தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுப்பதாகவும், ஆனால் அண்ணாமலை மாநில உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாலையின் நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தொகுதி மறுவரையறை செய்வதற்கு முன்பாக நாம் செய்ய வேண்டிய கடமை என்ன என்றால்? 2026ல் நாம் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை எடுத்து, அதற்கு தகுந்தாற்போல் ஏற்கனவே இருக்கும் 543 தொகுதிகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் திருப்பி மறுபங்கீடு செய்து தர வேண்டும். அப்படி செய்தாலே 80 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்துக்கு 91 சீட்டுகளாக மாறிவிடும். நீங்கள் கூட்டவே வேண்டாம். 543 தொகுதிகளை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டுமா? அப்படி செய்தால் உ.பிக்கு 80 சீட்டுகள் 91 ஆக அதிகரிக்கும். பிகாரில் 40க்கு, 50ஆகவும். ராஜஸ்தானில் 25, 31ஆக மாறும். மத்திய பிரதேசத்தில் 29, 33ஆக மாறும். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், 31 ஆக குறைந்துவிடும். ஆந்திர பிரதேசம் 42, 34 ஆக குறைந்துவிடும். மறுவரையறையே செய்ய வேண்டாம். 2026ல் தன்னிச்சையாக இது வந்துவிடும். அதனால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால், மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்கள் மாநிலங்கள் தங்களுக்கு என்ன வழி என்று கேட்பார்கள். அப்படி என்றால் ஒட்டுமொத்தமாக 880 தொகுதிகள் என்றால், கூடுதலாக 340 எம்.பி. சீட்டுகள் கூடுகிறது. அந்த 340-ஐ விகிதாச்சார அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வோம் என்கிற முடிவை எடுக்க வேண்டும். அதனால்தான் ரேவந்த் ரெட்டி, அவர்கள் யாரை கேட்டு முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்களே முடிவு எடுத்துவிட்டு அதை செயல்படுத்துவதற்குதான் பார்க்கிறார்கள் என்று பாஜகவை நேரடியாக குற்றம்சாட்டுகிறார்கள். அதைநாம் காஷ்மீரில் இருந்து தொடர்ந்து பார்க்கிறோம். சட்டத்தில் வழியில்லை என்றாலும் அதற்குள் புகுந்து வழியை பார்த்துவிடுகிறார்கள். அதற்கு பிறகு நீங்கள் உச்சநீதிமன்றம் செல்வீர்கள். அது முடிய எத்தனை வருடங்கள் ஆகும். அதற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்த வேண்டிய கடமை வந்துவிடுகிறது. பிற மாநிலங்கள் ஏன் குரல் எழுப்பவில்லை என்றால்? தமிழ்நாடு முன்னோடியாக முதலில் குரல் எழுப்பிவிட்டது. தற்போது மற்ற மாநிலங்களை அணிதிரட்டியுள்ளோம்.இதனால் தொகுதி மறுவரையறை சட்டம் கொண்டுவர முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக மத்திய அரசு அனைவரையும் அழைத்துப்பேசி இன்னும் 25 ஆண்டுகளுக்கு பழைய நிலையே தொடரலாம் என்று முடிவு எடுக்கலாம்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். பாஜகவின் கூட்டணி கட்சியான, தெலுங்கு தேசம் ஆட்சியில் இருக்கிற ஆந்திராவும் இதே முடிவை எடுக்கிறார்கள். அப்போது, எல்லா கட்சிகளும் இதே நிலைப்பாட்டில் இருக்கின்றன. மாநில அரசியல் என்பதால் நியாயமாக அண்ணாமலை கருப்புக்கொடி காட்டாமல் போராட்டத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி தான் இருக்க வேண்டும். மாநில உணர்வுகளை காயப்படுத்தாமல்தான் அரசியல் செய்ய வேண்டும். திமுகவுக்கு எதிரான அதிமுக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதுதான் முதிர்ச்சியான அரசியல். மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இதுதான் தமிழ்நாட்டின் உணர்வுகள் இதுதான்.
இது போன்ற நேரங்களில் தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு பல முறை நடத்தியுள்ளோம். கலைஞர் 1969ல் நடத்தியுள்ளார். எம்ஜீஆர் நடத்தியுள்ளார். இது இயல்பான ஒன்றுதான். இதை ஏதோ போர்க்கொடி பிடிப்பது போல பார்க்கிறார்கள். இதேபோன்ற மாநில உணர்வுகள் உ.பி., பீகார், மத்திய பிரதேசத்திலும் இருக்கவே செய்யும். அவர்கள் தொகுதி மறுவரையறையில் கூடுதலாக வழங்க வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். இதற்கான ஒரு தீர்வை எட்ட அனைத்து மாநில அரசுகளையும் அழைத்து பேச நாம் வலியுறுத்துகிறோம் அவ்வளவுதான். அப்படி பார்த்தால் அண்ணாமலையின் வாதம் அடிபடுகிறது. அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதாக நான் பார்க்கிறேன்.
அண்ணாலையின் போராட்டத்தை கருப்புக்கொடிகளை வரவேற்கிறேன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சொல்கிறார். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. அது அண்ணாமலைக்கு புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் மக்களுக்கு புரியும். இன்றைக்கு தமிழகத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்திற்கு இதுதான் காரணம். இதனால் நமக்கு பாதிப்பு ஏற்படும். பிற மாநில தலைவர்கள் வந்துள்ளார்கள். மத்திய அரசை வற்புறுத்தாவிட்டால் அவர்கள் தங்கள் விரும்ப்பப்படிதான் செயல்படுவார்கள் என்ற புரிதல் மக்களுக்கு ஏற்படுகிறது. கூட்டு நடவடிக்குழுவின் அடுத்தக கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இது தென்மாநிலங்களின் அரசியல் வலிமையை காட்டும் நிகழ்வாக பார்க்கலாம். தென்மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசை வற்புறுத்த முடியும் என்றும் நினைக்கலாம். இதற்கு அடுத்தக்கட்டமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்தபடியாக பஞ்சாபில் கூட கூட்டம் நடைபெறலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.