பாஜகவில் அண்ணாமலையால் ஓரங்கப்பட்ட பார்ப்பன சமூகத்தினர், நயினார் மூலம் மீண்டும் கட்சிக்குள் நுழைந்துவிட்டனர் என்றும், அவர்கள் அண்ணாமலையை பழிவாங்க முயற்சிப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக குஷ்பூ நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அண்ணாமலையால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.டி.ராகவனுக்கும் மீண்டும் பதவி கொடுத்திருக்கிறார்கள். தமிழக பாஜகவில் இருந்து அண்ணாமலையை ஓரங்கட்டினாலும், பாஜக என்றால் அவர்தான். தவறோ, சரியோ பாஜகவை வளர்த்தது அண்ணாமலைதான். அந்த கட்சிக்கு கூட்டம் சேர்த்தது பாஜக தான். ஆனால் இவர்களால் கட்சியை வளர்க்க முடியாது.
தற்போது மீண்டும் பார்ப்பனர்களை கொண்டுவந்துவிட்டனர். இனி எல்லாமே முடிந்துவிட்டது. மீண்டும் பழைய நிலைக்கே பாஜக சென்றுவிடும். தமிழக பாஜகவில் உழைப்பவர்களுக்கு எப்போது, என்ன பதவி தர வேண்டும் என்று கட்சிக்கு தெரியும் என நடிகை குஷ்பூ சொல்கிறார். அதேவேளையில் விஜயதாரணி பொறுப்பு இல்லாததால் வேதனையில் உள்ளார். பாஜக அகண்ட பாரதம் அமைக்கும்போது, விஜயதாரணிக்கு ஆப்கானிஸ்தானின் அதிபர் பதவியை கொடுப்பார்கள் போல. குஷ்பூ சொல்வதை போல என்ன பதவியை, எப்போது தர வேண்டும் என்று பாஜக தலைமைக்கு தெரியும். அப்போது தருவார்கள்.

பாஜகவின் துணைத்தலைவராக இருந்த நாராயணன் திருப்பதி, பாஜக ஊடகப்பிரிவு தலைவராக மாற்றப்பட்டுள்ளார். அவர் வந்த உடன் அண்ணாமலை 2026 தேர்தலில் போட்டியிட மாட்டார். அவர் தேசிய பதவிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்களை அண்ணாமலை அடித்து துரத்தி, கட்சிக்குள்ளே வரவிடாமல் செய்துவிட்டார். அவர் பதவியில் இருந்து போன உடன் நைனார் நாகேந்திரனை வைத்து மீண்டும் கட்சிக்குள்ளே வந்துவிட்டார்கள். அப்படி உள்ளே வந்த பிறகு அண்ணாமலையை பழிவாங்க பார்க்கிறார்கள். ஆனால் எத்தனை கும்பல் சேர்ந்தாலும், அவரை ஒன்றும் செய்ய முடியாது. அண்ணாமலை ஆதரவாளர்களான கரு.நாகராஜன், அமர்பிரசாத் போன்றவர்களுக்கும் புதிதாக பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. கரு.நாகராஜன் சரத்குமாரை தான் முதலில் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் வேலைக்கு ஆக மாட்டார் என்று தெரிந்ததும், அண்ணாமலை பக்கம் வந்தார்கள்.

பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அண்ணன் என்றும், ஸ்டாலினும், விஜயகாந்தும் 40 ஆண்டுகால குடும்ப நட்பு என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். இவ்வளவு நாட்களாக இது அவருக்கு தெரியவில்லையா? இப்போதுதான் இது தெரிகிறதா? தேமுதிக என்பது ஒரு பழைய பாத்திரம் போன்ற கட்சியாகும். அதை திமுகவிடம் கிடைக்கும் காசுக்கு எடைக்கு போடுவதற்காக பிரேமலதா சென்றுள்ளார். பிரேமலதாவை கூட்டணியில் சேர்த்து சமாளிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். இருப்பினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்வார்.

திமுக கூட்டணியில் இருந்து வைகோ ஒருபோதும் பிரிந்து செல்ல மாட்டார். அவர்களுக்கு தொகுதிக்கே 500 வாக்குகள் தான் உள்ளது. சுயேட்சையாக போட்டியிடுபவர்களே அந்த வாக்குகளை எடுப்பார்கள். ஆனால் துரை வைகோ டெல்லியில் அதற்கு ஒரு விலை பேசிக் கொண்டிருக்கிறார். பங்கு கேட்பார்கள் என்பதால் கட்சியில் உள்ளவர்களை எல்லாம் விரட்டி விட்டு டெல்லியிடம் விற்பனை செய்யலாம் என்று பார்க்கிறார். ஆனால் வைகோ தான் இருக்கும் வரை கட்சியை விற்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். பாஜக துரை வைகோவிடம் விலை பேசிவிட்டது. ஆனால் அதற்கு வைகோ சம்மதிக்கவில்லை.


