழாய்வு நிறுத்தப்பட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் மீண்டும் தொடங்கியது. அதன்பிறகு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) பொறுப்பேற்றது. கடந்த ஆண்டு 10-வது அகழாய்வு பருவம் தொடங்கிய நிலையில், கீழடி வெறும் தொல்லியல் தளமாக இல்லாமல், இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றிய போர்க்களமாக மாறியுள்ளது.
TNSDA நடத்திய நான்காவது கட்ட அகழாய்வில், வியக்கத்தக்க வகையில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் செங்கல் கட்டமைப்புகள், சுடுமண் கிணறுகள், உடைந்த கூரை ஓடுகள், தங்க அணிகலன்கள், இரும்பு கருவிகள், கண்ணாடி மற்றும் கார்னிலியன், அகேட் போன்ற அரை விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள் ஆகியவை அடங்கும். மட்பாண்டங்களில் கருப்பு மற்றும் சிவப்பு நிறப் பொருட்கள் முதல் அரிய அர்ரெட்டின் வகை பொருட்கள் வரை கிடைத்தன. புளோரிடாவில் உள்ள பீட்டா அனலிட்டிக் ஆய்வகத்தால் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங், இந்த தளம் கி.மு. 6 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக காட்டியது. இது கங்கை சமவெளியில் நகரமயமாக்கலின் கால வரிசையுடன் பொருந்துகிறது. புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கே. ராஜன் கருத்துப்படி, இது கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் பிராந்தியத்தில் ஒரு சம காலத்திலான நகர நாகரிகம் செழித்து வளர்ந்திருப்பதை நிரூபிக்கிறது. “கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பெரிய அளவிலான செங்கல் கட்டமைப்புகள் மற்றும் அதிக பொருளாதார மதிப்புள்ள கலைப்பொருட்கள், கங்கை சமவெளியில் நடந்தது போலவே, தமிழகத்திலும் இரண்டாவது நகரமயமாக்கல் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் நடந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது” என்று அவர் கூறுகிறார்.
இந்த வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, தமிழ் (தமிழி-பிராமி) எழுத்துக்களைக் கொண்ட 56 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சிலவற்றில் குவிரன் மற்றும் ஆதன் போன்ற முழு பெயர்களும், மற்றவற்றில் பகுதி பெயர்களும் உள்ளன. முக்கியமாக, இந்த எழுத்துக்கள் பானைகள் சுடப்பட்ட பின்னரே பொறிக்கப்பட்டு உள்ளன. இது குயவர்களால் இல்லாமல், பயனர்களாலேயே செதுக்கப்பட்டதை குறிக்கிறது. இது பரவலான கல்வியறிவுக்கு வலுவான ஆதாரத்தை வழங்குகிறது.
பாரம்பரியமா அல்லது ஆதிக்கமா?
கீழடி கண்டுபிடிப்புகள், இந்திய கல்வியறிவும், நாகரிகமும் வடஇந்தியாவில் மட்டுமே தோன்றின என்ற நீண்ட காலமாக நிலவி வந்த கருத்துக்களை நேரடியாக சவால் விடுக்கின்றன. இதனால்தான் அவை எதிர்ப்பை சந்திப்பதாக இருக்கலாம்.
ஜூன் 10 அன்று, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அறிக்கையில் “தொழில்நுட்பத் துல்லியம் இல்லை” என்றும், “மேலதிக அறிவியல் பூர்வமான சரிபார்ப்பு தேவை” என்றும் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இது “தமிழர் பாரம்பரியத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்” என்றும், “தமிழ் பெருமையை குறைப்பதற்கான அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி” என்றும் பதில் அளித்தார். மத்திய அரசு கீழடியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதை நிறுத்தக்கோரி மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய பெரிய அளவிலான போராட்டங்களால் அரசியல் வெப்பநிலை மேலும் அதிகரித்தது.
மூத்த தொல்லியல் அறிஞர் சி. சாந்தலிங்கம், ராமகிருஷ்ணனின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க தயங்குவது ஒரு ஆழமான கலாச்சார மோதலைப் பிரதிபலிக்கிறது என்று எச்சரித்தார். “பல தசாப்தங்களாக இந்தியாவில் கல்வியறிவு வடக்கில் தொடங்கியது என்று எங்களுக்கு கூறப்பட்டது. கீழடி அதை அறிவியல் பூர்வமாக நிராகரித்துள்ளது. ஆனால் பாஜக அதை ஏற்க தயாராக இல்லை.” அவர் இந்த சர்ச்சையை, சிந்து சமவெளி நாகரிகத்தை “சிந்து-சரஸ்வதி” நாகரிகமாக மாற்றும் முயற்சிகளுடனும் இணைத்தார். திராவிடர்களின் பங்களிப்புகளை இந்திய வரலாற்றில் இருந்து அழிக்கும் பரந்த அஜெண்டாவின் ஒரு பகுதியாக இதை அவர் பார்க்கிறார். “இது வெறும் தொல்லியல் மட்டுமல்ல,” “இது திராவிட- ஆரிய கலாச்சாரப் போரின் தொடர்ச்சி.” என்று அவர் கூறினார்.
மத்திய அரசின் விளக்கம்
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் கீழடி அறிக்கை குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பினர். திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “ஒரு அறிக்கையை நிராகரிக்கும் நடைமுறை இல்லை. அகழாய்வுக்கான தலைமை தொல்லியல் நிபுணருடன் இணைந்து, நிபுணர்களின் முடிவுகளை முறையாக சரிபார்த்து, இணைத்த பிறகு ASI அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும். நிபுணர்களின் கருத்துகள் தலைமை தொல்லியல் நிபுணருடன் பகிரப்பட்டுள்ளன, அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்று கூறினார். நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளையும் அமைச்சர் பட்டியலிட்டார். நிபுணர்களின் கூற்றுப்படி, கீழடியின் முதல் காலப்பகுதிக்கு (Period 1) வழங்கப்பட்டுள்ள கி.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் “சரியாக நியாயப்படுத்தப்பட வில்லை” என்றும், “மற்ற இரண்டு காலப்பகுதிகளும் அறிவியல் AMS தேதிகள் மற்றும் அடுக்கடுக்கான விவரங்களின் அடிப்படையில் மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர். “தற்போதைய நமது அறிவின் நிலையில், மிகப்பழைய காலப்பகுதிக்கு, கி.மு. 300-க்கு முந்தைய காலத்தில் எங்கோ தோன்றியதாக அதிகபட்சமாக நாம் பரிந்துரைக்கலாம்” என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தலைமை தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒன்பது மாதங்களுக்குள் மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டதற்கான காரணம் மற்றும் அகழாய்வு தொடர்ச்சியில் அதன் தாக்கம் குறித்த திமுக எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தொல்லியல் அதிகாரிகளுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்வது ஒரு வழக்கமான நிர்வாக விஷயம்” என்று கூறினார். மற்றொரு திமுக எம்.பி. திருச்சி சிவாவின் கேள்விகளுக்கு பதிலளித்த கலாச்சார அமைச்சர், “கீழடி அகழாய்வின் அடிப்படையில் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற ASI முழுமையாக கடமைப்பட்டுள்ளது” என்று உறுதியளித்தார்.
மாநில ஆதரவு, அறிவியல் தெளிவு
தமிழக அரசு தனது கலாச்சார நிலைப்பாட்டிற்கு ஆதரவாக, 2025-2026 பட்ஜெட்டில் கலைப்பொருட்களின் அறிவியல் ஆராய்ச்சிக்கு ரூ.7 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் பண்டைய டிஎன்ஏ பகுப்பாய்வு, உலோகவியல் ஆய்வுகள், மைக்ரோ பாட்டனி, மகரந்த பகுப்பாய்வு, OSL டேட்டிங் மற்றும் செராமிக் தொழில்நுட்பம் போன்ற மேம்பட்ட சோதனைகளுக்காக சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைப்பும் அடங்கும்.
மதுரை எம்.பி.யும், எழுத்தாளருமான எஸ். வெங்கடேசன், கீழடிக்காக அயராது குரல் கொடுத்து வருபவர். அவர், “பாஜகவின் சித்தாந்த நிலைப்பாடு தமிழர்களின் பண்டைய உண்மைக்கும், கீழடி வெளிப்படுத்துவதற்கும் எதிரானது.” என்று கூறினார்.