தமிழகம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிப்பதாகவும், நாட்டிற்கு ஏற்றுமதி மூலமாகவும் அதிக வருவாய் ஈட்டித்தருவதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு மிகவும் குறைவான நிதியையே வழங்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- நீங்கள் இவ்வளவு வஞ்சனைகள் செய்தும் தமிழ்நாடு எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்றால்? பள்ளிகல்வி மற்றும் எழுத்தறிவுக்காக மத்திய அரசு ஒதுக்கியது ரூ.78,577 கோடி. ஆனால் தமிழ்நாடு அரசு ரூ.46,867 கோடி. தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். தமிழ்நாடு பிரிவினை வாதம் பேசுவதாக சொல்கிறார்கள். அப்படி பிரிவினைவாதம் பேசும் தமிழ்நாடு, உற்பத்தி அதிகம் தரக்கூடிய தமிழ்நாடு, மத்திய அரசால் குறைவான நிதி பெறும் தமிழ்நாட்டில் 208 ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் ராஜஸ்தானில் 36, குஜராத்தில் 52, பெரிய மாநிலமான மத்திய பிரதேசத்ததில் 45, உ.பி. யில் மொத்தமாகவே 89, ஜம்மு காஷ்மீரில் 10 இவ்வளவுதான் இருக்கிறது. மத்திய அரசு நிதி தராமலேயே தமிழ்நாடு எவ்வளவு தூரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். கல்வியில், ஐ.டி துறையில், பொருளாதாரத் துறையில் என அனைத்து துறைகளிலும் முன்னேறி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு கல்வி, சமூகநீதி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களுக்குள் வரும். மற்ற மாநிலங்கள் குறிப்பிட்ட எதாவது ஒரு துறையில் தான் முன்னிலை வகிக்கும், மற்ற துறைகளில் பின்தங்கி இருக்கும். ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் 2020-2021ல் ஜிஎஸ்டி வரி வசூல் மட்டும் ரூ.69 ஆயிரத்து 121 கோடியாகும். இந்த நிதியில் தமிழ்நாட்டிற்கு திருப்பி கொடுத்தது எவ்வளவு? நாங்கள் கொடுத்த நிதியில் எங்கள் மாநிலத்திற்கு என்ன என்ன திட்டங்களை கொடுத்திருக்கிறீர்கள். அதற்கான பட்டியலை தருவீர்களா? பொத்தம் பொதுவாக உஜ்வாலா திட்டம் தந்தோம். குடிநீர் இணைப்பு தந்தோம் என்று வடஇந்தியாவில் பேசுவது போலவே பேசுகிறீர்கள். 2024 -2025ல் ஜிஎஸ்டி வரியாக ஒரு லட்சத்து 95 ஆயிரம் கோடி வாங்கியுள்ளீர்கள். இதுதவிர நேரடி வரியாக 2020-2021ஆம் நிதியாண்டில் ரூ. 61,122 கோடியும். 2024-2025ஆம் நிதியாண்டில் 2 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரி மூலம் கிடைத்துள்ளது. இவை இரண்டையும் சேர்த்து எங்களிடம் இருந்து எவ்வளவு நிதி வாங்கியுள்ளீர்கள். இந்த நிதியில் தமிழ்நாட்டிற்கு என்ன என்ன திட்டங்களை கொடுத்திருக்கிறீர்கள். இதுதான் கேள்வி. இதற்குதான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். அதற்கு பதில் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக நாங்கள் இந்த திட்டங்களை செய்துள்ளோம் என்று சொல்லக்கூடாது. மத்திய அரசுக்கு நிதி கொடுப்பதே நாங்கள்தான். பணம் கொடுப்பதே எங்களுக்கு திட்டங்களை வழங்குவதற்காகதான். ஒரு ரூபாய் கொடுத்தவர்களுக்கும், 10 ரூபாய் கொடுத்தவர்களுக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள். ஒரு ரூபாய் கொடுத்தவர்களுக்கு 5 ரூபாய், 10 ரூபாய் கொடுத்தவர்களுக்கு 50 பைசா என்று திட்டங்களை செய்தீர்கள். இந்த அநியாயத்தை தான் தமிழ்நாடு கேள்வி எழுப்புகிறது.
இதுபோக மறைமுக வரி என்ற ஒன்று உள்ளது. அதுவும் அதிகம் கொடுப்பது தமிழ்நாடுதான். பேஸ்ட், பிரஷ், ஷு எல்லாம் அதிகம் பயன்படுத்துபவர்கள் எல்லாம் தமிழர்கள்தான் அதிகம். மறைமுக வரி, நேர்முக வரி, ஜிஎஸ்டி வரி என அனைத்திலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஆனால் எங்கள் கல்விக்கு நிதி வழங்க மாட்டீர்கள். மெட்ரோ பணம் கேட்டால் தர மாட்டீர்கள். தூத்துக்குடி புயலுக்கு நிதி கேட்டால், உண்டியல் போடுங்க தட்டில் போடுங்க என்பீர்கள். பணம் கேட்டால் உங்கள் அப்பன் வீட்டு பணமா? என்று கேள்வி கேட்பீர்கள். ஆனால் நாங்கள் மட்டும் உங்களுக்கு தந்து கொண்டே இருக்க வேண்டும். இது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடியாகும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் தனிநபர் வருவாய் ரூ.93,514, பீகாரில் ரூ.60,337, ராஜஸ்தானில் ரூ.1,67,964. இந்த 3 மாநிலங்களையும் சேர்த்தால் ரூ.3.21 லட்சம் ஆகும். தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் ரூ.3,30,219 ஆகும். ஆக இந்த 3 மாநிலங்களையும் சேர்த்ததை விட அதிகமாகும். உங்களுக்கு வரிகட்டுவதற்காகவே பிறந்த தமிழர்களுக்கு பணம் கேட்டால் தர மாட்டீர்கள். உ.பி-காரர்கள் இந்தியர்கள் தானே என்று அவர்களுக்கு தருகிறீர்கள். சரி அந்த இந்தியன் என்ன செய்தான்? கேட்டால் தமிழர்கள் கொடுக்கப் பிறந்தவர்கள். உ.பி.யும், பீகாரும் வாங்கி கொண்டே இருப்பார்கள்.
நாட்டிலேயே அதிகம் ஏற்றுமதி செய்யும் மாநிலம் தமிழ்நாடாகும். தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 39 சதவீதம் ஆகும். சென்னையில் ஹுண்டாய், போர்டு, நிசான், டிவிஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் வரும் வருமானம் அதிகம். திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் இருந்து டெக்ஸ்டைல், க்ளோத் போன்ற தொழில்கள் உள்ளன. ராணிப்பேட்டையில் இருந்து தோல் பொருட்கள் ஏற்றுமதியாகிறது.. மதுரையில் இருந்து, திருச்சியில் இருந்தும், ஓசூரில் இருந்தும் வெளிநாடுகளுக்கு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரோட்டில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படி தமிழ்நாட்டின் எந்த பகுதியாக இருந்தாலும் இந்தியாவுக்கு வரிகொடுத்துக் கொண்டு அந்நிய முலதனத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்நிய செலாவணியை தந்து இந்தியாவை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி ஒரு விழுக்காடு கூட தருவது கிடையாது. கேட்டால் தமிழர்களுக்குள் சண்டையை மூட்டி விடுகிறீர்கள். தமிழ்நாட்டு மக்களிடம் சிண்டு முடியும் வேலையை செய்ய வேண்டாம். இதில் இருந்தே அவர்களுக்கு தமிழ் மீது உள்ள பாசம், தமிழர்கள் மீது உள்ள அக்கறை தெரிகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.