தேர்தலில் தனித்து நிற்கும் மனநிலையில் விஜய் இல்லை என்றும், அவர் அதிமுக – பாஜக உடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகள் குறித்தும், அவற்றி தாக்கம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுகவின் செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். இது ஒரு சம்பிரதாயக் கூட்டம். இன்னும் சொல்லப்போனால் மாவட்ட செயலாளர்களையும், மற்ற பிற நிர்வாகிகளையும் படிப்படியாக அதிமுக வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் என்கிற நம்பிக்கையை விதைக்கிற கூட்டமாகத்தான் பார்க்க முடியும். அதிமுகவில் பிளவு உள்ளது என்கிற பேச்சு இன்றைக்கு காணாமல் போய்விட்டது. செங்கோட்டையனை கையில் வைத்துக்கொண்டு பாஜக ஏதே கேம் ஆடப் போகிறார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் செங்கோட்டையனுக்கு தலைவணங்கி வணக்கம் வைத்துவிட்டு ஓரமாக போய் உட்கார்ந்துகொண்டார். அந்த காட்சிகளை நாம் பார்த்தோம். திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்காக எந்தவித எல்லைக்கும் போக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதன் முதல்கட்டமாக பாஜக. நாளை சீமான் வருவாரா? விஜய் வருவாரா? என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் தொடரும் என்று தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே பாமக அதிமுக கூட்டணி இல்லாவிட்டாலும், பாஜக கூட்டணியில் இருக்கிறது. அதனால் அதிமுக கூட்டணிக்கு நிச்சயமாக வரும். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு தரவில்லை என்று சின்ன நெருடல் உள்ளது. அதை பாஜக எப்படி கையாளுகிறது என்பது தெரியவில்லை. ஒருவேளை தேமுதிகவின் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி, பாஜக திரும்ப கூட்டணிக்கு கூட்டிக்கொண்டு வரலாம். இல்லாவிட்டால் திமுகவில் செட்டில் ஆகிறோம் என்று போனாலும் போகலாம். ஆனால் பாமக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும். இதற்கு அடுத்து வரப் போகும் கட்சிகள் நாம் தமிழரா? அல்லது தவெக-வா? அவர்கள் ஒரு அணியாக அமைந்தால் திமுகவுக்கு பிளஸ் ஆகவும் போகலாம் மைனஸ் ஆகவும் போகலாம்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஒரு வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும். ஒரு வேளை 3 அணிகளாக களம் சந்தித்தால் அதிமுக கடந்த காலங்களை போல 40, 50 தொகுதிகளில் 5 ஆயிரம், 2 ஆயிரம் என சொற்ப வாக்குகளில் தோற்கும் என்கிற அச்சம் அதிமுக தலைமைக்கு உள்ளது. அந்த பயத்ததின் காணமாகத்தான் சீமானையோ, விஜயையோ சேர்த்துக்கொள்வார் என்பது என்னுடைய வியூகமாகும். 2026 தேர்தலில் சீமானுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. முக்கியமாக நடிகை ஒருவர் அளித்த புகார். அந்த புகாரில் தற்போது உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கி இருக்கலாம். ஆனால் அந்த தடை விலகி விசாரணை நடைபெறுகிறபோது சீமானுக்கு, அரசியல் பின்புலம் இருக்க வேண்டும். அந்த வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் தன்னை காப்பாற்றி கொள்கிற அளவுக்கு அரசியல் ஆதரவு நிலைப்பாடு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சீமான் உள்ளார். ஒரு எம்எல்ஏ கூட ஆக முடியாவிட்டால், அந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் சீமானுக்கு நெகட்டிவ் ஆகிவிடும். அதனால் எதாவது ஒரு வகையில் கூட்டணியில் சேருவார். அதில் அதிமுகவில் சேரத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. தீர்ப்பு நெருக்கடி கொடுக்கும் என்பதால்தான் அவர் கூட்டணிக்கு வருவார் என்று சொல்கிறேன். எப்படி பாஜக முந்திக்கொண்டதோ அதுபோல சீமானும், விஜயும் முந்தினால்தான் அவர்களுக்கு ஓரளவு சீட்டுகள் அதிகமாக கிடைக்கும். நமக்கு 8.2 சதவீத வாக்குகள் உள்ளது என்று விஜய் நினைத்தால், அது வருக்கு தான் எதிராக போகும். அதற்கு முன்பு விஜய் ஒப்புக்கொண்டால் அவருக்கும் கணிமான இடங்களை கொடுத்து, எடப்பாடி ஏதாவது ஒரு வழியில் உதவி செய்வார்.
இன்றைக்கு திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. நலத்திட்ட விஷயங்களில் நிறைய சாதனை படைத்துள்ளார்கள். பெண்களின் வாக்குகள் இந்த முறை திமுகவுக்கு கணிசமாக இருக்கும். புதிய வாக்காளர்கள், மாணவர்கள், பயன்பெற்றவர்கள் எனற நிறைய பரிணாமத்தில் திமுகவுக்கு பிளஸ்தான். ஆனால் 2011ல் விஜயகாந்த் கூட்டணிக்கு வருவாரா வரமாட்டாரா? என்று இருக்கிறபோது கூட்டணி சேர்ந்து விட்டார்கள். பிடிக்காத கூட்டணியாக இருந்தாலும் சேர்ந்துவிட்ட பிறகு அதிமுக, தேமுதிக தொண்டர்கள் இணக்கமாக இருந்தார்கள். அதன் காரணமாக திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வெற்றி பெற்று விட்டது. அந்த நிலைமை இந்த முறை வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஏன் என்றால் திமுக கூட்டணி பலமாக இருந்தாலும், 6 – 10 சதவீதம் நடுநிலையான வாக்குகள் ஒரு அணிக்கு போய் விழுந்தால் அது திமுகவுக்கு பாதகமாக தான் போய் முடியும். விஜய் தனித்து களம் காண்பார் என்கிற அடிப்படையில் ரசிகர்கள் பட்டாளம், அவருக்கான வாக்கு வங்கி தயாராக இருக்கலாம். 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி அவர் தலைமையில் ஆட்சி அமைக்கலாம் என்கிற விருப்பம் இருக்கலாம். ஆனால் அந்த கட்டமைப்பு விஜயிடம் சுத்தமாக கிடையாது. அப்படி தனியாக நின்று தன்னை நசுக்கி கொள்கிற எண்ணம் அவரிடம் இல்லை. ஒரு 5 எம்எல்ஏக்கள் வந்தால் கூட கட்சியை அடுத்தக்கட்ட நிலைக்கு கொண்டுசெல்லும் வாய்ப்பு இருக்கும். அதனால் அவர் கூட்டணிக்கு தயாராக இருப்பார் என்பது என்னுடைய கணிப்பாகும்.
இன்றைக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உருட்டல் மிரட்டல் காரணமாக பாஜகவிடம் அதிமுக அடிபணிந்துவிட்டது. நாசகார சக்தியிடம் அதிமுக அடமானம் போய்விட்டது என்று சொல்லி புலம்பி உள்ளார். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது, தமிழ்நாட்டில் கால் ஊன்றக்கூடாது என்றால் அதற்கு திமுக எப்படி பட்ட ஆட்சியை, நிர்வாகத்தை கொடுத்திருக்க வேண்டும். உங்களுடைய அமைச்சர்கள் செய்கிற ஊழலுக்கு இன்றைக்கு போய் வரிசையாக நிற்கிறீர்களே என்ன காரணம்? ஊழலை குறைத்தீர்களா? அதிமுக ஆட்சிக்காலத்தில் 8 சதவீதம், 13 சதவீதம் என்று இருந்த ஊழல் இன்றைக்கு எத்தனை சதவீதம் சென்றுள்ளது. இன்றைக்கு மத்திய அரசு இ.டி., ஐ.டி., சிபிஐ என்று ஓடிவந்து அடிக்கிறார்கள். நீங்கள் வந்து கதறுகிறீர்கள்? மத்தியில் உள்ள ஏஜென்சிகள் உங்களை கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கிறபோது அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை காப்பற்ற வேண்டும் என்கிற நல்ல எண்ணம் இருந்தால் இப்படிபட்ட நிர்வாகத்தை ஸ்டாலின் கொடுத்திருக்க மாட்டார்.
தமிழ்நாட்டில் ஐ.டி. இன்டஸ்ட்ரீ தொடங்குவதற்கு ஏக்கருக்கு எத்தனை கோடி ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு விசாரணை நடத்த வேண்டும். ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ, மகாராஷ்டிராவிலோ ஒரு ஏக்கர் 99 ரூபாய், 30 வருட லீசுக்கு வாங்குகிறார்கள். இன்றைக்கு எத்தனை ஐ.டி. இன்டஸ்ட்ரீஸ் வெளி மாநிலங்களுக்கு போய்விட்டது என செக் செய்ய சொல்லுங்கள். தெலுங்கானா, ஆந்திர முதலமைச்சர்கள் ஐ.டி. இன்டஸ்ட்ரிகளிடம் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். நல்லாட்சி தந்தால் பாஜக இங்கே கால் ஊன்றவே முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.