விஜய்க்கு 20 சதவீதம் வாக்குகள் இருப்பதாக ஊடகங்கள் போலியான பிம்பத்தை கட்டமைக்கிறார்கள் என்றும், இதன் காரணமாக அதிமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்று பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்தும், 3வது பெரிய கட்சியாக தவெக முன்னிலைப்படுத்தப் படுவதன் பின்னணி குறித்தும் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- இந்தியா டுடே – சீ ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் திமுக 36 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பு திமுக, அதிமுக, தவெக ஆகிய 3 கட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் திமுக தலைவர் ஸ்டாலின், இன்னமும் முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் பிரதானமாக இருக்கிறார்.
அடுத்த அடுத்த இடங்களில் எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் உள்ளனர். தமிழ்நாட்டை பொருத்தவரை 4 முனை போட்டிதான். சீமானும் களத்தில் பிரதானமான வேட்பாளராக உள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் 61 சதவீதம் மக்கள் தங்கள் எம்எல்ஏக்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மீது அதிகளவு புகார்கள் எழுகின்றன. அதனால் தான் இந்த கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கடந்த முறை வாங்கிய இடங்களை விட 10 முதல் 12 இடங்கள் குறையும் என்று கணித்துள்ளனர். அப்படி சரிந்தாலும் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆட்சியில் அமர்ந்துவிடுவார்கள் என்று சொல்லியுள்ளனர்.
இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்து உள்ளது. இது பாஜக, அதிமுக வாக்குகளை சேர்த்து வருவதாக நினைக்கிறேன். ஆனால் விஜய், சீமான் போன்றவர்கள் இளைஞர்களின் வாக்குகளை பெருமளவு பிரிக்கிறார்கள். எனவே அந்த வாக்கு சதவீதம் குறைவாகவே இருக்கும். விஜய், திமுக கூட்டணியின் வெற்றிக்கு உதவி செய்வதாக கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். விஜய், திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். விஜயை திமுகவை கடுமையாக விமர்சித்து பேசுகிறார். ஆனால் மறைமுகமாக திமுகவுக்கு உதவி செய்கிறார். விஜய் எடுக்கிற துப்பாக்கியின் டார்கெட் திமுக என்கிறார். ஆனால் அவருடைய ஃபையரிங் ரேஞ்சில் அதிமுக தான் மாட்டுகிறது. திமுக – அதிமுக இடையிலான வாக்கு சதவீதம் என்பது 3 முதல் 4 சதவீதம் தான் இருக்கும்.
திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கும்போதும் அந்த கட்சியின் வாக்கு வங்கி பெரிய அளவில் உயரவில்லை. அதனால் கருத்துக்கணிப்புகளில் திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறையும், வெற்றி பெற்றதற்கான வாக்கு வித்தியாசம் குறையும் என்று சொல்கிறார்கள். விஜய், திமுக அரசுக்கு எதிரான வாக்குகளை அதிமுகவிடம் இருந்து பிரிக்கிறார். அதேபோல் திமுகவிடம் இருந்து இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளையும் பிரிக்கிறார். அப்படி வாக்குகளை பிரித்து அவர் போட்டியை கடுமையாக்குகிறார். அப்படி வாக்குகளை எடுக்கிறபோதும் அவர் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் கிடையாது.
விஜயின் அரசியல் போக்கு, அவருடைய தன்மை, பங்களா அரசியல், பொதுவெளியில் வந்து மக்களை சந்திக்காதது போன்றவை அவர் அரசியலுக்கு பொருத்தமற்றவர் என்பதை காட்டுகிறது. எந்தவித பயிற்சியும் இல்லாமல் வந்த உடன் நான் முதலமைச்சர் ஆவேன் என்றால், இங்கு கட்சிகளில் உள்ள கிளைச் செயலாளர்கள், பூத் முகவர்கள், பொதுமக்கள் போன்றவர்களுக்கு எல்லாம் என்ன மரியாதை உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அவர் 20 சதவீத வாக்குகளை பெறுவார். முதல்வர் ஆகி விடுவார் என்பது படத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். நிஜத்தில் சரிபட்டு வராது.
234 தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினை பற்றி அவருக்கு தெரியுமா? கச்சத்தீவு பிரச்சினை பற்றி பேசினார். அதன் பின்னணி என்ன என்று விஜய்க்கு தெரியுமா? வடஇந்திய ஊடகங்கள் அண்ணாமலை, எடப்பாடியை விட பெரியவர் என்கிற பிம்பித்தை கட்டமைத்தார்கள். அதேபோல் விஜய்க்கு பொய்யான பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அதனால் பாதிக்கப்பட போவது அதிமுகதான்.
எடப்பாடி பழனிசாமி, விஜயை வைத்தும், விஜய் இல்லாமலும் இரு திட்டங்களை வைத்திருந்தார். விஜய் கூட்டணிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்று பேருந்தை எடுத்துக் கொண்டு 125 தொகுதியில் பிரச்சாரம் செய்துவிட்டார். திமுகவை பொருத்த வரை ஸ்டாலின் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் கவனம் செலுத்துகிறார். பீகாரில் போய் இந்தியா கூட்டணிக்கு வெற்றிக்கு நம்பிக்கை தெரிவிக்கிறார். விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மாநாடு போட்டு 9 நாட்கள் ஆகிவிட்டது. எவ்வளவு நாள் லீவு?
வாக்கு திருட்டு போய்விட்டது என்று ராகுல்காந்தி தெரு தெருவாக சுற்றிக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பும் அவர், அது குறித்து ஒரு வார்த்தை பேசவிலலை. மாநாட்டிற்கு விஜய் வந்த உடனேயே சாரை சாரையாக கூட்டம் வெளியேறியது. விஜய், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் திமுகவை எதிர்க்க காரணம் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதாகும். ஒரு நேரத்தில் ஒரு எதிரிதான் இருக்க முடியும். ஒரே நேரத்தில் திமுகவையும், அதிமுகவையும் வீழ்த்த விஜயால் முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.