தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் திமுக கூட்டணி முதலிடத்தில் வலுவாக இருப்பதாகவும், இரண்டாவது இடத்திற்கு அதிமுக மற்றும் தவெக இடையே போட்டி நிலவுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.


தமிழக அரசியல் நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- சமீபத்திய சர்வே முடிவுகளில் விஜய்க்கு 28 சதவீதம் வாக்குகள் இருப்பதாக சிலர் சொல்கின்றனர். நான் களத்திற்கு போய்விட்டு வந்து சராசரியாக சொல்வது சில இடங்களில் அவருக்கு சில இடங்களில் 15 சதவீதம் இருக்கிறது. சில தொகுதிகளில் 30 சதவீதத்திற்கும் மேலாகவும் உள்ளது. சராசரியாக விஜய் 20 சதவீதம் வாக்குகளில் வந்து நிற்க வாய்ப்பு இருப்பதாகவே தொடர்ந்து சொல்லி வருகிறேன். கரூர் சம்பவத்திற்கு பின்னரும் விஜய்க்கு ஒரே சதம்வீதம் வாக்குகள் தான் வருகிறது. இனிமேல் அது மாறுவதற்கு வாய்ப்பு கிடையாது. அடுத்தபடியாக சில கூட்டணி கட்சிகள், சில முகங்கள் விஜயிடம் செல்கிறபோது இன்னும் ஓரிரு சதவீதம் பண்ணலாம். ஆனால் அது வெற்றி பெறுவதற்கு போதாது. விஜய்க்கு, அதிமுக வாக்குகள் பெரிய அளவில் செல்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் திமுகவுக்கு செல்லும் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்களின் வாக்குகள் தான் விஜய்க்கு பிரிய போகிறது என்று தர்க்கப்பூர்வமாக பேசுகிறார்கள்.
அதேநேரத்தில் திமுகவுக்கு எப்போதும் வாக்களிக்க கூடியவர்கள் திடீரென விஜய்க்கு மாற மாட்டார்கள். திமுக மக்களவை தேர்தலில் 47 சதவீதம் வாங்கிய நிலையில், 7 சதவீதம் போனாலும் அவர்களுக்கு 40 சதவீதம் வாக்குகள் வரும். ஆனால் அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள் திமுக எதிர்ப்புக்காக விஜய் பக்கம் திரும்பினால், 14 சதவீதம் கூட போகலாம். என்னுடைய கணக்குப்படி திமுகவிடம் 6 சதவீதம், அதிமுகவிடம் 12 சதவீதம் என மொத்தம் 18 சதவீதம் வாக்குகள் விஜய்க்கு போகும். மற்றபடி சீமானிடம் இருந்து கொஞ்சம், புது வாக்காளர்கள் என்று 20 சதவீதம் வாக்குகளை தொடுவார். விஜயால் பாதிப்பு அதிமுகவுக்கு தான்.

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் கணக்கு என்பது அதிமுகவினருக்கே புரியவில்லை. ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் போன்றவர்கள் இல்லாமல் அதிமுகவால் வெற்றி பெற முடியாது முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், பாஜகவுக்கு தெரிகிறது. இம்முறை நான்கு முனை போட்டியில் நாம் பின்னடைவை சந்திக்க போகிறோம். 3வது இடத்திற்கு கூட போவோம் என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி நம்ப மறுக்கிறார். அவர் இன்னும் சர்வே எடுத்து 153 இடங்கள் வெற்றி பெறும். 123 இடங்கள் உறுதி என்று சில புள்ளி விபரங்களை வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
இதனை நீங்கள் கட்சித் தொண்டர்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தலாம். ஆனால் அவருக்கு சுய உணர்வு என்று ஒன்று இருக்கும். அதற்கு தெரிய வேண்டும் அல்லவா? பல டீம்கள் சர்வே எடுக்கிறார்கள். அவற்றில் எல்லாம் அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்ல வாய்ப்புகள் உள்ளதாக முடிவுகள் வருகிறது. இதை தெரிந்தும் எடப்பாடி பழனிசாமி செய்கிறார் என்றால்? அவர் எதிர்க்கட்சி தலைவராகவே இருந்து விட்டு போகிறேன். கட்சி மட்டும் என்னுடைய கைக்குள் இருக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் என்றுதான் எண்ண தோன்றுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றால், எடப்பாடி பழனிசாமி என்கிற ஒரு நபரை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அகற்றிவிட்டு, கட்சியை முழுமையாக யாராலும் கைப்பற்றிவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட நபரின் தலைமையில் பாதி பேரை தான் இழுக்க முடியும். மீதி பேர் எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பதாக தான் சொல்வார்கள். அப்போது கட்சி பிளவுதான் படும். அப்போது கட்சியை எப்படி வளர்க்க முடியும்? இவ்வளவு நாள் எடப்பாடி பழனிசாமியை நீக்காமல் இருப்பதற்கு காரணமும் அதுதான்.
செங்கோட்டையனுடன் 6 பேர் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. காரணம் கட்சியில் மேலும் ஒரு பிளவு ஏற்பட வேண்டாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். திமுக மீதான அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்தனர். அங்கே விஜய் குறுக்கே வந்துவிட்டார். அவரை தாண்டி, எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைத்து அறுவடை செய்ய முடியாமல் திணறுகிற இடத்தில் அதிமுக உள்ளது.

அதிமுகவை பலவீனப்படுத்துவது பாஜகவின் விருப்பமாக இருக்காது. இல்லாவிட்டால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்களை அழைத்து பேச மாட்டார்கள். அதிமுகவை பலவீனப்படுத்தி தலைமை கைப்பற்ற வேண்டும் என்பது அண்ணாமலை உள்ளிட்ட சிலரது விருப்பமாக இருக்கலாம். தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தும் வேலையை இதுவரை பாஜக செய்யவில்லை. ஒருவேளை அவர் ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களை சேர்க்காவிட்டால் அவருடைய விருப்பப்படியே விட்டுவிடுவார்கள்.
பிப்ரவரி மாத வாக்கில் விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று பலரும் சொல்கின்றனர். விஜய், தன்னுடைய தலைமையில் தான் கூட்டணி அமைப்பார். அவருக்கு திமுகவை அழிக்க வேண்டும். ஆனால் தன்னுடைய தலைமையில் தான் திமுகவை அழிக்க வேண்டும் என்கிறார். விஜயகாந்த், அதிமுக உடன் கூட்டணி சென்றதால் அரசியல் வாழ்க்கை முடிந்துபோனது. அதேபோல் விஜய் அதிமுக உடன் சென்றால் அவருடைய அரசியல் வாழ்க்கையும் முடிந்துபோகும்.

திமுக கூட்டணிக்கு பல்வேறு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ள நிலையில், அவர்களால் தொகுதி பங்கீட்டை சரியாக நடத்தவே முடியும். கலைஞர் 140 தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார். ஸ்டாலின் குறைந்தபட்சம் 160 இடங்கள் குறையாமல் நிற்கலாம் என்கிற முடிவுக்கு வரலாம். பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு வேறு வழியில்லை. விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு ஓரிரு இடங்கள் கூடுதலாக தர வேண்டிய கட்டாயம் உள்ளது. சில விஷயங்களில் சமாதானப்படுத்தி விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். தற்போதைய நிலையில் அரசுக்கு எதிரான மனநிலை இருக்கிறது. ஆனால் அது திமுகவை தோற்கடிக்கும் அளவுக்கு இல்லை.
அதேபோல் எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்கிற இடத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. அவர்கள் மூன்றாக பிரிந்து நிற்கிறார்கள். மும்முனை போட்டி வரப் போகிறது. தற்போது திமுக முதல் நிலையில் உள்ளது. இரண்டாவது இடத்திற்கு ஆங்காங்கே நகர்ப்புறங்களில் விஜயும், கிராமப்புறங்களில் அதிமுகவும் வருவார்கள். முக்கிய தொகுதிகளில் எல்லாம் அதிமுக முந்திவிடும். அதிமுக வேட்பாளர்கள் பலவீனமாக இருக்கும் இடங்களில் தவெக முந்த வாய்ப்பு உள்ளது. நான்கு முனை போட்டியில் நாம் தமிழர் 4வது இடத்தை பிடிக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


