பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவரை சமாதானம் செய்யும் முயற்சிகளில் பாஜக இறங்கியிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தமிழக வருகை, ஒபிஎஸ்க்கு பிரதமரை சந்திக்க அனுமதி வழங்காதது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:-தமிழ்நாட்டில் தற்போது ஒரு அரசியல் சூழல் செட்அப் ஆகியுள்ளது. திமுக சார்பில் ஓரணியில் திரள்வோம் என்கிற பெயரில் வீடு வீடாக சென்று கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல், பாமக அன்புமணியும் நடை பயணம் மேற்கொள்கிறார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை என்பது பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளிக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி எங்கே சென்றாலும் ரோடு ஷோ போன்று சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல் திருச்சி, கங்கைகொண்ட சோழபுரத்தில் அவர் ரோடுஷோ போன்று நடத்தியுள்ளார்.

பாஜக எந்த மண்ணில் வளர வேண்டும் என்று நினைக்கிறார்களோ, முதலில் அந்த மண்ணில் உள்ள அடையாளங்களை கையில் எடுத்து அவர்களை பெருமைப்படுத்துவார்கள். மண்ணுக்கேற்ற கடவுள்கள், கலாச்சாரம், பண்பாடுகளை முதலில் கையில் எடுக்க வேண்டும் என்று முதலில் நினைப்பார்கள். அதனுடைய ஒரு பகுதிதான் முருகனுக்கு எடுத்த விழா, ராஜேந்திர சோழனுக்கு எடுத்த விழா ஆகும். சோழர்களை பாரத பண்பாட்டுடன் பிரதமர் மோடி தொடர்பு படுத்தி பேசுகிறார். அவர்களை பொருத்தவரை பக்தியோடு சேர்ந்து பாரம்பரியம், கலாச்சாரம் ஆகிய எல்லாவற்றையும் இந்து சமயத்திற்குள் அடக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய நோக்கமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டு மண் வித்தியாசமானதாகும். இங்கிருக்கும் சோழர்களை பாஜகவினர் கொண்டுபோய் இந்து மதத்திற்குள் அடக்க முடியாது.
தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ்-ஐ சந்திக்காமல் சென்றது என்பது, அவருக்கு மிகப் பெரிய அவமதிப்பாகும். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீங்கள் சொன்னபடி ஆடிக் கொண்டிருந்தவர். உங்களுக்கு விசுவாசமாக இருந்தவர் ஓபிஎஸ். அவரை பார்ப்பதற்கு ஒரு 5 நிமிடங்கள் ஒதுக்கினால் என்ன? எடப்பாடி பழனிசாமி கோபித்துக் கொள்வார் என்றால், அவர் உங்களுக்கு என்ன உண்மையாக இருப்பாரா? என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் வாசன், ஏ.சி.சண்முகம் போன்றவர்களுக்கு சந்திக்க வாய்ப்பு தருகிறபோது, ஓபிஎஸ்-க்கு மட்டும் அனுமதி வழங்காதது ஏன்? மூன்று முறை தமிழ்நாட்டின் தற்காலிக முதல்வராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தவர் ஓபிஎஸ். அவருக்கு ஏன் சந்திக்க வாய்ப்பு தரப்படவில்லை. பாஜக செய்தது மிகப் பெரிய தவறாகும். தற்போது ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி ஓபிஎஸ்-ஐ சந்திக்காமல் சென்றாதால், அவர் சார்ந்த சமுதாயம் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஓபிஎஸ் கட்சியில் தன்னுடைய பதவியை தக்க வைப்பதற்காக நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக போராடி வருகிறார். ஆனால் அரசியல் ரீதியாக எடப்பாடி உடன் மோதவில்லை. அப்படி இருக்கும்போது பிரதமரோ, அமித்ஷாவோ, ஒபிஎஸ்-ஐ சந்திக்க தயங்குவது ஏன்?
எடப்பாடி பழனிசாமியிடம் 20 சதவீத வாக்குகள் உள்ளன என்பதால், அவரை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று பாஜக தலைவர்கள் நினைக்கலாம். ஆனால் அவர் கடைசி வரை உங்களுக்கு உண்மையாக இருப்பாரா? அவர் பாஜகவை பக்கத்தில் வைத்துக்கொண்டே தவெகவுக்கும், சிபிஐ, சீமானுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கிறார். அவருக்காக ஓபிஎஸ்- சந்திக்காதது மிகப்பெரிய தவறாகும். ஆனால் ஓபிஎஸ்-ஐ பின்னர் டெல்லியில் சந்தித்து பேசுவதாக பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில், ஓபிஎஸ் அதை நம்பி பாஜகவுக்கு விசுவாசமாக இருந்தார் என்றால் அவர் ஓரங்கட்டப்படுவார். எடப்பாடி கடைசி வரை பாஜக உடன் கூட்டணியை தொடரும்பட்சத்தில், ஓபிஎஸ்-ஐ என்டிஏ கூட்டணிக்குள் அனுமதிக்கவோ, உள்ஒதுக்கீடு வழங்கவோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். எனவே ஓபிஎஸ் தற்போதே தனக்கு என பாதையை வகுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அதைதான் பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு இது வாழ்வா? சாவா? என்பது போன்ற தேர்தலாகும். அவர் கணிசமான அளவில் வெற்றி பெறாவிட்டால் கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விரட்டி விடுவார்கள். எல்லோரும் எதற்காக காத்திருக்கிறார்கள் என்றால்? பொறுத்ததும் பொறுத்தோம் இந்த தேர்தலில் பார்த்துவிட்டு செல்வோம் என்று. இந்த தேர்தலில் எடப்பாடி வெற்றியை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை கட்சியில் இருந்து வெளியே தள்ளிவிடுவார்கள். வேண்டுமெனில் கொங்கு மண்டலத்தில் ஒரு கட்சியாக இருக்குமே தவிர தமிழ்நாடு முழுவதும் பரந்துபட்ட கட்சியாக இருக்காது. 4 முனை போட்டியில் திமுகவுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று நினைத்தார் என்றால் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை கழட்டிவிட்டு தவெக பக்கம் சென்றுவிடுவார். இதனை தடுப்பதற்காக தான் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த திட்டத்தை போடுகிறார். ஓபிஎஸ் தவெக பக்கம் சென்றார் என்றால், எடப்பாடியால் அங்கு வர முடியாது அல்லவா? ஓபிஎஸ் செல்லும்போது தினகரனும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது தென் மாவட்டங்களில், அந்த கூட்டணி செல்வாக்கு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த கூட்டணியில் பாமகவும் சேர்ந்தால் வடமத்திய மாவட்டங்களில் இருந்தும் வாக்குகளை பெறலாம். ஒரு சில நாடகளில் ஓபிஎஸ் இடம் இருந்து ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம். தாங்கள் என்டிஏ கூட்டணியில் இருந்து வந்த நிலையில், தற்போது எந்த அணியிலும் இல்லை. தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்று சொல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பாஜக செய்கிற பல வேலைகள், அவர்களது கூட்டணியை ஒற்றுமையாக வைத்துக் கொள்ளவில்லை. ஆட்சியில் பங்கு என்று சொல்கிறபோது எந்த கட்சியும் அவர்களுடன் வந்து சேரவில்லை என்கிறபோதே அது பலம் பெறவில்லை என்பது தெரிகிறது. மேலும், சேர்ந்திருக்கும் இரு கட்சிகளுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதனால் எடப்பாடி தனியாக பிரச்சாரம் போகிறபோது கூட்டம் வந்தாலும், அது ஒட்டுமொத்தமாக வாக்குகளாக மாறுமா என்பது சந்தேகம்தான். பாஜகவின் நோக்கம் என்பது அதிமுக உடன் இருந்து 4 சீட்டுகளை 15ஆக உயர்த்த முடியுமா? என்பதுதான். திமுக, பாஜக எதிர்ப்பை பலமாக காட்டுகிறபோது நமக்கும் பாதிப்பு ஏற்படும் என்கிற கவலை எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. பாஜக தரப்பில் எடப்பாடி மீது முழுமையான சந்தோஷம் இல்லை.மக்களவை தேர்தலில் அதிமுக தனியாக சென்றதால்தான் அவசியமின்றி சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி வைக்கும் நிலை ஏற்பட்டது.
நாம் ஏற்கனவே சொன்னது போல பிரதமர், எடப்பாடியிடம் பெரிய அளவில் பேசவில்லை. பிரதமர் இறங்கிவந்தபோது அவரை பார்த்து மனு அளித்துள்ளார். ஆனால் தனியாக பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. அதுவே அவருக்கு ஏமாற்றம்தான். பிரதமருக்கு எடப்பாடியை சந்திக்க விருப்பம் இல்லை. எதுவாக இருந்தாலும் அமித்ஷாவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்பதுதான் அவருடைய கருத்தாகும். கோரிக்கை மனு கொடுத்தால் வாங்கிகொள்வோம். அவ்வளவுதான். ஆனால் ஓபிஎஸ்க்கு அந்த வாய்ப்புக்கூட தரவில்லை. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.