பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், தாங்கள் நினைத்தால் விஜயுடன் கூட்டணிக்கு சென்றுவிடுவோம் என்று மிரட்டவே பண்ருட்டி ராமச்சந்திரன் அறிக்கை விட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாஜகவை நம்பினால் ஒருவர் எப்படி முட்டுச் சுந்திற்கு வருவார் என்பதற்கு ஓபிஎஸ் ஒரு எடுத்துக்காட்டு. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் தன்னெழுச்சியாக இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றுகூடியபோது, போலீசார் அவர்களை கலைக்காமல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததற்கு பின்னால் சசிகலா தான் இருந்தார். அன்றைக்கு ஆட்சியை இயக்கும் ரிமோட் கன்ட்ரோலாக சசிகலா இருந்தார். ஆனால் அந்த போராட்டம் மோடிக்கு, பாஜகவுக்கு எதிராக மாறிக் கொண்டிருக்கிறபோது, போராட்டத்தை கலைக்க வேண்டும் என்று ஓபிஎஸ்-ஐ நிர்பந்தம் செய்தார்கள். அதனால் சட்டப்பேரவையில் சொன்னார் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மத்தியில் ஒசாமா பின்லேடன் வந்துவிட்டார் என்று. பாஜகவின் மொழியில் இஸ்லாமியர்கள் குறித்து ஓபிஎஸ் சொல்லிக்காட்டியபோது, ஓபிஎஸ் பாஜக பக்கம் சாய்கிறார் என்கிற சந்தேகத்தில் இருந்துவந்த சசிகலாவுக்கு, இது உறுதியாகிறது. இதனால் சசிகலா முடிசூட்டிக்கொள்ள முடிவு எடுக்கிறபோது, ஓபிஎஸ்-க்கு தன்னை இரண்டாம் கட்டமாக நடத்தினார்கள் என்று ஆத்திரம் ஏற்பட்டது. அதற்கு பின்னர் நடந்தது நமக்கு தெரியும். ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆலோசனைப்படி தான் தர்மயுத்தம் செய்தார்.
பாஜகவின் பக்கம் முதல் பணியாளாக அவர்தான் சாய்ந்தார். விசுவாசத்தில் உன்னைவிட நான் பெரிய ஆள் என்று எடப்பாடி பழனிசாமியும் பாஜகவின் பக்கம் சாய்ந்தார். சசிகலாவின் சரித்திரத்தையே எடப்பாடி பழனிசாமி முடித்து வைப்பதற்கு, கோடாநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்து, காவலாளிகளை கொன்று தீர்த்து, ஆவணங்களை கைப்பற்றுகிற அளவுக்கு எக்ஸ்ட்ரீமாக சென்றார். பாஜக தன் பக்கம் திரும்பி பார்க்காதா? என்றுதான் கடைசி வரை கேட்டார். பாஜகவின் கடைக்கண் பார்வை படவில்லை என்ற உடன், மத்திய அரசு கல்விக்கு நிதி தரவில்லை என்று சொல்கிறார். ஒட்டுமொத்தத்தில் பாஜகவை நம்பி தன்னுடைய அரசியல் எதிர் காலத்தை ஒட்டுமொத்தமாக இழந்து நிற்கிறார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு பக்கத்தில் நின்று என்.டி.ஏ கூட்டணியை வலிமைப்படுத்துவோம் என்று கையை தூக்கினார். பின்னர் மோடிக்கே தெரியாமல், அவரை கை கழுவிவிட்டு வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து பேசாமல், ஸ்டாலினை எதிர்த்து பேசினார். மக்கள் அவரை நம்ப மறுத்துவிட்டார்கள்.
தற்போது அதிமுகவை விட்டால் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வேறு கதிமோட்சம் கிடையாது. அதிமுக ஆதரவு இருந்தால்தான் தற்போது இருப்பதை விட கொஞ்சம் கூடுதலாக வெற்றி பெறுவதற்கு வர முடியும் என்கிற நிலைமைக்கு பாஜக வந்துவிட்டது. அப்போது எடப்பாடி இருந்தால்தான் நமக்கு அதிமுக ஆதரவு இருக்கும். ஓபிஎஸ்-ஐ நம்பி ஒரு பயனும் இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டனர். ஓபிஎஸ்-க்கு உள்ள முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை பெறுவதற்காக தான், அதே சமுதாயத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவராக கொண்டுவந்தனர். பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ், மட்டுமின்றி டிடிவி தினகரனுக்கும் தரவில்லை. ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், துரை வைகோ போன்ற செல்வாக்கு இல்லாத தலைவர்களுக்கு தான், பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 10 செகண்ட் பார்த்தால் போதும் என்று ஓபிஎஸ் காத்திருந்தார். உங்களை பார்க்கவே முடியாது என்று புறக்கணித்து விட்டார்கள். அதனால் வந்த கோபம் காரணமாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிக்கை வழியாக நாங்கள் நினைத்தால் விஜய் பக்கம் போய்விடுவோம் என்று மிரட்டிப் பார்க்கிறார்கள். ஆனால் விஜய் தரப்பில் சேர்த்துக்கொள்வார்களா? என கேள்வி எழுகிறது.
ஓபிஎஸ் கட்சியிலேயே தனது தனித்துவத்தை, செல்வாக்கை நிரூபிக்க முடியாதவர். அதற்கு காரணம் ஜெயலலிதா காலத்தில் அடக்கம் ஒடுக்கமாக இருந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி போன்று அவரால் வர முடியவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு என்ன வசதி என்றால் அவரை முதலமைச்சராக நியமித்துவிட்டு, சசிகலா சிறைக்கு சென்றார். அதனால் அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை சம்பாதிக்கும் பணத்தை தலைமைக்கு கப்பம் கட்ட தேவையில்லை. தாங்களே வைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் மட்டும் செலவு செய்தால் போதும் என்று அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் பண பலத்தோடு, பன்னீர்செல்வத்தால் மோத முடியவில்லை. இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் எடப்பாடி ஒருபடி மேலே வந்துவிட்டார். இருவரும் தாமாக உருவாகிய தலைவர்கள் அல்ல. உருவாக்கப்பட்ட தலைவர்கள். இதில் எடப்பாடி பழனிசாமியை விட, ஓபிஎஸ் பலவீனமாக இருக்கிறார். தன்னுடைய சாதி வாக்குகளை கடந்து கட்சி செல்வாக்கிற்கு ஓபிஎஸ்க்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. அதனால் ஓபிஎஸ்-ஐ நம்பியவர்கள் எல்லாம் அரசியலில் அனாதைகளாக, போகும் இடம் தெரியாமல் உள்ளனர். தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தில்தான், ஓபிஎஸ் எந்த நிபந்தனையும் இன்றி வருவதாக சொன்னாலும் எடப்பா ஏற்க மறுக்கிறார். தன்னை நம்பி வந்தவர்களுக்கு மட்டுமாவது பொறுப்பு கொடுங்கள் என்று சொல்கிறார். ஆனால் அவரை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை.
பண்ருட்டி ராமச்சந்திரன் அறிக்கைவிட்ட பிறகும் ஓபிஎஸ்-ஐ வரவேற்பதாக அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இருந்து எதாவது அழைப்பு வந்ததா? அவர்களும் அதிமுகவைதான் விரும்புகிறார்களே தவிர, ஓபிஎஸ்-ஐ அல்ல. விஜய் கட்சி, பாஜகவை கடைசி நேரத்தில் கழட்டிவிட்டு அதிமுக நம்மோடு வரவேண்டும் என்று காத்திருக்கின்றனர். அப்போது குறுக்கே ஓபிஎஸ் வந்தால், எடப்பாடி பழனிசாமி நம் பக்கம் வராமல் போய்விடுவார் என்று தவெக அச்சப்படுகிறது. எம்ஜிஆர் வளர்த்த கட்சியை, ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை, எடப்பாடி பழனிசாமி சர்வநாசமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று கட்சியினர் இடையே வேதனை உள்ளது. பகையாளியான பாஜக உடன் கூட சேருகிறார்கள். ஆனால் பங்காளியான ஓபிஎஸ், டிடிவியை ஒரு பொருட்டாக கருதவில்லை என்கிற கோபம் கட்சியினருக்கு உள்ளது. ஒன்றுபட்ட அதிமுக சாத்தியமில்லை என்கிறபோது, அவர்களுக்கு வெற்றி சாத்தியமில்லை என்று தெரியும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்படலாம். அதில் எடப்பாடி தலைமை பொறுப்பில் இருந்து தூக்கிவீசப்படலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.