மருத்துவர் ராமதாசிடம், அன்புமணி இறங்கி செல்லாவிட்டால் 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்காக போராடிய ஒரு கட்சி, கடைசியில் தன்னை இழந்துவிடுகிற நிலைமைதான் ஏற்படும் என்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பழ.கருப்பையா வேதனை தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் குறித்தும், தனது நேர்காணலை ராமதாஸ் பேட்டியின் போது சுட்டிக்காட்டியது குறித்தும் பழ.கருப்பையா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- தந்தையிடம் தோற்பது தவறு இல்லை என்று நான் புறநானூறு போன்ற இலக்கியங்களை சுட்டிக்காட்டி நேர்காணல் நேர்காணல் அளித்திருந்தேன். அதை சுட்டிக்காட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அது பெருமைக்குரிய விஷயமாகும். அன்புமணி மீது நாம் எவ்வளவு அன்பு செய்தோம். அவரை பெருமைப்படுத்தினோம். மந்திரியாக்கினோம். ஆனால் அவர் நம்மை எதிர்க்கிறான் என்கிறபோது மருத்துவர் ராமதாசுக்கு கோபம் வருகிறது. அன்புமணியும் தகுதியான நபர்தான். அவர் ஒன்றும் குறைந்தவர் அல்ல. ஒரு காலத்தில் ராமதாஸ், என்னுடைய குடும்பம் அரசியலில் ஈடுபடாது. நான் அதிகாரத்திற்கு வர மாட்டேன், என்னுடைய குடும்பத்தினரும் வர மாட்டார்கள் என்று சொன்னார். அதில் அவர் பிறழ்ந்துவிட்டதாக வெகு காலம் ராமதாஸ் விமர்சிக்கப் பட்டார். அவர் சொன்னது போல அவர் பதவிக்கு வரவில்லை. ஆனால் குடும்பம் அரசியலுக்கு வந்தது. இவனை 35 வயதில் மந்திரியாக ஆக்கிவிட்டேனே என்று கோபப்படுகிறார். அதற்கு என்ன பெரிய காரணம் என்றால், பாஜக கூட்டணியில் அன்புமணி இருக்கமாக இருக்கிறார் என்பதுதான்.
அன்புமணி டெல்லிக்கு போனார். பாஜகவினரோடு பழகினார். அவருக்கு பல சிக்கல்கள் உள்ளன. ஆகாவே நாம் பாஜகவோடு அனுசரித்து போக வேண்டும் என்று நினைத்தார். அதனால் மள்ளுக்கட்டி பாஜக கூட்டணி வைத்தார். பாஜக கூட்டணியில் இருந்த பெரிய கட்சி பாமகதான். ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் நின்றாலும், அவர்களே யாரும் வெல்ல முடியவில்லை. பாஜகவோடு சேர்ந்தது தான் அன்புமணியின் மனைவி சவுமியா வெல்ல முடியாததற்கு காரணமாகும். ஏனென்றால் 1.50 லட்சம் சிறுபான்மை மக்களின் வாக்கு விழுகாமல் போய்விட்டது. 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர் தோற்று போனார். இந்த தவறு நடக்கக்கூடாது என்பதற்காக தான் அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் விரும்புகிறார். அப்படி சேர்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. ராமதாஸ் 10.5 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறபோது, தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன்பாக எடப்பாடி அறிவிக்கிறார். இதுபோன்ற ஒரு முடிவை எடப்பாடி எடுப்பது என்பது எளிதானது கிடையாது. இன்றைக்கு அது நீதிமன்றத்தில் கேள்விக்குறியாக உள்ளது வேறு. ஆனால் செய்தாரா? என்றால் எடப்பாடி செய்தார். ராமதாஸ் நாம் அதிமுகவோடு சேர்வதுதான் முறையானது என்று நினைக்கிறார். ஆனால் அன்புமணி பாஜகவை விட்டு வர மறுக்கிறார்.

பாஜகவினர் கையை முறுக்கி கூட்டணி அமைக்கிறார்கள். அன்புமணியின் கையை முறுக்கி இருப்பார்கள். அவர் பாஜக பக்கமே சேர வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அப்படி சேர்ந்ததால் சவுமியா அன்புமணி தோல்வி அடைந்துவிட்டார். இல்லா விட்டால் அவரது கட்சிக்கு 2 இடங்கள் வந்திருக்கும். விசிகவுக்கு 2 இடங்கள் வருகிறது. பாமகவுக்கு வரவில்லை என்றால் ராமதாஸ் வேதனைப்படுவாரா? இல்லையா? அப்படி கூட்டணி வைத்து சில இடங்களில் வென்றிருந்தால், ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார். எடப்பாடிக்கு வாக்களித்தவர்களில் பாதிபேர் வன்னியர்கள். அவர்கள் ராமதாஸ் கட்சி இல்லாமலேயே எடப்பாடிக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என்றால் எடப்பாடியை வன்னியர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். அன்புமணி அதற்கு நேர்மாறான முடிவை எடுத்து பாஜகவிடம் சென்று தோற்று மிகவும் மோசமாகிவிட்டது. இதுதான் சண்டைக்கு அடிப்படையாகும்.
எனது ஊடக பேட்டி வெளியான பிறகு, மருத்துவர் ராமதாஸ் ஐயா என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். எனது பேட்டியை கேட்டதாகவும், மிகவும் நன்றாக இருந்ததாகவும் தெரிவித்தார். நான் இயல்பாக தான் அந்த கருத்தை சொன்னேன். ஏனென்றால் ராமதாஸ் முதிர்ந்த அரசியல்வாதி. இன்றைக்கும் அன்புமணியை காரியங்களை செய்ய விடுகிறார். பெரிய முடிவுகளை எடுக்கிற போது தன்னுடன் கலந்துபேசி தன்னுடைய முடிவுப்படி எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அது நியாயமானது. அதோடு நீங்கள் மள்ளுக்கட்டி எடுத்த முடிவு பெரிய தற்கொலையாக பாமகவுக்கு முடிந்துவிட்டது. வெற்றி தராத முடிவை நீங்கள் எடுத்துவிட்டீர்கள். மொத்தமாக பாஜக உடன் கூட்டணி என்கிற போக்கில் அன்புமணி நடந்துகொள்கிறார் என்று கருதிதான் ராமதாஸ் அதை மறிக்கிறார். முகுந்தனை ஒரு பெரிய எதிர்ப்பாக, அன்புமணி கருத வேண்டியது இல்லை. அன்புமணி தற்போது நன்றாக தயாராகிவிட்டார். ஆனாலும் நான் சொல்கிறேன், தகப்பனிடம் தோற்பது தோல்வி ஆகாது. அதனால் அன்புமணி, நான் தொண்டனாக இருக்க வேண்டும் என்று என் தந்தை விரும்புகிறார். என்னைவிட சிறப்பாக நடத்த அவரே களத்திற்கு வருகிறபோது. அவர் நடத்தட்டும் நான் தொண்டனாக இருக்கிறேன் என்று நீங்கள் விலகி இருங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
தகப்பனிடம் தோற்பது தோல்வியே இல்லை. மாற்றானிடம் தோற்பதுதான் தோல்வி. ஸ்டாலினிடம் தோற்கக்கூடாது, மற்றவர்களிடம் தோற்கக்கூடாது. ஆனால், ராமதாசிடம் தோற்பது உங்களுக்கு தோல்வி கிடையாது. அது கொஞ்ச காலத்திற்கு பிறகு பெரிய நிகழ்ச்சியை ஏற்படுத்தி, உங்கள் தகப்பனாரை உருக வைக்கும். இதுதான் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு என்று எனக்கு தெரிந்த அறிவுக்கு ஏற்ப சொன்னேன். அது சரியான முடிவு. எப்படி சொல்லி இருக்கிறான் பார் கருப்பையா என்று சொன்னராம் மருத்துவர் ராமதாஸ். ராமதாஸ் இல்லாமல் பாமகவை நடத்தினால் மூலி ஆகி போய்விடும். ராமதாசை ஒதுக்கிவைத்துவிட்டு அவரது கொள்கைகளை நிறைவேற்றுவேன் என்று சொல்வது பெருமையான சொல் அல்ல. அவரை வைத்துக்கொண்டு செயல்பட்டால் பிறகு உங்கள் பெருமை தானாக வளர போகிறது. தொண்டனாக இருக்கிறேன் என்று சொல்லுங்கள். 10 நாட்கள் கழித்து அவரே அழுதுவிடுவார். இப்போதே கண்கலங்குகிறார். தொண்டனாக இருங்கள். உலகம் சொல்லட்டும், அன்புமணியை கூப்பிடாமல் என்ன செய்கிறார் என்று… நீங்கள் கூப்பிட்டு போகாதே என்று சொல்வது பெருமை இல்லை. அதனால் ராமதாஸ் கோபப்படுகிறார். எல்லாவற்றையும் வெளியே வந்து சொல்கிறார்.
அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், அவர் ஏதோ முடிவு எடுத்துவிட்டார் என்று அர்த்தம் இல்லை. அன்புமணி இறங்கி பாமகவின் கடைசி தொண்டனாக இருக்கிறேன். ராமதாசின் கொள்கையை நிறைவேற்றத்தான் நான் இருக்கிறேன். அவரே நிறைவேற்றிக் கொள்கிறேன் என்றால் மகிழ்ச்சி. நான் பின்தொடர தயாராக இருக்கிறேன் என்று சொன்னால், கொஞ்ச நாளில் ராமதாஸ் நெகிழ்ந்து உடைந்து வா மகனே என்று அழைப்பார். நீங்கள் இறங்கி போவதின் மூலம் அவர் நெகிழ்ந்து போவார். நீங்கள் இறுக இறுக அவர் இறுகுவாரே தவிர, ஒரு காலத்திலும் அவர் இறங்கி வந்து நடந்துகொள்வார் என்று எனக்கு தெரிய வில்லை. நீங்கள் ராமதாசோடு மோதி வெல்லவே முடியாது. ராமதாசின் முகம் இல்லாமல் உங்களால் அந்த கட்சியை நடத்த முடியாது. நீங்கள் ராமதாசுடன் மோதி எல்லோரையும் கைக்குள் போட்டுக்கொண்டு கட்சியை நடத்த முயல்வீர்கள் ஆனால் இங்கே இருப்பவனுக்கு அய்யா இல்லையே என்று தோன்றும். அங்கே இருப்பவனுக்கு மகன் இல்லையே என்று தோன்றும். கடைசியில் கட்சியே நாசமாகிவிடும். 40 ஆண்டுகள் வன்னியர்களுக்காக போராடிய ஒரு கட்சி, கடைசியில் தன்னை இழந்துவிடுகிற நிலைமைதான் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன். முதலில் யார் இறங்க வேண்டும் என்கிற கேள்விதான் இருக்கிறது. மகன் தகப்பனிடம் தோற்பது தோல்வி அல்ல. ஆகாவே மகன் இறங்குவது தான் சிறந்தது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.